புதன், 12 செப்டம்பர், 2018

அழகிரி : கலைஞர் கட்சியில் சேர அழைத்தும் செல்லவில்லை

மதுரை : 'தி.மு.க., தலைவர் கலைஞர்  இருந்தபோது கட்சியில் சேர
அழைத்தும் நான் செல்லவில்லை' என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அவரது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.
மறைவிற்கு பின் அவரது நினைவாக சென்னையில் பேரணியை அழகிரி நடத்தினார். நேற்று முன்தினம் அவர் மதுரை திரும்பினார். மாவட்டம் வாரியாக ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார். நேற்று தேனி மாவட்டத்தினரை சந்தித்தார். உடன் முன்னாள் துணை மேயர் மன்னன், இசக்கிமுத்து உள்ளிட்டோர் இருந்தனர். சந்திப்பின்போது ஆதரவாளர்கள் பேசியதாவது: மாவட்டம் வாரியாக தி.மு.க., அதிருப்தி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் நீங்கள் சுற்றுப்பயணம் செய்தால் உண்மை நிலை தெரியும். உங்கள் பின் வருவதற்கு தயாராக உள்ளனர். கலைஞர்  பெயரில் பெரிய இயக்கம் துவங்கி, கட்சியில் நம்மை மீண்டும் சேர்க்க வைக்கும் அளவிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தினர்.


அவர்களிடம் அழகிரி பேசியதாவது: கட்சியில் சேர்க்க அவர்கள் தயாராக இல்லை. கலைஞர்  இருந்தபோது அவரை அடிக்கடி பார்க்க செல்வேன். 2016 சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து அவரிடம் அதிருப்தி தெரிவித்தேன். அப்போது, 'இவர்கள் நிர்வாகம் தெரியாதவர்களாக உள்ளனர். உனக்கான நேரம் வரும். அப்போது வா. தோல்வியுற்ற பின் அவர்களே உன்னை தேடி வருவார்கள். அதுவரை காத்திரு' என தெரிவித்தார். அப்போதுதான், 'கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை' என நான் வெளிப்படையாக தெரிவித்தேன்.< கடைசி நேரத்தில் கருணாநிதியின் உடல்நலம் கருதி எவ்வித நிர்பந்தமும் கொடுக்காமல் அமைதி காத்தேன். கலைஞர்  அழைத்தும் செல்லாமல் இருந்து விட்டேன். மாவட்டம் வாரியாக ஆதரவாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள், என்றார்.

நிருபர்களிடம் அழகிரி கூறுகையில், ''பேரணி வெற்றிக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், திருப்பரங்குன்றம். திருவாரூர் தொகுதிகள் இடைத்தேர்தல் குறித்தும் ஆதரவாளர்கள் ஆலோசனைகள் தெரிவித்தனர். மாவட்ட வாரியாக ஆதரவாளர்களை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.  தினமலர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக