திங்கள், 1 அக்டோபர், 2018

உயிரிழந்த மூதாட்டியின் உடலை குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற ஊழியர்கள்

tamilthehindu:  தஞ்சையில் உயிரிழந்த மூதாட்டியின் உடலை மனிதத் தன்மையற்ற முறையில் மாநகராட்சி குப்பை வண்டியில் கொண்டு சென்ற செய்தி வைரலாகி வருகிறது.
தஞ்சாவூரில் காந்தி சாலையில் கல்லணை கரையோரம் மூதாட்டி ஒருவர் ஆதரவற்ற நிலையில் வசித்து வந்துள்ளார். திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் அவர் உயிரிழந்தார். மூதாட்டிக்கு யாரும் உறவினர்கள் இல்லை, ஆதரவற்றவர் என்பதால் அவர் உடல் சாலையிலேயே கிடந்தது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் இதுகுறித்துப் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவரது உடலை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அமரர் ஊர்தி கேட்டு மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் அமரர் ஊர்த்தி இல்லை எனக் கைவிரித்து, குப்பை அள்ளும் வாகனத்தை அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் மூதாட்டியின் உடலைப் போர்வையால் சுற்றி குப்பை வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இதை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்து வலைதளத்தில் போட அது வைரலாகி அனைவராலும் விமர்சிக்கப்படுகிறது.

அனாதரவாக இறப்பவர்களும் மனிதர்களே. ஒரு காலகட்டத்தில் குடும்ப உறவுகளுடன் மதிப்புடன் வாழ்ந்த அவர்களை மனிதத்தன்மையுடன் நடத்த வேண்டும். இது அப்பட்டமான மனித உரிமை மீறல். தமிழகத்தில் இதுபோன்று நடப்பது இது முதல்முறை அல்ல.
 கடந்த மார்ச் மாதம் வேலூர் சோளிங்கரில் உயிரிழந்து உறவினர்களால் கைவிடப்பட்டு சாலையில் உயிரிழந்த முதியவர் ராஜாராம் (70) எனபவரது உடலை மாநகராட்சி குப்பை அள்ளும் ரிக்‌ஷாவில் கொண்டு சென்றனர். இந்த நிகழ்வும் வைரலாகி செய்தியானதை அடுத்து மாநில மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதே போன்று கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோயில் அருகே தண்ணீர் லாரி மோதி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரமாமணி (54) என்ற பெண் பக்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராமேஸ்வரத்தில் அமரர் ஊர்தி இல்லை என்பதால் உயிரிழந்த ரமாமணியின் உடலை ராமேஸ்வரம் நகராட்சிக்குச் சொந்தமான குப்பை அள்ளும் டிராக்டர் வண்டியில் கிடத்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மூன்று சம்பவங்களிலும் நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களின் மனிதத் தன்மையற்ற செயல் வெளிப்பட்டுள்ளது. இது குறித்த மாநில அளவிலான வழிகாட்டுதல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக