செவ்வாய், 16 அக்டோபர், 2018

மகா புஷ்கரம் என்ற புளுகு ..144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா?: வரலாறு சொல்லும் உண்மை!

thetimestamil.com-கார்த்திக் புகழேந்தி : சமீபமாக திருநெல்வேலி குறித்து
உறவினர்கள், நண்பர்கள் யாரிடமேனும் பேச்செடுத்தால், மறுவார்த்தையே “ஓ.. உங்க ஊரில் ‘தாமிரபணி மகா புஷ்கரணி’ ரொம்ப பேமஸாச்சே? ஊருக்குப் போறீங்களா புஷ்கரணிக்கு?” என்று தான் தொடர்கிறார்கள்.
அது என்ன புஷ்கரணி- புஷ்கரம் ?
இந்தியாவில் தென்கோடியில் தாமிரபரணி துவங்கி, சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா, ராபி, பியாஜ், ஜீலம், சென்னாப் என வற்றாத நதிகள் வெகுசில உண்டு. இவற்றில், சிந்து, கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, பிரம்மபுத்ரா, துங்கபத்ரை, பிராணகிதா போன்ற ஆறுகளைப் புண்ணிய தீர்த்தங்கள் என புராணங்கள் வாயிலாகவும், மத நம்பிக்கைகளின் அடிப்படையிலும் நீராடி, மலர்த்தூவி, தீபாராதனை காட்டி, வழிபடுகிற சடங்கிற்கு புஷ்கரம் என்று பெயர் சூட்டி வழங்குகின்றார்கள்.

ஆறுகளை வழிபடுவது இந்த நிலத்தின் தொன்மம். ‘ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் தாமிரபரணி’ என்பது வழக்கு. திருநெல்வேலியின் பூர்வாங்கம் தாமிரபரணியின் படித்துறைகளில் பொதிந்து கிடக்கிறது. ஆறும் ஊறும் கலந்துகிடக்கிற மக்களை இன்றும் நீங்கள் அங்குசென்றால் கண்ணாரக் கண்டடைய முடியும். மேல் தட்டு கீழ்தட்டு என்ற பாகுபாடுகள் எதையும் தனக்குள் கொள்ளாமல் அநேக மக்களின் அன்றாடப் பாடுகளுக்குள் கலந்துகிடக்கிற நதி அது.
அப்பேர்பட்ட தாமிரபரணிக்கு 144 ஆண்டுகளுக்குப் பிறகு புஷ்கர விழா நடைபெற இருக்கிறது. ஆனால், இன்று சொல்லப்படும் 144 ஆண்டுகளுக்கு முந்தைய, விருச்சிகத்தில் இருந்து கடகத்திற்கு இடம்பெயரும் நாட்களில் நடைபெறும் ‘தாமிரபரணி புஷ்கரம்’ எனும் இந்து மதக் கட்டுக் கதைகள் உண்மையானதா?
தாமிரபரணியில் இந்தப் புஷ்கர நிகழ்வை ஏற்பாடு செய்ய முன்னின்று உழைப்பவர்கள் காஞ்சி காமகோடி பீடத்து நிர்வாகிகள். இவர்கள்தான் “இந்த 144 ஆண்டுக்குப் பிறகு” என்ற போலி வரலாற்றைத் தாமிரபரணி ஆற்றின் மீது கட்டமைப்பவர்கள். கிமு. ஐந்தாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இயங்குகிற மடம் தங்களுடையது என்று காஞ்சி மடத்தின் தோற்றக்கதையிலே அடித்து விடுகிற இவர்களுக்கு இந்தக் காலகட்டப் பிரச்சனை ஒன்றும் பெரிய விஷயமில்லை.
இது 2018ம் ஆண்டு. இவர்களின் கணைக்குப்படி, 144 ஆண்டுகளுக்கு முன் புஷ்கரம் நடைபெற்றது என்றால் 1874ம் ஆண்டில் அப்படி ஓர் நிகழ்வு நடைபெற்றிருக்க வேண்டும். சற்றும் முன் அல்லது பின்னாக 1870 முதல் 1875 வரையிலான திருநெல்வேலி வரலாற்றைச் சரியாக அமர்ந்து வாசித்தால் இவர்களது முழுப் புரட்டும் பொய்யும் அம்பலம் ஏறிவிடும்.
1870ம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை திருநெல்வேலி ஜில்லாவில் ஆக்டிங் கலெக்டராக இருந்தவர் ஜே.ஆர்.அற்புத நாத். அவரையடுத்து மாவட்ட கலெக்ட்டராகப் பொறுப்பேற்ற ஆர்.கே.பக்கிள் 16 நவம்பர் 1870 முதல் 27 பிப்ரவரி 1874 வரை திருநெல்வேலி மாவட்ட கலெக்டராகப் பணிபுரிந்தவர். பின், நிர்வாக காரணங்களுக்காக அதே ஆண்டில் மட்டும் டபிள்யு.ஏ.ஹெப்பள், டபிள்யு.எச்.காமின் இருவரும் ஆக்டிங் கலெக்டராக மாற்றி மாற்றிப் பொறுப்பேற்றனர்.
1875 அக்டோபரில் 5ம் தேதியில் ஒருநாள் கலெக்டராக இருந்த ஹெப்பள்-க்குப் பிறகு, ஜே.பி.பென்னிங்டன் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரின் நேரடிப் அதிகாரத்திற்கு வருவதற்காக அடுத்த 13 நாட்களும் திருநெல்வேலி கலெக்டர் இல்லாத மாவட்டமாகவே இயங்கியது. 18 அக்டோபர் 1875ல் ஏ.ஜே.ஸ்டூவர்ட் மீண்டும் ஆக்டிங் கலெக்டராக வந்தபோதும் மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பு சீரான நிலைக்குத் திரும்பவில்லை.
மேற்சொன்ன மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எவருடைய குறிப்புகளிலும் தாமிரபரணி ஆற்றில் இப்படி ஒரு விழா நடைபெற்றதற்கான அறிவிப்புகளோ அல்லது அனுமதி வழங்கின குறிப்புகளோ கிடையாது. மாறாக, 1869, 1874, 1877 ஆகிய அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே மூன்று தடவை தாமிரபரணியில் பெருவெள்ளம் ஏற்பட்டு, கரைகள் உடைந்தன.
1869-74ம் ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலியின் ஆழ்வார் திருநகரி, திருவைகுண்டம், ஆத்தூர் தென்பகுதிகள் அளவிட முடியாத பாதிப்புகளைச் சந்தித்தன. 77ல் கொற்கை, கோரம்பள்ளம் நீர்த்தேக்கங்கள் உடைந்து விழுந்தன. 1868 முதல் 74 வரையிலான ஆண்டுகளைத் தாமிரபரணியின் சங்கடமான விளைவுகளை ஏற்படுத்திய ஆண்டுகள் என்றே வருணிக்கிறது கெஸட்ஸ் ஆஃப் திருநெல்வேலி வால்யூம் ஒன்று.
அதில் 1874ம் ஆண்டின் வெள்ளச்சேதம் பற்றிய குறிப்பு ஒன்று, “நவம்பர் 24ம் நாள் பாளையங்கோட்டை திரும்பவும் ஒரு பெரு வெள்ளத்துக்குத் தயாராகிவிட்டது. 1869ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் இது மூன்று அடி தான் குறைவு. திருநெல்வேலி கிருஷ்ணப்பேரி தேக்கங்கள் நிறைந்துவிட்டன. நயினார்குளம் நிரம்பி வழிந்து பயமுறுத்துகிறது. நெல்லையும் பாளையங்கோட்டையும் ஒன்றிலிருந்து ஒன்று முழுமையாகத் துண்டிக்கப் பட்டிருக்கின்றன. இடைப்பட்ட பகுதிகளில் இருநூறுக்கு மேற்பட்ட வீடுகளும், மக்களும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.” என்று தெரிவிக்கிறது.
ஆனால், இந்தக் காலகட்டத்தில் தான் தாமிரபரணி மகா புஷ்கரம் நடைபெற்றதாகக் காஞ்சி காமகோடி பீடம் தன் பொய்யான பரப்புரையை மேற்கொள்கிறது.
சரி மாவட்ட கெஸட் தான் பொய் சொல்லுகிறது என்றால், அதே காலகட்டத்தில் காஞ்சி பீடத்தில் ஆறாவது மடாதிபதியாகப் பொறுப்புக்கு வந்த சுதர்சன மகா தேவேந்திர சரசுவதி (1851லிருந்து 1891)யாவது உண்மையைச் சொல்லி இருக்கலாம். ஆனால் அவர், கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்த காரணத்தால் மடத்தின் கணக்குகளைக் கண்காணித்து வந்த அவரது சித்தப்பா கணபதி சாஸ்திரியால், தஞ்சை மன்னரின் உதவியோடு சிறை வைக்கப்பட்டது துவங்கி சிறையில் உண்ணாநோன்பிருந்தது வரைக்கும் அவரது அத்தனை கதையும் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது. அதில் காஞ்சி பீடத்தினரால், தாமிரபரணியில் மகா புஷ்கரம் நடைபெற்றதாக எங்கும் குறிப்பிட்டிருக்கவில்லை. ஏன்? உண்மையில் அப்படியோர் நிகழ்வு நடந்திருந்தால் தானே?
விவரங்கள் இப்படி இருக்க இவர்கள் எப்படி 144 ஆண்டுகள் முந்தைய புனித அடையாளத்தைத் தாமிரபரணி மீது புகுத்த முயல்கிறார்கள்? ஏன்? இங்கே தான் மதவாத விஷ்வ இந்து பரிஷத் உட்பட்ட அனைத்து காவி அடையாளங்களின் கரங்கள் வேலை செய்யத் துவங்குகின்றன. இவர்கள் முதலில் பொய்யை உண்மையென அறிவிப்பார்கள். அனைத்து பிராமணிய ஊடகங்களும் அவர்களுக்கு உறுதுணையாக மேற்படி பொய்யை உண்மை உண்மை என்று அறைகூவும். பிறகு மக்கள் வாய்மொழியில் இது நிஜம் தான் போல என்ற நம்பிக்கை உருவாகத் துவங்கும்.
இந்த மகா புஷ்கர நிகழ்விற்காக நதியின் கரைகளையும், துறைகளையும் கோயில் சாலைகளையும் புனரமைக்க மக்கள் வரிப்பணம் தான் செலவிடப்படும் என்றாலும் இவர்களது கைங்கரியத்தால் தங்களது மத அடையாளங்களை மக்களின் தொன்மங்களுக்குள் விசமமாகப் புகுத்தத் துவங்குவார்கள். எளிய மக்களின் அடையாளமாக விளங்கும் நாட்டார் தெய்வங்களை, ஆற்றங்கரைப் பள்ளிவாசல்களை, தேவாலயங்களை, எளிய மக்களின் இயற்கை வழிபாடுகளை அடையாளமிழக்கச் செய்து, அவற்றுக்கு காவிநிறம் பூசுவார்கள். எங்கள் அய்யனார் கோயில்களில் பின்னே நவக்கிரகங்கள் புகுந்ததெப்படி?
தாமிரபரணி ஆற்றங்கரை உலகின் தொன்மையான நாகரிக வெளி. ஆதிச்சநல்லூர் அதன் கண்டெடுக்கப்பட்ட எச்சம். அங்கே காவி மத அடையாளத்தின் பெயரால் தங்கள் அரசியல் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளும் பிராமணியச் சிந்தனையின் யுக்தியை, அதன் முன்பின்னுள்ள சக்திகள் எளிய மக்களின் பண்பாட்டுத் தொடர்ச்சியோடு பொருத்தி விளையாட்டுக் காண்பிக்கின்றன.
நம் மக்களிடம் இதுகுறித்து எதிர்க்கருத்தைச் சொன்னால், “என்னம்ன்னாலும் நம்மூருக்கு நல்லதுதான்ல செய்தான்” என்பார்கள். அவர்களிடம் விளங்கச் சொல்லிப் புரியவைப்பதில் சங்கடம்தான் எஞ்சும். ஊரின், நகரத்தின், தேசத்தின் முக்கியமான அடையாளங்கள் மீது கல்லெறிந்து, அந்த சலசலப்பிலே தங்களை வளர்க்கத் துடிக்கும் புத்திசீவிகள் காவிகள். கங்கை முதல் கன்னியாகுமரி வரை அவர்கள் அதைத்தான் செய்தார்கள் செய்வார்கள்.
தாமிரபரணி ஆறும், திருநெல்வேலி ஊரும் நம்முடையது. எனில், இந்தப் பொய்யும் புரட்டு செய்து கொண்டாடும் விழா யாருக்கானது. யாரோ ஒருத்தனாவது எதிர்த்து எழுதியதாக இருக்கட்டும் என்று இதை எழுதுகிறேன். இந்த மகா புஷ்கரம் குறித்து எழுதச் சொல்லிக் கேட்ட நண்பன் பிரகாஷ்க்கு நன்றி.
கார்த்திக் புகழேந்தி, பத்திரிகையாளர்; பதிப்பாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக