சனி, 20 அக்டோபர், 2018

தமிழிசை: பெண்பாடு முக்கியமில்லை, பண்பாடுதான் முக்கியம்!

தமிழிசை: பெண்பாடு முக்கியமில்லை, பண்பாடுதான் முக்கியம்!மின்னம்பலம் : இந்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்கு, பிற மதத்தினர் சமூக ஆர்வலர் என்ற பெயரில் செல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது எனத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்துப் பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல முற்பட்டுவருகின்றனர். இந்நிலையில், ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் வழிகளான பம்பை, நீலக்கல்லில் ஐயப்ப பக்தர்கள் கோயிலுக்குச் செல்லும் பெண்களை மறித்துப் போராட்டத்தில் ஈடுபடுவதால் அங்கு பதற்றம் நிலவிவருகிறது. இதற்கிடையே, தெலங்கானாவைச் சேர்ந்த தனியார் டிவி செய்திவாசிப்பாளர் கவிதாவும் கொச்சியைச் சேர்ந்த ரஹானா பாத்திமாவும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை கோயிலுக்குச் சென்றனர். அவர்களை உள்ளே அனுமதிக்காததால் இருவரும் ஊர் திரும்ப முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன், “இந்து மதத்தினரின் உணர்வுபூர்வமான வழிபாட்டுத் தலங்களுக்கு, இந்து மதத்தின் மீது நம்பிக்கையில்லாத பிற மதத்தினர் சமூக ஆர்வலர் என்ற பெயரில் செல்வதை ஏற்க முடியாது. மற்றொரு மதத்தைச் சார்ந்தவரின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுவது பிரச்சினைகளை அதிகரிக்கச் செய்யும்” என்று சென்னை வளரசவாக்கத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக நேற்று (அக்டோபர் 19) தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐயப்பன் கோயிலின் பன்னெடுங்காலமாக பழக்கப்பட்டு வரும் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். அங்குப் பெண்பாடு முக்கியமில்லை பழக்கப்பட்டு வரும் பண்பாடுதான் முக்கியம். இது மூட நம்பிக்கையல்ல, முடிவான நம்பிக்கை. இது தீர்க்கக்கூடிய நம்பிக்கையல்ல. தீர்க்கமான நம்பிக்கை” என்று தமிழிசை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக