செவ்வாய், 16 அக்டோபர், 2018

சபரிமலை விரதம்: பெண்ணுக்கு மிரட்டல்!

சபரிமலை விரதம்: பெண்ணுக்கு மிரட்டல்!மின்னம்பலம்: சபரிமலையில் ஐயப்பனை வணங்க 41 நாட்கள் விரதமிருந்து வருவதாகத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட பெண், தன்னை மிரட்டும் விதமாகப் பலரும் கருத்துகளை வெளிப்படுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் ரேஷ்மா நிஷாந்த். 32 வயதான இவர், கல்லூரியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர், தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 14) இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு தகவலையும் தனது புகைப்படத்தையும் பதிவிட்டார். சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்ல அனுமதியளித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, தான் 41 நாட்கள் விரதத்தைத் தொடங்கியதாகத் தெரிவித்தார்.

கடந்த 12 ஆண்டுகளாக, ஒவ்வோர் ஆண்டும் மண்டல காலத்தில் 41 நாட்கள் தான் விரதமிருந்து வருவதாக ஃபேஸ்புக் பக்கத்தில் கூறினார். “பெண்கள் சபரிமலைக்குச் செல்லக் கூடாது என்றதால், நான் ஒவ்வோர் ஆண்டும் விரதம் மட்டும் இருந்து வந்தேன். தீர்ப்புக்குப் பிறகு, சபரிமலை செல்வதற்காக விரதம் இருக்கிறேன். எனது முடிவுக்குக் குடும்பத்தினரும் உறவினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்” என்று நீண்டது அவரது பதிவு. வருங்காலத்தில் சபரிமலைக்கு நிறைய பெண்கள் வருவார்கள் என்றும் அவர் கூறினார்.

ரேஷ்மாவின் முடிவுக்கு எதிராகப் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி, ரேஷ்மாவிடம் தெரிவித்துள்ளனர் அவரது நண்பர்கள். அதில் சிலர், ரேஷ்மாவின் சபரிமலை பயணத்தைத் தடுக்க முனைவோம் என்று மிரட்டல் விடுத்ததையும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதுபற்றிப் பேசிய ரேஷ்மா, ஃபேஸ்புக் தகவலால் தன் மீது புகழ் வெளிச்சம் பாய்ந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
“என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் எந்தவித மிரட்டலையும் நான் பார்க்கவில்லை. ஆனால், என்னுடைய நண்பர்கள் பல்வேறு பக்கங்களில் அவ்வாறு பார்த்ததாகத் தெரிவித்தனர். மோசமான வார்த்தைகளால் என்னை அர்ச்சித்திருந்ததாகக் கூறினர். அதன்பின், அவற்றை நானும் பார்த்தேன். சபரிமலையில் நான் கால் வைத்தால், உயிரோடு வீடு திரும்ப முடியாது என்று கூடச் சிலர் கூறியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார் ரேஷ்மா.
தனக்கெதிரான பதிவுகள் குறித்துப் பேசியுள்ள ரேஷ்மா, மாதவிடாய் என்பது சிறுநீர், மலம் கழிப்பதைப் போன்றது தான் என்று கூறியுள்ளார். “12 ஆண்டுகளுக்கு முன்னர், கோழிக்கோடில் உள்ள சில பெண்கள் சபரிமலை மண்டல காலத்தில் விரதம் இருப்பது பற்றிக் கேள்விப்பட்டேன். அதனை நானும் பின்பற்றத் தொடங்கினேன். மாதவிடாய் பிரச்சினைகளினால், ஆரம்ப காலத்தில் 41 நாட்கள் விரதத்தை 55 நாட்கள் தொடர்ந்திருக்கிறேன். ஆரம்ப நாட்களில், மாதவிடாயை அசுத்தமாகவே கருதினேன். இப்போது எனது சிந்தனைகள் மாறிவிட்டன. இப்போது, மாதவிடாய் காலத்தையும் சேர்த்து 41 நாட்கள் மட்டுமே விரதமிருந்து வருகிறேன்” என்று ரேஷ்மா கூறியுள்ளார்.
தனது முடிவுகளுக்குக் கணவர் நிஷாந்த் உறுதுணையாக இருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதத்திலும் முதல் ஐந்து நாட்கள் சபரிமலையில் நடை திறக்கப்படும். துலாம் எனும் மலையாள மாதம் பிறப்பதையொட்டி, நாளை மாலை சபரிமலை கோயில் திறக்கப்படவுள்ளது. இந்த நிலையில், இன்று (அக்டோபர் 16) திருவாங்கூர் தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு பந்தளம் அரச குடும்பத்தினர் மற்றும் தந்திரிகள் குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நடைபெறும் பட்சத்தில், முக்கிய முடிவுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக