ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

ஸ்டெர்லைட்: அதிகளவில் எதிர்ப்பு மனுக்கள்!

மின்னம்பலம் :
ஸ்டெர்லைட்: அதிகளவில் எதிர்ப்பு மனுக்கள்!
ஸ்டெர்லைட் ஆய்வுக்கான ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் இன்று நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்தில், ஆலைக்கு எதிராக அதிகளவில் மக்கள் மனுக்கள் அளித்துள்ளனர். இந்த கூட்டம் நடைபெற்றபோது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மற்றும் ஆதரவு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால், அந்த இடத்தில் பரபரப்பு உண்டானது.
கடந்த மே 28ஆம் தேதியன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையைப் பிறப்பித்தது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு. இதனை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலையை நடத்திவரும் வேதாந்தா குழுமம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தை நாடியது. வழக்கு விசாரணையில், ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது பசுமைத் தீர்ப்பாயம்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஆனாலும், ஸ்டெர்லைட் ஆலை ஆய்வுக்குழுவின் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது உச்ச நீதிமன்றம். மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், ஆய்வு நடவடிக்கைகளுக்குத் துணை நிற்பதாகத் தமிழக அரசுக்குப் பதிலளித்தது.
தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் நேற்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரக் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இன்றும் அவர்களது ஆய்வு தொடர்ந்தது. இதன் பின்னர் குமரெட்டியாபுரம், தெற்கு ரெட்டியார்புரம் கிராமங்களில் ஆய்வு செய்தனர். குமரெட்டியாபுரம் கிராமத்தில் தான், கடந்த பிப்ரவரி மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100 நாள் போராட்டம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், ஸ்டெர்லைட் ஆலை குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று (செப்டம்பர் 23) நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் மக்களின் மனுக்களைப் பெற்றுக்கொண்டனர். இந்த கூட்டத்துக்கு வந்த சிலர், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு அளிக்க வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள், இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்; சிலர், ஸ்டெர்லைட் ஆதரவாளர்களைத் தாக்க முயற்சித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்பகுதியில் அதிகளவில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால், பிரச்சினை பெரிதாகாமல் தடுக்கப்பட்டது. பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றபிறகு நீதிபதி தருண் அகர்வால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அதிகளவில் மனுக்கள் வந்ததாகத் தெரிவித்தார்.
முன்னதாக, ஸ்டெர்லைட் ஆய்வு குறித்து ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தருண் அகர்வால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக