செவ்வாய், 30 அக்டோபர், 2018

கோழிகளை கூண்டில் அடைத்து வளர்ப்பதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

eggநக்கீரன்: கோழிகளை கூண்டில் அடைத்து வளர்ப்பதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து கோழிப்பண்ணை தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்.
இது குறித்த அவரது அறிக்கை:  ‘’தன்னார்வ அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் கோழிகளை கூண்டுகளில் அடைத்து வளர்ப்பதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடையை விதித்திருப்பது கோழிப்பண்ணை தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
புதிய பண்ணைகள் அமைப்பதற்கும் தடை விதித்திருப்பதால் ஏற்கனவே வங்கிகளில் கடன் பெற்று கோழிப்பண்ணைகளை அமைக்க தொடங்கியவர்கள் செய்வதறியாமல் தவிக்கும் நிலை உருவாகியிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் அதுவும் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில்தான் கோழிப்பண்ணைகள் நிறைந்துள்ளன. நாமக்கல் மாவட்டத்திலிருந்து நாள்தோறும் கோடிக்கணக்கான முட்டைகள் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவு நீடித்தால் கோழிப்பண்ணை தொழில் முற்றிலும் நலிவடைந்து முட்டை விலை மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகும்.


கிராமங்களில் வேலைவாய்ப்புகளை தருகின்ற தொழிலாகவும், லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற தொழிலாகவும் கோழிப்பண்ணை தொழில் இருந்து வருகிறது. புதிதாக கூறியுள்ள வழிமுறைகளின் படி கோழிகளை கூண்டுகளில் அடைக்காமல் திறந்தவெளியில் வளர்ப்பதற்கு அதிகமான இடம் தேவைப்படும். உதாரணமாக 10000 கோழிகள் கூண்டுகளில் வளர்க்கப்படுகின்ற இடத்தில், திறந்தவெளியில் வளர்க்கும் போது 1000 கோழிகளை மட்டும்தான் வளர்க்க முடியும்.

 கோழிகளை திறந்தவெளியில் வளர்க்கப்படும் போது தண்ணீரும், தீவனமும் அதிகமாக வீணடிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் முட்டைகளின் சேதாரமும் அதிகரிக்கும். இதனால் முட்டை உற்பத்தி குறைந்து முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும். அதேபோல் கூண்டுகளில் அடைக்காமல் கோழிகளை தரையில் வளர்க்கும் போது கோழிகளின் கழிவுகளை அகற்றுவதிலும் சிரமம் ஏற்படும். ஒவ்வொரு கோழிப்பண்ணைகளிலும் இருக்கும் லட்சக்கணக்கான கோழிகளை திறந்தவெளியில் வளர்ப்பதென்பது சாத்தியமற்றது. எனவே கோழிப்பண்ணை யாளர்களிடத்தில் கலந்தாலோசித்து திறந்தவெளியில் கோழிகளை வளர்க்கும்போது ஏற்படும் பாதிப்புகளையும், சிரமங்களையும் உரிய முறையில் உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கூறி விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோழிப்பண்ணை தொழிலை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். ’’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக