திங்கள், 1 அக்டோபர், 2018

புதிய தலைமை செயலக வழக்கு ... ஜெயலலிதாவின் கலைஞர் துவேஷத்தின் மற்றொரு அடையாளம்


தினகரன் :சென்னை: புதிய தலைமை செயலக கட்டிடம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, வாபஸ் பெறுவதாக திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர்  விசாரணை ஆணையம் கடந்த 2011ல் அமைக்கப்பட்டது.  இந்த விசாரணை ஆணையம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, விசாரணை ஆணையத்திற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை ஆணையம் அமைப்பது என்பதே, கண்துடைப்பு நாடகம்தான். விசாரணை ஆணையத்தினால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது? உயர் நீதிமன்றம் விசாரணைக்கு தடை விதித்த பிறகும் ஏன் ஆணையம் தொடர்ந்து செயல்படுகிறது. மக்கள் பணம் தானே வீணாகிறது. எனவே, இந்த விசாரணை ஆணையத்தை மூட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து நீதிபதி ரகுபதி, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.  இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் மீண்டும் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, புதிய தலைமை செயலக கட்டிட விவகாரம் தொடர்பான ஆணையம் கலைக்கப்பட்டது என்றும், இந்த கட்டிட விவகாரம் தொடர்பான ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தார்.
வழக்கு நேற்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக சார்பில் வக்கீல் அருண் ஆஜராகி, திமுக தொடர்ந்த வழக்குகளையும், அதுதொடர்பான இடை மனுக்களையும் வாபஸ் பெறுவதாக தெரிவித்து மனுத்தாக்கல் செய்தார். அதற்கு அட்வகேட் ஜெனரல் வர உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, திமுக சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, வழக்கை வாபஸ் பெற மனுத் தாக்கல் செய்துள்ளோம் என்றார். அதற்கு நீதிபதி, அட்வகேட் ஜெனரல் திங்கள்கிழமை வருவதாக தெரிவித்துள்ளார். எனவே, வழக்கை திங்கள் கிழமைக்கு தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக