சனி, 13 அக்டோபர், 2018

ஆந்திராவில் தமிழக காவலர் நீலமேக அமரன் கொலை!

ஆந்திராவில் தமிழகக் காவலர் கொலை!மின்னம்பலம் : தமிழக ஆயுதப்படைப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த நீலமேக அமரன் விசாகப்பட்டினத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் நீலமேக அமரன். இவர், ஆயுதப்படைத் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார். இன்று (அக்டோபர் 13), ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நக்கப்பள்ளி மண்டலம் வேம்பள்ளி சோதனைச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தார் நீலமேக அமரன். அப்போது, அங்கு காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பலொன்று நீலமேக அமரனைச் சாலையில் ஓட ஓட விரட்டி சென்று கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்தது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்படும் ஒரு கும்பல், மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விநியோகம் செய்து வந்ததைக் கண்டறிந்தனர் போலீசார். அந்த கும்பலைப் பிடிப்பதற்காக ஆந்திராவுக்கு சென்ற போலீசாருக்கு, அந்த கும்பல் இருக்கும் பகுதியை அடையாளம் காட்டுவதற்காக நீலமேக அமரன் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விசாகப்பட்டினம் மாவட்டம் நக்கப்பள்ளி பகுதியில் போலீசார் கைது செய்ய முயன்றபோது, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. அவர்களை போலீசார் விரட்டிச் சென்றபோது, வேம்பாடு சுங்கச் சாவடி அருகே திடீரென வந்த 8 பேர் கொண்ட கும்பல் நீலமேக அமரனைச் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த கொலையானது, தனியாருக்குச் சொந்தமான சுங்கச்சாவடி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆந்திர போலீசார், நீலமேக அமரனைக் கொடூரமாகக் கொலை செய்த கும்பலில் 4 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் ஆந்திர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக