செவ்வாய், 16 அக்டோபர், 2018

படத்தொகுப்பாளர்களுக்கு உதவும் இளையராஜா

படத்தொகுப்பாளர்களுக்கு உதவும் இளையராஜாமின்னம்பலம்:  நிதி சிக்கலில் இருக்கும் தென்னிந்திய படத் தொகுப்பாளர் (எடிட்டர்) சங்கத்துக்கு இளையராஜா உதவுகிறார்.
1000 படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்ட இளையராஜா எண்ணில் அடங்கா பாடல்களை தந்தவர். 75 வயதைக் கடந்துவிட்டவர். தற்போதும் படங்களுக்கு இசையமைத்து வரும் இளையராஜா, பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், நிதி சிக்கலில் இருக்கும் தென்னிந்திய படத் தொகுப்பாளர் (எடிட்டர்) சங்கத்துக்கு இளையராஜா உதவுகிறார். இதுகுறித்து அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 1991ஆம் ஆண்டு தென்னிந்திய படத் தொகுப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் படத் தொகுப்பாளர்கள் சங்கத்துக்குச் சொந்தமாக இடம் வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் இளையராஜாவை அணுகியபோது, ஓர் இசை நிகழ்ச்சி நடத்தி சங்கத்திற்கு இடம் வாங்கிக் கொடுத்தார் இளையராஜா. அதை இன்று வரை நாங்கள் மறக்கவில்லை.

இன்றைய தொழில்நுட்ப தாக்கத்தால் படத் தொகுப்பாளர்கள் சங்கம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மீண்டும் இளையராஜாவின் கவனத்துக்குக்கொண்டு சென்றோம். அவர் மிகுந்த தாயுள்ளதோடு எங்கள் சங்கத்திற்கு பொருள் உதவி செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்காக எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு உதவிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் நலனுக்காக ‘இசை ராஜா 75’ என்ற தலைப்பில் பிரமாண்ட இசை விழாவை வரும் ஜனவரி மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக