மாலைமலர் :எம்.எல்.ஏ. கருணாஸ் மீது நடவடிக்கை
எடுப்பது குறித்து சபாநாயகர் தனபாலுடன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.
சண்முகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
சென்னை:
சமீபத்தில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வரை
அவதூறாக பேசியதாக எம்.எல்.ஏ. கருணாஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த
வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ் தற்போது நிபந்தனை ஜாமீனில்
வெளிவந்துள்ளார்.
கருணாசின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், அவர்
எம்.எல்.ஏ.வாக நீடிக்க வேண்டுமா? என பலரும் கேள்வி எழுப்புவதாக அமைச்சர்
ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அதிமுக
கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. பதவியில் உள்ள கருணாஸ்
முதல்வரை அவதூறாக பேசியது குறித்து நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தனபாலுடன்
ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சபாநாயகர் தனபாலுடன் தற்போது சட்டத்துறை மந்திரி சி.வி.சண்முகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஆலோசனை செய்துள்ளனர்.
இதுகுறித்து கருணாசுக்கு விரைவில் பதிலளிக்கப்படும் எனவும், அதன் பிறகு அவர் மீதான நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எம்.எல்.ஏ. கருணாசின் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே சமயம், கூவத்தூர் ரகசியங்களை தலைமை நீதிபதியிடம் தெரிவிக்க தயார் என கருணாஸ் கூறிவரும் நிலையில், ஒருவேளை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் விரைவில் கூவத்தூர் ரகசியம் குறித்து அவர் வெளியிடும் சூழல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக