திங்கள், 22 அக்டோபர், 2018

ரயில் விபத்தால் மட்டும் 60 பேர் உயிரிழக்கவில்லை' - அமிர்தசரஸ் விபத்து... கூட்ட நெரிசலாலும் பலர் இறந்தனர்

விபத்துசத்யா கோபாலன் விகடன் :  அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் ரயில் மோதி உயிரிழக்கவில்லை என விபத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜோரா பதாக் என்ற இடத்தில் நடந்த தசரா விழாவின் போது அருகில் இருந்த தண்டவாளத்தில் நின்றிருந்தவர்கள் மீது ரயில் மோதி இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து மொத்த இந்தியாவையும் பெரும் சோகத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பாக பலர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில் இன்னும் யார் மீதும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

இந்நிலையில் விபத்தை நேரில் பார்த்தவர்கள் இது பற்றி அதிர்ச்சியான தகவல் ஒன்றை அளித்துள்ளனர். அவர்கள் கூறும் போது, ‘தசரா விழாவின் போது பலர் தண்டவாளத்தில் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். சரியாக ராவணன் உருவபொம்மை எரிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் மக்கள் கூட்டத்தை ரயில் கடந்தது. ராவணன் பொம்மையில் இருந்த பட்டாசுகள் வெடித்த சத்தத்தில் ரயில் வருவது கேட்கவில்லை. ரயில் மிக அருகில் வரும் போதுதான் பலரும் அதை உணர்ந்து அங்கிருந்து தப்பமுயன்றனர். தண்டவாளத்தில் இருந்தவர்கள் அருகில் நின்றவர்கள் மீது விழுந்து அங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாகவும் சிலர் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசலில் பல குழந்தைகளும் சிக்கியிருந்தனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல தசரா விழாவுக்குச் சென்ற தன் மகன் திரும்பி வராத சோக நிகழ்வும் நிகழ்ந்துள்ளது. இது பற்றி பேசிய ஜோரா பதாக் பகுதியை சேர்ந்த விஜயகுமார், ‘என் மகன் மனிஷ் பத்தாம் வகுப்பு படிக்கிறான். தசரா விழாவை நேரில் பார்க்க தன் நண்பர்களுடன் நேற்று முன் தினம் மாலை சென்றான். அவன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில்தான் ரயில் விபத்து நேர்ந்தது. தகவல் தெரிந்ததும் நான் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்றேன். அங்கு நீண்ட நேரமாகத் தேடியும் என் மகனைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. பிறகு மனிஷின் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் பகிர்ந்தேன் அதைப் பலரும் ஷேர் செய்தனர். இறுதியில் அவன் மருத்துவமனையில் உள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மனிஷை தேடினேன் ஆனால் அவன் தலை துண்டிக்கப்பட்டதால் என்னால் இன்னும் என் மகனை அடையாளம் காணமுடியவில்லை ’ எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.
இந்த ரயில் விபத்தில் இறந்தவர்களில் பலர் ஜோரா பதாக் பகுதியை சேர்ந்தவர்கள். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவர்களின் உறவினர்களிடன் நேற்று ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த பலரின் உடல்கள் நேற்று ஒரே நாளில் ஒரே மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக