புதன், 10 அக்டோபர், 2018

டெல்லி சிக்னல், வேட்பாளர் தேர்வில் எடப்பாடி

மின்னம்பலம்: டெல்லி பயணத்துக்குப் பின் தமிழக முதல்வர் எடப்பாடியின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தென்பட ஆரம்பித்துவிட்டன என்கிறார்கள் அவரைச் சுற்றியிருப்பவர்கள். டெல்லியில் பிரதமருடனான சந்திப்பு குறித்து நாம் ஏற்கனவே டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதிமுக - பாஜக கூட்டணி ஏற்படுமா என்ற பிரதமரின் நேரடிக் கேள்விக்கு தமிழகத்தில் தற்போதைய அரசியல் நிலைமையை எடப்பாடி பிரதமரிடம் எடுத்துச் சொல்லியதையும், அதை இப்போதைக்குப் பிரதமர் ஏற்றுக்கொண்டதையும் நாம் சொல்லியிருந்தோம். மற்றபடி தமிழக நலன்களுக்காக பிரதமரிடம் வைத்த கோரிக்கை மனுக்கள் பற்றி எந்த பதிலும் வரவில்லை.

ஆனால், தனது டெல்லி பயணம் அரசியல் ரீதியாக வெற்றி அடைந்திருப்பதாகத் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியான தளவாய் சுந்தரத்திடம் மகிழ்ச்சியாகச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. தளவாயை அண்ணே என்றுதான் அழைப்பார் எடப்பாடி. பிரதமருடனான சந்திப்பு பற்றி தளவாயிடம் பேசும்போது, ‘அண்ணே... எல்லா நல்லபடியாவே நடக்கும்’ என்று கூறியிருக்கிறார். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சமீபத்தில் மாவட்ட ரீதியாக குமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடைசியாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடந்தபோது வரவேற்புரையாற்றியவர் தளவாய் சுந்தரம். அப்போது அவர், ‘இனிவரும் தேர்தலில் கன்னியாகுமரியில் அதிமுகவோ அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் கட்சியோதான் ஜெயிக்கும்’ என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை வைத்துக்கொண்டே பேசினார். அதன்பிறகு தன் பேச்சு பற்றி எடப்பாடியிடம் குறிப்பிடும்போது,’நாம ஸ்டேட் பவர்ல இருக்கும் கட்சி. ரொம்பல்லாம் பணிஞ்சு போகக் கூடாது’ என்று சொல்லியிருக்கிறார். அதை மனதில் வைத்துதான் பிரதமருடனான சந்திப்பு பற்றி தளவாயிடம் புன்னகை பூத்திருக்கிறார் எடப்பாடி.
அதன் தொடர்ச்சியாக, சென்னை வந்ததும் வரும் மக்களவைத் தேர்தல் பற்றிய ஆலோசனைகளில் இறங்கிவிட்டார் எடப்பாடி. ‘தமிழகத்தில் 39, புதுச்சேரி 1 என நாற்பது தொகுதிகளில் போன முறை அம்மாவை பிரதமராக முன்னிறுத்தி 37 இடங்கள்ல ஜெயிச்சோம். இந்த முறை அந்த அளவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆனா 15 இடத்துலயாவது ஜெயிச்சாதான் நமக்கு மதிப்பு. இல்லேன்னா அரசியல் மாற்றங்கள் என்ன வேணும்னாலும் நடக்கும்’ என்று தனது நெருக்கமான வட்டாரத்தில் ஆலோசித்திருக்கும் எடப்பாடி, ‘இப்ப இருக்கிற எம்.பி.க்கள் மேல அதிருப்தி அதிகமா இருக்கறதா ரிப்போர்ட் வந்திருக்கு. அதனால முக்கால்வாசி தொகுதிகள்ல புது நபர்களைத்தான் வேட்பாளரா நிறுத்தப் போறோம். எல்லாருக்கும் கட்சிதான் செலவு பண்ணும். ஏன்னா வர்ற எலக்‌ஷன்ல ஜெயிக்குறது வேட்பாளருக்கு முக்கியமோ இல்லையோ நமக்கு முக்கியம்’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. அதாவது மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் எல்லாரும் தனது தேர்வாக இருக்க வேண்டும் என்பதே எடப்பாடியின் திட்டம். அதனால்தான் புது வேட்பாளர்கள் என்ற கருத்தைக் கையில் எடுத்திருக்கிறாராம்.
இந்த வரிசையில் சேலம் தொகுதி பற்றியும் தீவிர ஆலோசனை நடத்தியிருக்கிறார் எடப்பாடி. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் அதிமுகவின் பன்னீர்செல்வம் ஜெயித்தார். அப்போது திமுகவும், காங்கிரஸும் தனித்தனியாக நின்றன. இம்முறை திமுக -காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் பட்சத்தில் சேலத்தில் காங்கிரஸ் சார்பில் மோகன் குமாரமங்கலம் போட்டியிடத் தீவிரமாக முயன்றுவருகிறார். போன தேர்தலில் தனித்து நின்றவர் இவர். இம்முறை திமுக கூட்டணியில் தனக்கே சீட் கிடைக்கும் என்று அதற்கான வேலைகளை டெல்லிவரை முடுக்கிவிட்டு வருகிறார். இதுபற்றியெல்லாம் தனது சேலம் மாவட்டக் கட்சி நிர்வாகிகளிடம் விவாதித்த எடப்பாடி சேலம் தொகுதிக்கு யார் வேட்பாளர் என்ற ஆலோசனையிலும் இறங்கிவிட்டாராம்’’ என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
அதற்கு லைக் போட்டுவிட்டு ஃபேஸ்புக் தன் பதிவை டைப் செய்யத் தொடங்கியது.
“எடப்பாடி பழனிசாமியின் டெல்லி விசிட் ஓ.பன்னீர் கூடாரத்திலும் ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தர்ம யுத்தம் நடத்தியபோது 24 மணி நேரத்தில் தூங்கும் நேரம் தவிர மீத நேரங்களில் எல்லாம் தனது ஆதரவாளர்களோடே இருந்தவர் ஓ.பன்னீர். ஆனால் அணிகள் இணைந்து துணை முதல்வர் ஆன பிறகு தனது ஆதரவு வட்டத்தில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள்கூடப் பன்னீரை எளிதில் சந்திக்க முடியாத நிலை இருந்தது. அவர்களுக்கே இந்த நிலைமை என்றால் அவரது அணியில் இருக்கும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளை கேட்கவே வேண்டாம். எப்போது கிரீன்வேஸ் ரோடு போனாலும் பன்னீரைப் பார்க்க முடியாமலே திரும்பினார்கள். இந்த நிலைமை தொடரவே அது ஓ.பன்னீர் ஆதவாளர்களுக்குள் விரக்தியான புலம்பல்களாக வெடிக்கத் தொடங்கியது. தினகரனை சந்தித்த விவகாரம் அண்மையில் பெரிதாக வெடிக்க, தனது ஆதரவு நிர்வாகிகளிடம்கூடச் சொல்லாமல் தன்னை சந்தித்தது ஏன் என்று தினகரன் கேள்வி எழுப்பியிருந்தார். இதுவும் பன்னீர் ஆதரவாளர்களைச் சுணக்கம் அடைய வைத்தது. இதையெல்லாம் தாண்டி எடப்பாடியின் டெல்லி விசிட்டில் தனக்கு எதிரான விஷயங்களும் இருக்கின்றன என்பதை தனது டெல்லி சோர்ஸ்கள் மூலம் அறிந்த பன்னீர் மீண்டும் தனது ஆதரவாளர்களைப் பழையபடிக்கு சந்திக்க ஆரம்பித்திருக்கிறார்.

முன்னர் நேரம் இல்லை என்று மறுக்கப்பட்டவர்கள் இப்போது, ‘அண்ணன் வீட்லதான் இருக்காரு. எப்ப வர்றீங்க?’ என்று ஓபிஎஸ் இல்லத்தில் இருந்து அழைக்கப்படுகிறார்கள். கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் பன்னீரின் வீட்டில் கார்களில் மட்டுமல்ல... ஆட்டோக்களில் வருபவர்கள்கூடப் பன்னீரைக் கடந்த சில நாட்களாக சந்திக்க முடிகிறது. சென்னையில் இருந்தால் இரவு ஒன்பதரை, பத்து மணி வரைகூட ஆதரவாளர்களைப் பார்க்கிறார் பன்னீர். சந்திக்க வருகிறவர்களிடத்தில், ‘எல்லாருக்கும் நல்லது பண்ணலாம்னுதான் நினைக்கிறேன். சூழல் இப்படி இருக்கு’ என்று சில வார்த்தைகளையும் பேசுகிறாராம். கட்சியினர் மனுவோடு வந்தால் அதையெல்லாம் வாங்கி, ‘நிச்சயம் பண்ணச் சொல்றேன்’ என்கிறாராம்.
‘துணை முதல்வர் ஆனதிலிருந்து அவர் தன் பலத்தை நிரூபிக்கப் பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கலை இப்போ அதற்கான நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறாரு. இந்த நெருக்கடியில இருந்து வெளிய வர தனக்கு மக்கள் செல்வாக்கு இருக்குங்கறதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கறதா நினைக்கிறாரு. அதனால்தான் மீண்டும் இப்போது ஆதரவாளர்களோடு அதிக நேரம் செலவழிக்க ஆரம்பிச்சிட்டாரு. இத்தனை நாள் இல்லாத மாற்றம் அண்ணனிடம் இந்த சில நாட்களில் வந்திருக்கிறது’ என்கிறார்கள் பன்னீர் ஆதரவாளர்கள். பன்னீர் வீட்டின் முன் அவரது ஆதரவாளர்கள் அதிகமாகத் தென்பட ஆரம்பித்திருப்பது எடப்பாடிக்கும் டெய்லி ரிப்போர்ட்டாகச் சென்றுகொண்டிருக்கிறதாம்” என்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக