சனி, 22 செப்டம்பர், 2018

ரகசிய வீடியோவை வைத்து எம்எல்ஏக்களை பணிய வைத்த குமாரசாமி - ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது

ரகசிய வீடியோவை வைத்து எம்எல்ஏக்களை பணிய வைத்த குமாரசாமி - ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது
மாலைமலர் : பா.ஜனதா நடத்திய குதிரை பேர வீடியோ சிக்கி இருப்பதாகவும், அதை வைத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப் போவதாக குமாரசாமி எச்சரித்ததையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சமாதானமாகி உள்ளனர். பெங்களூரு: கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் ஜே.டி.எஸ். - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்தது. இதனால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவர் நேரடியாகவே மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் ஆட்சியை கவிழ்க்க சதியில் ஈடுபடும் பா.ஜனதா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜே.டி.எஸ். கட்சி சார்பில் கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.


அதில் எங்கள் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் கவுடாவை பா. ஜனதா கட்சியினர் தொடர்பு கொண்டு ரூ.30 கோடி கொடுப்பதாக பேரம் பேசி உள்ளனர். இதேபோல் எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எச்.கே.குமாரசாமி, சீனிவாசமூர்த்தி, தேவானந்த சவுகான், காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பி.சி.பட்டீல், எம்.டி.பி. நாகராஜ், சிவள்ளி, ரமேஷ் ஜார்கிகோளி, ரகீம்கான் உள்ளிட்டோரிடமும் பா.ஜனதா கட்சியினர் பேரம் பேசி இருக்கிறார்கள்.

எனவே குதிரை பேரத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

பின்னர் முதல்-மந்திரி குமாரசாமி கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையாவை நேரில் சந்தித்து பேசினார்.

துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் ஆபரே‌ஷன் தாமரை திட்டத்தை எப்படி முறியடிப்பது, காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். எம்.எல்.எ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவாமல் பாதுகாப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.



இதில் எம்.எல்.ஏக்களுடன் பா. ஜனதா நடத்திய குதிரை பேரம் தொடர்பான ஆடியோ-வீடியோ சிக்கி இருப்பதாகவும் அதை வைத்து எம்.எல்.ஏ.க்கள் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரை கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் குமாரசாமி யோசனை தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் குமாரசாமி போனில் பேசினார். குதிரை பேர வீடியோ தன்னிடம் சிக்கி இருப்பதாகவும் இதை வைத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்தார்.

இதைத்தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சமாதானமாகி பணிந்தனர். இதனால் தற்காலிகமாக குமாரசாமி ஆட்சிக்கு நெருக்கடி நீங்கியது.

இதேபோல் காங்கிரஸ் தரப்பிலும் தங்கள் கட்சி அதிருப்தி எம்.எல்.ஏக் களுடன் பேச்சு நடத்தி சமாதானம் செய்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஹாசனில் இன்று (சனிக்கிழமை) மாலை ஒரு தனியார் ஓட்டலில் நடக்கிறது. இதில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரே ஓட்டலில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும், கூட்டணி அரசுக்கு எழுந்து உள்ள சிக்கல் தீரும் வரை எம்.எல்.ஏ.க்களை ஒரே இடத்தில் வைத்துக்கொள்ள குமாரசாமி விரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக