வெள்ளி, 5 அக்டோபர், 2018

இருபது ரூபா டாக்டர்’ ஜெகன்மோகன் காலமானார்! ,, கண்ணீரில் மிதந்தத மக்கள் கூட்டம்

``அவரு பணம் சம்பாதிக்கல... மனங்களைச் சம்பாதிச்சாரு!’’ - `20 ரூபாய்’ டாக்டர் மரணம்
சுவரொட்டிvikatan -இரா.செந்தில் குமார் : மருத்துவர் ஜெகன்மோகனுக்குச் சொந்த ஊர், நெல்லை மாவட்டம், தென்காசி. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த கையோடு, சென்னை, மந்தைவெளி, ஆர்.கே.மடம் சாலையில் சிறிய கிளினிக் ஒன்றைத் தொடங்கி ஏழை, எளிய மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். மின்கட்டண உயர்வு, பணியாளர்களுக்குச் சம்பளம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடைசியாக அவர் பெற்ற அதிகபட்ச கட்டணம் இருபது ரூபாய்.
டாக்டர் ஜெகன்மோகன்“’இருபது ரூபா டாக்டர்’ ஜெகன்மோகன் இறந்துபோனார்’’ – சென்னை முழுவதும் காட்டுத் தீயாகப் பரவிய செய்தி நம் காதுக்கும் வந்து சேர்ந்தது. அதோடு அவரிடம் பேட்டிக்காக  ஒருமுறை பேசியபோது அவர் சொன்ன வார்த்தைகளும் சேர்ந்தே விழுந்தன. ‘குறைவாகக் கட்டணம் பெற்று சிகிச்சை அளிக்கும்  மருத்துவர்களைப் பற்றி கட்டுரை எழுதுறோம் சார்… உங்ககிட்ட ஒரு பேட்டி எடுக்கணும் எப்ப சார் வரலாம்’ என்று கேட்ட மறுகணமே, “நான் பேட்டி கொடுக்குற அளவுக்கு எல்லாம் பெருசா எதுவும் செய்திடல தம்பி, யாருக்காவது ஏதாவது மருத்துவ உதவி வேணும்னா சொல்லுங்க பண்ணிடலாம்’’ என்றவாறே அழைப்பைத் துண்டித்தார்.

ஒரேயொரு முறை தொலைபேசியில் பேசிய நமக்கே அவரின் மீது ஒரு மரியாதை உணர்வு இருக்கும்போது, அவரிடம் சிகிச்சை பெற்ற மக்களின் மனவெழுச்சி இப்போது எப்படி இருக்கும்?

மந்தைவெளியில் உள்ள அவரின் வீட்டை நோக்கிப்  பயணத்தைத் தொடங்கினோம். ஆர்.கே.மடம் சாலையில், “இங்க டாக்டர் ஜெகன்மோகன் வீடு எங்க இருக்குண்ணே” என ஓர் ஆட்டோ டிரைவரிடம் வழி கேட்க, “இப்பிடியே நேரா போய் ரைட்ல நாலாவது வீடு போப்பா, உன்னோடு சேர்த்து இதுவரை நானே ஆயிரம் பேருக்கு வழி சொல்லியிருப்பேன், தங்கமான மனுஷன் போய்ட்டாரப்பா, நம்ம எல்லோரையும் விட்டு” கண்கள் கலங்க வழி சொல்லி அனுப்பி வைத்தார் அவர்.

மழை பெய்து வானம் வெறிச்சோடிய நேரம், அவரின் வீட்டுக்கு முன்னால் மக்கள் கூட்டம் அலைமோதியது. வெளியே அவரின் இறப்புக்காக வைக்கப்பட்டிருந்த கட் அவுட்டைப் பார்த்து, வீட்டுக்குள் அவரைப் பார்க்க ஓடோடி வந்த மக்கள் ஏராளம். அவரின் புகைப்படத்தையே வெறித்துப் பார்த்து கண்கள் கலங்கி நின்ற தாய்மார்கள் ஏராளம். “கடைசியா டாக்டர் முகத்த ஒரேயொருமுறை பார்க்கலாம்னு ஓடி வந்தேன், பார்க்க முடியாமப் போயிடுச்சே’’ தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு அழுத பெண் ஒருவரை வீட்டாரும், அங்கு வந்திருந்தவர்களும் சமாதானம் செய்து ஓர் இருக்கையில் அமர வைத்தனர். சிறிதுநேர அமைதிக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பியவரிடம், “டாக்டரைப் பத்தி சொல்லுங்க அக்கா” என்று கேட்ட மறுகணமே  மீண்டும் அழத் தொடங்கினார் அவர். சிறிது நேரத்துக்குப் பின் அவரே பேசத் தொடங்கினார்,

பவானி“என் பேரு பவானி, வீட்டு வேலை செஞ்சுதான்பா பொழைக்கிறேன். காரக்கோட்டையில இருக்கு என் வீடு. வீட்டுக்காரர் இல்லை. ரெண்டு புள்ளைங்க. எட்டு வருஷமா டாக்டர் ஐயாகிட்ட வைத்தியம் பாக்க வர்றேன். பத்து ரூபாய்க்கு மேல ஃபீஸ் வாங்க மாட்டார். எனக்கு மாத்திரை மருந்து வாங்க அவரே பல முறை பணம் கொடுத்துருக்கார். அவரா காசு கேட்க மாட்டாரு, நாமளா கொடுத்தா வாங்கிப்பார். ஏழைங்ககிட்ட காசு இருக்காதுன்னு தெரிஞ்ச மனுஷன். நான் வேலை செய்ற வீட்டுல பேசிக்கிட்டாங்க, ‘ஐயா இறந்து போயிட்டாரு’ன்னு, அதான் ஒரே ஒருமுறையாவது அவர் முகத்த பார்த்துடணும்னு ஓடி வந்தேன்” சொல்லிக்கொண்டிருக்கும்போதே தேம்பித் தேம்பித் அழத் தொடங்கினார் பவானி.
மருத்துவர் ஜெகன்மோகனுக்குச் சொந்த ஊர், நெல்லை மாவட்டம், தென்காசி. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த கையோடு, சென்னை, மந்தைவெளி, ஆர்.கே.மடம் சாலையில் சிறிய கிளினிக் ஒன்றைத் தொடங்கி ஏழை, எளிய மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். மின்கட்டண உயர்வு, பணியாளர்களுக்கு சம்பளம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடைசியாக அவர் பெற்ற அதிகபட்ச கட்டணம் இருபது ரூபாய்.
அவருக்கு சந்திரா என்ற மனைவியும் ஷோபா ராஜன் என்கிற ஒரு மகளும் இருக்கிறார்கள். அவரின் மருமகன் கமலக்கண்ணன் வழக்கறிஞர். மாமாவுக்காக இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு வந்தவர் நம்முடன் பேசினார்,
கமலக்கண்ணன் “1973-ல் மருத்துவப் படிப்ப முடிச்சுட்டு, 1974-ம் ஆண்டு ஆரம்பத்துல கிளினிக் தொடங்கினார். அவரோட தாத்தா நாராயணசாமி ஒரு இயற்கை மருத்துவர். அவரோட பாணியில, இவரும் மக்களுக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க ஆரம்பிச்சார். மந்தைவெளி ஏழை மக்கள் வாழ்ற ஏரியா. அதனால அவங்களுக்கு உதவியா இருந்துச்சு. நேத்துல இருந்து விடிய விடிய மக்கள் கூட்டம் கூட்டமா வந்துட்டு இருக்காங்க. எவ்வளவு பணம் கொடுத்தும் வாங்க முடியாத மக்கள் மனச எங்க மாமா சம்பாரிச்சிருக்கார். அதுவே எங்களுக்குப் போதும்” என்றவர், வீட்டுக்கு வந்தவர்களைக் கவனிக்க ஆரம்பித்தார்.
அப்போது வீட்டுக்குள் நுழைந்தார் வயதான ஒருவர். ‘டாக்டர் ஐயா எங்க… ஒருமுறை பார்க்கணுமே’ என்றவரிடம், ‘கொண்டு போயிட்டாங்க’ எனச் சொன்னார்கள். தலையில் இருந்த குல்லாவைக் கழட்டி, கண்மூடி ஒரு நிமிடம் அப்படியே உறைந்துபோய் நின்றார் .
மருத்துவர் வீடு
“உறவுக்காரவங்க எல்லோரும் கடைசியா ஒருமுறை முகத்தைப் பார்த்துக்கோங்க!” இறந்த ஒருவரை எரிப்பதற்கு முன்பாக, பிணம் எரிப்பவர்கள் சொல்லும் வார்த்தைகள் இவை. இறந்துபோன மருத்துவர் ஜெகன்மோகனை கடைசியாய் ஒருமுறை பார்க்க வந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்த பின்னால்தான் தெரிந்தது, அவருக்கு ரத்த சம்பந்தம் இல்லாத லட்சக்கணக்கான உறவுக்காரர்கள் இருக்கிறார்கள் என.
‘மழைக்காலத்தில் தண்ணீரில் மிதக்கும் சென்னை, இன்று கண்ணீரில் மிதந்தது மக்கள் மருத்துவர் ஜெகன்மோகன் இறப்புக்காக’ என்று சொன்னால் அது மிகையில்லை.
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக