செவ்வாய், 23 அக்டோபர், 2018

BBC : சபரிமலை ஐயப்பன் மீது எனக்கு என்ன கோபம்? - ஓர் இளம்பெண்ணின் ஆதங்கம்

கோப்பு படம்
கிருத்திகா கண்ணன்- பிபிசி தமிழ் : எனது மாணவ பருவத்தில், என் தந்தையும்
சகோதரரும் சபரிமலைக்கு விரதம் இருக்கும் சமயங்களில், மாதவிடாய் நாட்களில் உறவினர்களின் வீட்டில் நான் தங்க வைக்கப்பட்டேன். ஐயப்பன் கடவுள் மீது நான் கோபம் கொண்ட முதல்முறை இதுதான்.
என் குடும்பத்திலுள்ள பெரும்பான்மையான ஆண்கள் சபரிமலைக்கு செல்லும் வழக்கம் கொண்டவர்கள் என்பதால், மாதவிடாய் காலங்களில் பெண்கள் வேறு வீடுகளில் தங்குவது வழக்கமான ஒன்றாக இருந்தது.
என் தாய் அவ்வாறு தங்குவதை பார்த்துள்ளேன். பெண்கள் அவ்வாறு வீட்டினுள் வந்தால் தெய்வக்குற்றம் என அவர் கூறுவதையும் கேட்டுள்ளேன்.
காரணம், மாதவிடாய் காலங்களில் பெண்களை ஒதுக்கி வைப்பதும், தனியாக தட்டு, குவளை, துணிகள் போன்ற பொருட்களை கொடுத்து, அவர்கள் எந்த பொருளையும் தொடக்கூடாது என்றும், அவர்களை யாரும் தொடக்கூடாது என்றும் இருக்கும் வழக்கம் எனக்கு புதியதல்ல.
என் அம்மாவிற்கும், சகோதரிகளுக்கும் இவ்வாறு நடப்பதை `சம்பிரதாயம்` என்ற முறையில் நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் பார்த்துள்ளேன். நானும் அனுபவித்து வருகிறேன்.


தற்போது வேலை நிமிர்த்தமாக வேறு நகரத்தில் வாழ்ந்துவரும் சூழலில், இத்தகைய விதிகளை நான் கடைபிடிப்பதில்லை. சுகாதாரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். ஊரிலுள்ள பெற்றோரும் இதை பெரியதாக கேட்டுக்கொள்வதுமில்லை.
சபரிமலைக்கு விரதம் இருக்கும் ஆண்களின் எதிரில் மாதவிடாய் உள்ள பெண் வரக்கூடாது; அவர்கள் காதுகளில் விழும்படி பேசக்கூடாது; அவர்கள் இருக்கும் வீட்டில் தங்கக்கூடாது உள்ளிட்டவை இந்த சம்பிரதாயத்தில் அடங்கும்.
என் 17ஆவது வயதில், மாதவிடாய் காலத்தில் உறவினர் வீட்டில் தங்கும்படி பெற்றோர் கேட்டுக்கொண்டனர். மாதவிடாய் நாட்களில் உடலிற்கு தேவைப்படும் ஓய்வு, சௌகர்யம் உள்ளிட்டவற்றை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டிய சூழலை அந்த இடம் எனக்கு தந்தது. ஏனென்றால், அங்கும் நான் எதையும் தொடக்கூடாது, என்னையும் யாரும் தொடக்கூடாது! அதற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இதே சூழலை மீண்டும் சந்தித்தேன்.
ஒரு முறை எனது சிறப்பு வகுப்பு இரவு 8 மணிக்கு முடிய, நான் அங்கிருந்து அருகாமையில் உள்ள ரயில் நிலையத்தை கண்டறிந்து, ரயில் ஏறி, உறவினர் வீட்டை அடைய வேண்டும். என்னை அழைத்துச்சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நான் அப்பகுதிக்கு புதியவள் என்பது புரிய, அவர் மாற்றுப்பாதையில் அழைத்துச் சென்றார்.




மிகவும் பரபரப்பான அந்த பகுதியில் அவ்வளவு இருட்டான தெருவை கண்டறிந்ததுமே, ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்தேன். பாதி வழியிலேயே வண்டியை நிறுத்தி, அவரின் கையில் பணத்தை திணித்துவிட்டு திரும்பி பார்க்காமல் ஓடியது இன்னும் நினைவில் உள்ளது.
தூரத்தில் தெரிந்த வெளிச்சமான பகுதியை நோக்கி ஓடி, அருகில் இருந்தவர்களின் உதவியுடன் ரயில் நிலையம் அடைந்தேன். அன்று இரவு உறவினர் வீட்டை அடைந்த பிறகே, நான் பாதியில் இறங்கியது எவ்வளவு சரியான செயல் என புரிந்தது. பிறகு ஏற்பட்ட பயத்தால் மனம் விட்டு அழுதேன்.
அப்போதுதான் மீண்டும் எனக்கு ஐயப்பன் கடவுள்மேல் கோபம் வந்தது. இதை படிக்கும் உங்களுக்கு நான் எதோ ஒரு சிறிய விஷயத்தை ஊதி பெரியதாக்குவதுபோல தோன்றலாம்.
குழந்தை பருவம் முதலே என் வீட்டில் உள்ளவர்கள் சபரிமலைக்கு செல்வதை பார்த்து வளர்ந்த எனக்கு 10 வயதில் அந்த வாய்ப்பு கிடைத்தது.
தான் மிகவும் பக்திகொண்ட கடவுளை தன் மகளும் பார்க்கவேண்டும் என்று தந்தை அழைத்துச் சென்றார். வெறும் 10 வயது சிறுமி என்பதால், 41 நாட்கள் கடும் விரதம் இருக்க வைக்கவில்லை என்றாலும், வெளியே சாப்பிடாமல், தினமும் இருமுறை ஐயப்பனுக்கு சரணம் சொல்லி, இருமுடி ஏற்றி அழைத்துச் சென்றார்.
நகர சூழலில் வளர்ந்த எனக்கு 10 வயதில் காட்டுப்பயணம் என்பது மிகவும் மறக்கமுடியாததாக இருந்தது. பாதி தொலைவுக்கு மேல், என்னுடைய இருமுடியை அப்பாவே தூக்கி வந்தார்.
பயணம் முடிந்து திரும்பிய எனக்கும், அங்கு பார்த்த அடர்த்தியான காடு, வழிநெடுகிலும் வந்த கழுதைகள், பேட்டை துள்ளல் என நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள நிறைய இருந்தன.
எனது குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான ஆன்மிக பயணத்தை நானும் முடித்துள்ளேன் என்பதை என் அப்பா எல்லாரிடமும் கூறி மகிழ்வதை பலமுறை கேட்டுள்ளேன்.
மனிதர்களை சமமாக பார்க்கும் கடவுளென்றால் பெண்களை மட்டும் ஏன் இப்படி ஓவ்வொரு ஆண்டும் ஒருவர் வீட்டில் தங்க வைத்து அலைக்கழிக்க வேண்டும் என தோன்றியது. அன்று இதை யாரிடமும் கேட்கவில்லை என்றாலும், அடுத்த ஆண்டிலிருந்து நான் வீட்டில்தான் இருப்பேன், நீங்கள் வெளியே தங்கிக்கொள்ளுங்கள் என்று கத்துமளவிற்கு அந்த கோவம் என்னுள் ஊறியிருந்தது.
இது நடந்து வெகுசில ஆண்டுகள் கழித்தே சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழையலாம் என்ற தீர்ப்பு வந்துள்ளது. கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்றும், நுழையக்கூடாது என்றும் இரு குழுக்களாக பெண்கள் தங்களின் கருத்தை முன்வைத்து வருகின்றனர்.
இந்த பகுதியை எழுதுவதற்கு முன்பு என் சகோதரருடன் நடத்திய உரையாடலின் (வாக்குவாதத்தில்) போதுகூட பெண்களை அனுமதிக்காமல் இருப்பதற்கான சில அறிவியல் ரீதியான சாத்தியக்கூறுகளை அவர் எடுத்துரைத்தார்.
இருப்பினும் அவரிடம் நான் ஒரு கேள்வியை மட்டுமே முன்வைத்தேன். 10-50 வயது பெண்களின் உடல்நிலையை கணக்கில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தால், மனிதர்களை சமமாக பார்க்கும் கடவுள் அவர்களுக்கு மட்டும் 15 நாட்கள் விரதம் இருக்கும் நிலையை கொண்டு வந்திருக்கலாமே எனக் கேட்டேன். அதற்கு மௌனம் மட்டுமே பதிலாக கிடைத்தது.
நீதிமன்றத்தின் அண்மைத்தீர்ப்பு என் மனதில் மிகவும் குழப்பமான சூழலை உருவாக்கியுள்ளது. ஒரு நித்திய பிரம்மச்சாரி கடவுளின் கோயிலுக்குள் 10-50 வயதுடைய பெண்கள் வரக்கூடாது என கடைபிடிக்கப்படும் விதி சரியா? பொதுவாக பெண்கள் எல்லா இந்து கோவிலுக்குள்ளும் செல்லலாம் என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பை பார்க்க வேண்டுமா? இன்னும் பல்வேறு கேள்விகளுக்கான பதிலை நான் தேடிக்கொண்டு இருக்கிறேன்.
உண்மையில் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் இடத்தில் இருப்பவர்கள் யார்? யாரை நோக்கி இந்த கேள்விகள் முன்வைக்க வேண்டும்?
வருங்காலத்தில் சபரி மலைக்கு போகவேண்டும் என்று ஒரு இளம் பெண் முடிவு செய்தால், அப்பெண்ணின் முடிவுக்கு அவளது குடும்பமும், சமூகமும் துணை நிற்குமா?
காலம்தான் இதற்கு பதில் கூறவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக