சனி, 13 அக்டோபர், 2018

BBC : ரிலையன்சிடம் ரபேல் .. இந்துஸ்தான் நிறுவனத்தில் 3000 பேர் வேலை இழக்கிறார்கள்?

இந்திய பாதுகாப்பு அமைச்சராக ஒரு சொர்ணக்கா

ரஃபேல் ஒப்பந்தத்தை, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு
வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதையடுத்து, பொதுத்துறை
நிறுவனமான இந்துஸ்தான் ஏரனோட்டிக்ஸ் (HAL) நிறுவனத்தில் சுமார் 3000 பேர் வேலை இழக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக முன்னாள் தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் உள்ள விமானியவியல் நிறுவனத்தில் எத்தனை பேர் தங்கள் வேலையை தொடர்கிறார்கள் என்பதை பொருத்தும், தொழிற்சங்க தலைவர்களை பொருத்தும், எத்தனை பேர் வேலை இழப்பார்கள் என்று தெரியவரும்.
"இந்துஸ்தான் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் கிடைத்தால், ரஃபேல் திட்டத்திற்கு 3,000 ஊழியர்கள் ஈடுபடுவார்கள். ஆனால் இது மூடப்படாது" என்கிறார் பிபிசி இந்தியிடம் பேசிய அந்நிறுவன தொழிற்சங்கத்தின் முன்னாள் பொது செயலாளர் மற்றும் முன்னாள் ஊழியரான அனந்த பத்மனாபா.


பொது வெளியில் நிறுவனத்தை குறித்து பேசுவது, நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று ஊழியர்களை அந்நிறுவனம் எச்சரிக்க, சிலர் தங்களின் பெயர்களை குறிப்பிடாமல் பேசினர். "விமான தயாரிப்பில் முன் அனுபவம் இல்லாத தனியார் நிறுவனத்திடம் ரஃபேல் ஒப்பந்தத்தை அளித்தால், பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட உள்நாட்டு திறன்களை அது பாதிக்கும். மேலும் நிறுவனத்தின் வருவாய் மற்றும் திறன் பயன்பாட்டையும் இது பாதிக்கும்" என்று மற்றொரு முன்னாள் தொழிற்சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஊழியர் ஒருவர் கூறுகையில், "இந்துஸ்தான் நிறுவனத்தில் பணிபுரியும் திறமையானவர்களின் திறன்கள் வீணாகிவிடும்" என்றார்.
செப்டம்பரில் ஓய்வுபெற்ற இந்த பொதுத்துறை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டி. சுவர்ன ராஜூ கூறியதும், அங்குள்ள முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்கள் கூறுவதும் ஒன்றாகவே இருக்கிறது.
இந்துஸ்தான் பத்திரிகைக்கு பேட்டியளித்த ராஜூ, "மூலப்பொருட்கள் நிலையில் இருந்து, விமானப்படையில் முக்கியமானதாக விளங்கும் சுக்கோய்-30 நான்காம் தலைமுறை ரக போர் விமானத்தை இந்துஸ்தான் நிறுவனத்தால் தயாரிக்க முடியும் என்றால், நாம் என்ன பேசிக் கொண்டிருக்கிறோம்? நாம் கண்டிப்பாக எதையும் செய்திருக்க முடியும்" என்று கூறியிருந்தார்.
ஆனால், பிபிசி ராஜூவை தொடர்பு கொள்ள தொடர்ச்சியாக முயற்சித்த போது, அவர் அழைப்புகளை எடுக்கவில்லை.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இருந்தபோது, கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம், பா.ஜ.க தலைமையிலான ஆட்சியில் மாற்றப்பட்டது, பெரும் விமர்சனங்களை எழுப்பியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 108 விமானங்களை இந்துஸ்தான் நிறுவனம் தயாரிக்க இருந்தது. மீதமுள்ள 18 விமானங்களை டஸால்ட் விமானியல் நிறுவனம் நேரடியாக வழங்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
"டஸால்ட் மற்றும் இந்துஸ்தான் நிறுவனங்கள் பரஸ்பர வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அரசாங்கத்திடம் கொடுத்தனர். அந்த விவரங்களை பொதுவெளியில் வெளியிட கேளுங்கள். அதில் எல்லா விஷயங்களும் தெரியவரும். விமானங்களை நான் செய்தால், அதற்கு நான் உத்தரவாதம் தருவேன்" என்றும் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ராஜூ தெரிவித்திருந்தார்.
"இந்த மொத்த விவகாரமும் சர்ச்சையாகி உள்ளது. பல கேள்விகள் எழுந்துள்ளன. இது அரசியலாக்கப்பட்டது என்று கூட சொல்லலாம். ஆனால், பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமனே, ரஃபேல் விமானங்களை தயாரிக்க இந்துஸ்தான் நிறுவனத்தால் இயலாது என்று கூறியது நியாயமற்றது" என பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு ஊழியர் கூறினார். "ரஃபேல் விமானங்களை இந்துஸ்தான் நிறுவனம் தயாரிக்கும் திறன் குறித்து அவர் அப்படி கூறியதை எந்த ஊழியர்களும் பொறுத்துக் கொள்ள தயாராக இல்லை" என்கிறார் அனைத்திந்திய காங்கிரஸ் தொழிற்சங்க அமைப்பின் செயல் தலைவரான மகாதேவன்.
ஆனால், இந்துஸ்தான் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான டாக்டர் கிருஷ்ணதாஸ் நாயர் இந்த விவகாரத்தில் வேறுபட்ட கருத்தை முன்வைக்கிறார்.
பிபிசி இந்தியிடம் பேசிய அவர், "போர் ரக விமானங்களை தயாரிப்பதில் இந்துஸ்தான் நிறுவனத்திடம் இருக்கும் திறன் இந்தியாவில் வேறு எந்த நிறுவனத்திடமும் இல்லை. இந்துஸ்தான் நிறுவனமோ அல்லது வேறு பொதுத்துறை நிறுவனமோ, தனியார்துறை மற்றும் நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுடன் சேர்ந்து பணி செய்ய வேண்டும். எப்போதெல்லாம் பெரிய ஆர்டர்கள் வருகிறதோ, அப்போது கூட்டு முயற்சி எடுப்பது வழக்கம்தான். தனியார்துறையிடம் வேலை பிரித்துக் கொடுக்கப்படும்" என்றார்.
"யாராலும் செய்ய முடியாது. நான் மட்டும்தான் செய்வேன் என்பது முட்டாள்தனம்" என நாயர் தெரிவித்தார். நாயர் கூறியதை எளிமையாக சொல்ல வேண்டுமானால், தயாரிக்கும் திறன் இல்லாத ரிலையன்ஸிடம் ஒப்பந்தம் மட்டுமே உள்ள நிலையில், விமானங்களை தயாரிக்க இந்துஸ்தான் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ய முடியும்.
டஸால்ட் நிறுவனம் தயாரித்த மிரேஜ் 2000 ரக போர் விமானத்தை பராமரித்த மாதிரி, இதனையும் பராமரிக்கலாம்.
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனாவையடுத்து போர் ரக விமானங்களை தயாரிக்கும் நாடு இந்தியா. அந்தத் திறன் இந்துஸ்தான் நிறுவனத்திடம் மட்டுமே உள்ளது. இந்துஸ்தான் விமானியல் நிறுவனமானது இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவால் நிறுவப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக