திங்கள், 12 நவம்பர், 2018

கஜ புயல் ..மீனவர்கள் யாரும் நவ. 15 வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

tamil.indianexpress.com  :கஜ புயல் எப்போது கரையை கடக்கும்? வானிலை மையம் முக்கிய தகவல்! மீனவர்கள் யாரும் நவ. 15 வரை கடலுக்கு செல்ல வேண்டாம்
கஜ புயல் நாகை -சென்னை இடையே 15 ஆம் தேதி கரையை கடக்கும், அந்த நேரத்தில் கனமழ்ழை பெய்யும்  என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கஜ புயல் : தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது நேற்று காலை வலுப்பெற்று புயலாக மாறியது. இதற்கு கஜ புயல் என பெயரிடப்பட்டுள்ளது.   இந்த புயல் குறித்த பேச்சு பொதுமக்களிடம் பெருமளவில் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில்  புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு விரைவுப்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த  சென்னை வானிலை மைய இயக்குநர், பாலச்சந்திரன்கஜா புயல் நாகை -சென்னை இடையே 15 ஆம் தேதி கரையை கடக்கும் என்று கூறியுள்ளார்.
பேட்டியில் அவர் பேசியதாவது, “  கஜ புயல் தற்போது , சென்னைக்கு தென் கிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 880 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 2 நாட்களில் வட மாவட்டங்களை நோக்கி நகர்ந்து, நாகை -சென்னை இடையே 15 ஆம் தேதி கரையை கடக்கும்.

இதனால், வட தமிழகத்தில் சில பகுதிகளில், வரும் 15 ஆம் தேதி மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும்.  தென் தமிழகத்தின் ஒரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும். கஜ புயல் காரணமாக தஞ்சை,திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் மணிக்கு 80-90 கி.மீ., வேகத்தில் காற்று வீசுக்கூடும். சில சமயங்களில் 100 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்.
இந்த பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் மீனவர்கள் யாரும் நவ. 15 வரை கடலுக்கு செல்ல வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கஜ புயலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதே போல், கஜ புயல், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி அளித்துள்ளார். திருமங்கலத்தில் பேசிய அவர், சிவப்பு நிற எச்சரிக்கையால் மக்கள் பீதி அடைய தேவையில்லை எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக