ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

LGBTQ சமூகத்தின் உரிமையை பொது சமூகத்தில் எப்படி எப்பொழுது பேச போகிரோம்? பேசுவீர்களா ?

Shalin Maria Lawrence : ஒரு தீர்ப்பு -கேள்விகள் ஆயிரம்
நல்ல தீர்ப்பு.கடந்த வருடம் இந்த தீர்ப்புக்காக மனதுக்குள் வேண்டிக்கொண்டது நியாபகம் வருகிறது.மனது மகிழ்ச்சியாக இருக்கிறது.எனது நண்பர்கள் பலரும் இந்த தீர்ப்பினால் பயனடைவார்கள் என்பது இந்த தீர்ப்பின் வெற்றியை மனதுக்கு நெருக்கமாக ஆக்குகிறது.
ஆனால் ...இரண்டு விஷயங்கள்
1.சாதி மறுப்பு திருமணங்கள் ,காதல் திருமணங்கள் ,மத மறுப்பு திருமணங்கள் போன்ற பல திருமண முறைகள் இந்தியாவில் சட்டபூர்வமாக செல்லும்.இவை எதுவுமே கிரிமினல் குற்றம் கிடையாது.வயதுக்கு வந்த இரண்டு பேர் தங்களுக்கு பிடித்தவர்களோடு வாழலாம் என்று இந்திய சட்டம் சொல்லுகிறது .ஆனால் நிஜத்தில் இது இன்னும் கூட முழுமையாக சாத்தியமாகும் வாய்ப்பில்லாமல் இருக்கிறது.
இன்னும் கூட வரன் பார்த்து திருமணம் செய்யும் பழக்க இருப்பதால் காதலுக்கு எதிர்ப்பு நீடிக்கிறது.
சாதி மறுப்பு திருமணங்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மிக மிக குறைந்த அளவில் நடக்கிறது. வெறும் 1% தான்.
அதற்கு தலைகீழாக அதிகமான ஆணவகொலைகள் தமிழகத்தில் தான் நடக்கின்றன.

ஆக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவே இங்கே இன்னும் அவர்களின் சித்தம்போல் நடக்காத பொழுது இங்கே தன்பாலின உறவு திருமணங்களின் நிலை குறித்த கவலை அதிகரிக்கிறது. ஏனென்றால் இனி சட்டரீதியாக அது குற்றம் இல்லை என்பதனால் பலரும் இனி திருமணம் செய்து கொள்ள முற்படுவார்கள். அப்பொழுது அவர்களின் பெற்றோர் இந்த காதல்களை ஏற்றுக்கொள்வார்களா ,ஆணவ கொலை செய்யப்படுவார்களா ,அதையும் மீறி திருமணம் செய்தால் அவர்களை இந்த சமூகம் எப்படி அங்கீகரிக்க போகிறது என்கிற கேள்விகளும் எழுகிறன.
அவர்களின் பாதுகாப்பு ,அவர்களுக்கான நிதி உதவி ,சமூகத்தில் இது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் இவர்கள் பாதுகாப்புக்கென SC/ST வன் தடுப்பு சட்டம் போல ஒரு சட்டம் போன்ற விஷயங்களை அரசு எப்படி கையாள போகிறது என்பதே எனது முக்கிய கேள்வியாக இந்த அரசுக்கும் கட்சிகளுக்கும் இங்கே முன் வைக்கிறேன்.
2.பெண் பெண் உறவு ,திருநங்கைகள் ,ஆண் ஆண் உறவு வரை பகுத்தறிவாளர்களின் மத்தியில் அறிவு இருக்கிறது ஆனால் இன்னும் கூட பொது சமூகத்தில் இது தொடர்பான விழிப்புணர்வு மிக மிக குறைவே.
திருநங்கைக்கும் ,தன்பால் ஈர்ப்பாளரான ஒரு ஆணுக்கும் கூட வித்தியாசம் தெரியாமல்தான் பொது சமூகம் முகம் சுளித்து கொண்டிருக்கிறது .
இதெல்லாம் இயற்கை என்கிற அறிவும் இவர்களில் 90% பேருக்கும் இல்லை.
தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் பலதும் இதை பற்றி வாய் திறப்பதில்லை இல்லை என்றால் இவர்களை அசிங்கமாக தூற்றி கொண்டிருக்கும் மன நிலையில் இருக்கிறார்கள்.
குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த பகுத்தறிவு பேசும் இயக்கங்கள் மற்றும் அம்பேத்கரிய இயக்கங்கள் இன்னும் LGBTQ விஷயத்தை பேசவும் செயல்படுத்தவும் தயங்குகின்றனர்.இவர்களுக்கு இயல்பாகவே இந்த விசயத்தில் ஒரு mind block இருக்கிறது.
Inclusive development அதாவது ஒன்றுசேர்ந்த வளர்ச்சியில் தலித்துகள் ,பெண்கள் பங்கீடு போல் LGBTQ சமூகத்தின் பங்களிப்பும் தேவை என்பதனை உணராதவர்களாக இருக்கிறார்கள் பகுத்தறிவாதிகளே.
இந்த நிலையில் பொது சமூகத்தை எப்படி திருத்துவது?
நிலைமை இப்படி இருக்க எப்பொழுது நாம் bisexual (இருபால் ஈர்ப்பாளர்கள் ) ,queer (பாலின அடையாளமற்றவர்கள் பற்றி எல்லாம் தெரிந்து புரிந்து கொள்ளுவது?
எனது அடுத்த முக்கிய கேள்வி பகுத்தறிவாளர்களுக்கும் ,கள போராளிகளுக்கும்.
LGBTQ சமூகத்தின் உரிமையை நாம் பொது சமூகத்தில் எப்படி எப்பொழுது பேச போகிறீர்கள்? பேசுவீர்களா ?
கேள்விகளோடு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஷாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக