ஞாயிறு, 28 அக்டோபர், 2018

ரணிலின் பாதுகாப்பு வாகன அணிகள் நீக்கம் ..... நாடாளுமன்றம் முடக்கம் .. ரணில் பெரும்பான்மை இருப்பதாக அறிவிப்பு

யார் பிரதமர் என்பதில் குழப்பம் நீடிப்பு
இலங்கையில் அரசியல் நெருக்கடி
நாடாளுமன்றத்தை முடக்கினார், அதிபர் சிறிசேனா தினத்தந்தி:  இலங்கையின் தற்போதைய பிரதமர் விக்ரமசிங்கேயா? அல்லது ராஜபக்சேவா? என்ற குழப்பம் நீடிக்கிறது. கொழும்பு, இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்த போது நடைபெற்ற உள்நாட்டு போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
 பின்னர் அங்கு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார்.
ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்த சிறிசேனா வெற்றி பெற்று புதிய அதிபர் ஆனார். அதன்பிறகு அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விக்ரமசிங்கேயின் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், சிறிசேனா கட்சியின் ஆதரவுடன் ரனில் விக்ரமசிங்கே பிரதமர் ஆனார். அந்த இரு கட்சிகளும் இணைந்து ஒற்றுமை அரசு என்ற பெயரில் கூட்டணி அரசை உருவாக்கின


இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் இலங்கை மக்கள் முன்னணி அதிக இடங்களை கைப்பற்றியது ஆளும் கட்சி கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் சிறிசேனாவுக்கும், விக்ரமசிங்கேவுக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்தது.

அத்துடன், நாடாளுமன்றத்தில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு சிறிசேனா கட்சி எம்.பி.க்கள் பலர் ஆதரவு தெரிவித்ததால் மோதல் அதிகரித்தது. அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மீது அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.

இந்த நிலையில் அதிபர் சிறிசேனா, நேற்று முன்தினம் திடீரென்று பிரதமர் பதவியில் இருந்து விக்ரமசிங்கேயை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக அறிவித்து, அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். சிறிசேனாவின் இந்த அதிரடி நடவடிக்கை இது உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டதும் அதிபர் சிறிசேனா, விக்ரமசிங்கேவுக்கு எழுதிய கடிதத்தில், “உங்களை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறேன்” என்று கூறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று கொழும்பு நகரில் நிருபர்களிடம் பேசிய ரனில் விக்ரமசிங்கே, “நான் தொடர்ந்து பிரதமராக நீடிக்கிறேன். ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றது சட்டவிரோதமானது. இலங்கையின் அரசியலமைப்புக்கு எதிரானது. எனவே நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எனக்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா உத்தரவிடவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ஜனாதிபதி சிறிசேனாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா? என்று கேட்டதற்கு, சில யோசனைகள் முன் வைக்கப்படுகின்றன. அவை அனைத்துக்கும் முன்பாக நாடாளுமன்றம் கூட்டப்படவேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும் விக்ரமசிங்கே பதில் அளித்தார்.

இதேபோல் இலங்கையின் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன், பழனி திகம்பரம் மற்றும் ரிஷாத் பதியுதின் ஆகியோர் சிறிசேனாவின் நடவடிக்கை சட்டவிரோதம் என்று கண்டனம் தெரிவித்தனர். இவர்கள் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.

2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுவதாக இருந்தது. இந்த நிலையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டும் என்று கோரி சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு ரனில் விக்ரமசிங்கே நேற்று ஒரு கடிதம் எழுதினார்.

ஆனால் பலப்பரீட்சையை தடுக்கும் வகையில், அதிபர் சிறிசேனா நாடாளுமன்றம் கூடுவதை வருகிற 16-ந் தேதி வரை தற்காலிகமாக முடக்கி வைத்து அதிரடியாக உத்தரவிட்டார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 225. ஆனால் சிறிசேனா, ராஜபக்சே மற்றும் அவர்களின் ஆதரவு கட்சிகளுக்கு மொத்தம் 95 எம்.பி.க் களே உள்ளனர். அதேநேரம் ரனில் விக்ரமசிங்கே கட்சிக்கு 106 எம்.பி.க்கள் உள்ளனர். இன்னும் 7 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் அவரால் பெரும்பான்மை இலக்கான 113 எம்.பி.க்களின் ஆதரவை எளிதில் பெற்றுவிட முடியும்.

16 எம்.பி.க்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு விக்ரமசிங்கேவுக்கு உள்ளது. மேலும் சில சிறிய கட்சிகளின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது. எனவே நாடாளுமன்றத்தில் பலப்பரீட்சை நடைபெறும் பட்சத்தில் விக்ரமசிங்கே எளிதாக வெற்றி பெற்றுவிடும் வாய்ப்பு உள்ளது.

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டினால் ராஜபக்சேயால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் குதிரை பேரம் நடத்தி எம்.பி.க் களை தனது பக்கம் இழுப்பதற்கு வசதியாக நாடாளுமன்றத்தை தற்காலிகமாக சிறிசேனா முடக்கி வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

விக்ரமசிங்கேயை பிரதமர் பதவியில் இருந்து அதிபர் சிறிசேனா நீக்கியது குறித்து இலங்கையில் உள்ள அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கையில், ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டு இருப்பது நாட்டில் நெருக்கடியான நிலையை ஏற்படுத்தி இருப்பதாகவும், பெரும்பான்மை பலத்துடன் பிரதமராக இருக்கும் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்படுவதை இலங்கை அரசியல் சட்டத்தின் 19-வது பிரிவு அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றுள்ள நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட விக்ரமசிங்கே, பிரதமர் பதவியில் தான் தொடர்ந்து நீடிப்பதாக கூறி இருக்கிறார். இதனால் அங்கு யார் பிரதமர் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. விக்ரமசிங்கேவுக்கு எதிராக அதிபர் சிறிசேனா எடுத்த அதிரடி நடவடிக்கையால் இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

மேலும் ஐரோப்பிய யூனியன் அமைப்பில் உள்ள பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ருமேனியா ஆகிய நாடுகள், இலங்கை அரசியல் கட்சிகள் அந்நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொள்ளவேண்டும் என்றும், நாட்டில் வன்முறை ஏற்படாமல் தடுக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து உள்ளன.

இந்த நாடுகளின் தூதர்கள் இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே, ராஜபக்சேயின் மகன் நமல் நிருபர்களிடம் கூறுகையில், “எனது தந்தைக்கு 120 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கிறது. எனவே அவர் நாடாளுமன்ற ஓட்டெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவார்” என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக