ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

ஆந்திரா: இந்நாள் , முன்னாள் எம்.எல்.ஏக்கள் சுட்டுக் கொலை!

ஆந்திரா:  எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ  சுட்டுக் கொலை!மின்னம்பலம்: ஆந்திர மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ், முன்னாள் எம்.எல்.ஏ ஷிவாரி சோமா ஆகிய இருவரையும் மாவோயிஸ்டுகள் இன்று சுட்டுக் கொன்றனர்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அரக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கிடாரி சர்வேஸ்வர ராவும், முன்னாள் எம்.எல்.ஏ.வான ஷிவாரி சோமாவும், அரக்கிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள லிவிட்டிபூட் என்னும் கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பியுள்ளனர்.
எம்.எல்.ஏ கார் தம்ரிகுண்டா வனப்பகுதிக்குட்பட்ட பகுதியின் வழியே வரும்போது, அவர்கள் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் எம்.எல்.ஏ சம்பவ இடத்திலேயே பலியானார். தாக்குதலில் படுகாயமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஷிவாரி சோமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதுகுறித்து விசாகப்பட்டினம் சரக டிஐஜி ஸ்ரீகாந்த் தெரிவிக்கையில், “மாவோயிஸ்டுகளின் ஒரு குழு எம்.எல்.ஏ சர்வேஸ்வர ராவின் காரை மறித்துள்ளனர். இதனால் எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு அதிகாரிகளும், ஷிவாரி சோமாவும் கீழே இறங்கியுள்ளனர். தொடர்ந்து ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் மூலம் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எம்.எல்.ஏ சர்வேஸ்வர ராவும், முன்னாள் எம்.எல்.ஏ ஷிவாரி சோமாவும் பலியானர் ” என்றார்.
மாவோயிஸ்ட் இயக்கத்தின் ஆந்திரா-ஒடிசா எல்லைப்பகுதி செயலாளர் ராமகிருஷ்ணா இச்சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிடாரி சர்வேஸ்வர ராவுக்கு மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து எச்சரிக்கை வந்ததாகவும், இதுதொடர்பாக காவல் துறையினருக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “ராவ்வின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
2014 சட்டமன்றத் தேர்தலில் பழங்குடியின தொகுதியான அரக்கிலிருந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்ட சர்வேஸ்வர ராவ், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். இவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவர்தான் சோமா என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக