வெள்ளி, 5 அக்டோபர், 2018

தமிழகத்தில் 7-ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 7-ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்மாலைமலர் : வருகிற 7-ம் தேதி அதீத கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  புதுடெல்லி : தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் (5-ந்தேதி) குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், அதன் பிறகு மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.


இந்நிலையில், தமிழகத்தில் வரும் 7-ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுமார் 25 செ.மீ அளவு மழை பெய்யும் என பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனர் சத்திய கோபால் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறைந்த நேரத்தில் மிக அதிகளவு கனமழை பெய்வதையே ரெட் அலர்ட் என அழைக்கப்படுகிறது. வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என்பதால் மக்கள் அபாயகரமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட போது மிக கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது#

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக