செவ்வாய், 16 அக்டோபர், 2018

பகத்சிங் பிறந்தநாள் விழா கொண்டாடியதால் கோவை அரசு கல்லூரி மாணவி சஸ்பெண்ட்

tamil.thehindu.com : பகத்சிங் பிறந்தநாள் விழா கொண்டாடியதால் கோவை அரசு கலைக்கல்லூரி மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் மாணவி மாலதி. கடந்த மாதம் 28-ம் தேதி கல்லூரி மைதானத்தில் மாணவ-மாணவிகளுடன் இணைந்து பகக்சிங் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின்போது பகத்சிங் தொடர்பான உரையாடல்களும் நடந்துள்ளது.
இந்தநிலையில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் முதலாமாண்டு பயிலும் மாணவி மாலதி மட்டும் கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கோவை அரசு கலைக் கல்லூரியில் ஒழுங்கு நடவடிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
கோவை அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு எம்.ஏ வரலாறு பயின்று வரும் மாணவி மாலதி கடந்த 28-ம் தேதி வகுப்புகளில் உள்ள மாணவ-மாணவிகளை அழைத்து கல்லூரி வளாகத்தில் தனியாக கூட்டம் நடத்தியுள்ளார்.

இந்த கூட்டம் குறித்து ஏற்கெனவே முதல்வரிடம் அனுமதி கேட்ட நிலையில் கல்லூரி முதல்வர் அனுமதிக்கவில்லை.
எனவே கூட்டம் நடத்த அனுமதி மறுத்த நிலையிலும் பிற மாணவர்கள் மாணவிகளை அழைத்து கூட்டம்கூட்டி கல்லூரி பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் ஒழுங்கீனமாகவும் நடந்துகொண்டதாகவும் மாணவி மாலதியை 1-ம் தேதி முதல் கல்லூரியில் இருந்து விசாரணை அறிக்கை பெறும்வரை இடைநீக்கம் செய்யப்படுகிறார்.
இவ்வாறு அந்த ஒழுங்கு நடவடிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் சித்ரா கூறுகையில், “கல்லூரியில் முறையான அனுமதி வாங்காமல் மாணவர்களை ஒன்று திரட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பகத்சிங் குறித்த உரையாடலின்போது கல்லூரியின் நிறை குறைகள் பற்றி பேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதுகுறித்து மாணவி தரப்பில், “மாணவி மாலதி பகத்சிங்கின் பிறந்தநாள் நிகழ்ச்சியை கல்லூரியில் நடத்திட கல்லூரியின் முதல்வரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் கல்லூரி முதல்வர் இதை மறுத்த நிலையில், பின்னர் மற்ற மாணவர்களோடு இணைந்து கொண்டாடினார். இந்நிகழ்வில் கல்லூரியிலுள்ள மற்ற மாணவர் இயக்கங்களைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து அன்று மதியமே, அதே மேடையில் கல்லூரியின் அடிப்படை வசதிகளுக்காக மாணவர்களின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. பின்னர் விடுமுறை நாட்களுக்குப் பின் மாலதி கல்லூரி சென்றபொழுது நிர்வாக தரப்பில் வெறும் வார்த்தையில் மட்டும் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்ததாக தகவல் கொடுத்தனர்.
அதற்கு எழுத்துப்பூர்வமாக ஆதாரம் கேட்டதற்கு ஏற்கெனவே வீட்டிற்கு அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்தனர். பின்னர் ஒரு வாரம் ஆகியும், கடிதம் வராத சூழலில் 8-ம் தேதி அன்று மீண்டும் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபொழுது, முன்னுக்குப்பின் முரணாக தகவல் அளித்தனர். அடுத்த நாள் வகுப்பிற்கு சென்றபொழுது, தாங்கள் அனுப்பியதாகக் கூறிய கடிதத்தை வரலாற்றுத் துறை ஆசிரியர் கையிலே தந்துள்ளனர்.
அந்த கடிதத்தில் இடைநீக்கம் செய்ததற்கு எந்த விதமான விளக்கமும் கேட்கப்படவில்லை, வெறும் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக மட்டும் கூறியுள்ளனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளபடி பார்த்தால் கூட, அந்த நாள் மட்டும் இரண்டு கூட்டம் நடைபெற்றுள்ளது.
அதில் எந்த கூட்டம் என்பதை ஏன் குறிப்பிடவில்லை? கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களும், கல்லூரியிலுள்ள மற்ற மாணவர் இயக்கங்களைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டு உரையாற்றியபொழுது, மாணவி மாலதியை மட்டும் இடைநீக்கம் செய்தது ஏன்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக