திங்கள், 29 அக்டோபர், 2018

இந்தோனேசியா விமான விபத்து 188 பயணிகள் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம்

மாலைமலர் :இந்தோனேசியாவில் லயன் ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியதில் 188 பயணிகள் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
#LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
ஜகார்த்தா: இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. “லயன் ஏர் பேசஞ்சர்ஸ்” எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் 210 பயணிகள் பயணம் செய்யும் வசதி கொண்டது. இன்று அந்த விமானத்தில் மொத்தம் 188 பேர் இருந்தனர்.
அவர்களில் 178 பேர் பெரியவர்கள், ஒரு சிறுவன், 2 கைக் குழந்தைகள், 2 பைலட்டுகள், 5 பணிப்பெண்கள் இருந்தனர்.

ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் 13-வது நிமிடத்தில் அதாவது 6.33 மணிக்கு திடீரென மாயமானது. அந்த விமானத்துக்கும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறையுடனான தகவல் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டது. இதனால் ஜகார்தா விமான நிலைய அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். விமான பைலட்டுடன் தொடர்பு கொள்ள பல்வேறு வகைகளிலும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

மாயமான அந்த விமானத்தை தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பது தெரிய வந்தது. அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விட்டது என்று இந்தோனேசியா மீட்புக்குழு செய்தித் தொடர்பாளர் யூசுப் லத்தீப் உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து விமானம் விழுந்த பகுதிக்கு மீட்புப் படைகள் விரைந்தன. ஜாவா கடல் பகுதியில் அந்த விமானத்தின் பல்வேறு பாகங்களும் மிதந்தபடி இருப்பதை மீட்புக் குழுவினர் கண்டுப்பிடித்தனர். அந்த விமானத்தின் பயணிகள் இருக்கைகள் ஜாவா கடலோரத்தில் உள்ள பெர்டமினா எனும் பகுதியில் கரை ஒதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த பகுதிக்கு கூடுதல் படகுகள் விரைந்துள்ளன.

விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விபரம் தெரியாமல் இருந்தது. அதன் பிறகு லயன் ஏர் பேசஞ்சர்ஸ் நிறுவனம் அந்த விமானத்தில் 188 பேர் இருந்த தகவலை வெளியிட்டது. 188 பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பலியானவர்களின் உடல்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் யாராவது பயணிகள் உயிருடன் தத்தளிக்கிறார்களா? என்பதற்கு முன்னுரிமை கொடுத்து தேடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

188 பேர் உயிரை காவு வாங்கியுள்ள அந்த விமானம் “போயிங் 737 மேக்ஸ் 8” எனும் வகையைச் சேர்ந்ததாகும். 6.20 மணிக்கு புறப்பட்ட அந்த விமானம் 7.20 மணிக்கு தரை இறங்க வேண்டும். ஆனால் 13 நிமிடத்தில் கடலுக்குள் பாய்ந்து விட்டது.

விமானம் கடலில் விழுந்ததற்கு என்ன காரணம் என்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

விமானத்துக்கும் விமான கட்டுப்பாட்டு அறைக்கும் உள்ள தகவல் தொடர்பு பதிவின்படி அந்த விமானம் விபத்துக்குள்ளான போது சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. அந்த உயரத்தில் இருந்து அந்த விமானம் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்து விழுந்துள்ளது.

விழுந்த வேகத்தில் விமானம் துண்டு, துண்டாக உடைந்து சிதறி விட்டதாக கூறப்படுகிறது. கடலில் விழுவதற்கு முன்பு அந்த விமானம் வெடித்து சிதறி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான போயிங் மேக்ஸ் ரக விமானம் உலக அளவில் அதிகம் விற்பனையாகி இருக்கும் பயணிகள் விமானமாகும். கடந்த ஆண்டுதான் போயிங் மேக்ஸ் விமானங்களில் அதிநவீன விமானங்கள் விற்பனைக்கு வந்தன. அதில் முதல் விமானத்தை லயன் ஏர் நிறுவனம்தான் வாங்கி இருந்தது.

போயிங் மேக்ஸ் ரக விமானம் எரிபொருள் சிக்கனம் கொண்டது. இந்த ரக விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பது இதுவே முதல் தடவை என்று கூறப்படுகிறது.

இந்தோனேசியாவில் கடந்த 2014-ம் ஆண்டு ஏர் ஆசியா விமானம் 162 பயணிகளுடன் கடலில் விழுந்து மாயமானது. அந்த விபத்தின் மர்மம் இன்னும் முழுமையாக தீரவில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மிகப்பெரிய விமான விபத்தை இந்தோனேசியா சந்தித்துள்ளது. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக