ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

யோகேந்திர யாதவ் கைது.. அதிமுக உரிய விலைகொடுக்க நேரிடும்: .ஸ்டாலின் கண்டனம் ,, சமுக ஆர்வலர் ...

யோகேந்திர யாதவ், - மு.க.ஸ்டாலின்
THE HINDU TAMIL :  சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்திக்கச் சென்ற  யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலம் - சென்னை இடையே எட்டுவழிச்சாலை அமைக்க விவசாய நிலம் எடுக்கப்படுவதைக் கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் எட்டுவழிச்சாலைக்கு எதிரான போராட்டக்குழுவினர் அழைப்பின் பேரில் ஸ்வராஜ் அபியான் அமைப்பின் தலைவரும், சமூக செயற்பாட்டாளருமான யோகேந்திர யாதவ் இன்று அங்குச் சென்றார். செங்கம் அருகே காரில் சென்றபோது அவரும், அவரது ஆதரவாளர்களும் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
‘‘சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த யோகேந்திர யாதவை தடுத்து நிறுத்தி கைது செய்ததை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களுக்கு ஜனநாயக உரிமையை மறுத்து, போராட அனுமதிக்காமல், விருப்பத்துக்கு எதிராகச் செயல்படும் சகிப்புத்தன்மையற்ற அதிமுக அரசு உரிய விலையைக் கொடுக்க வேண்டியது இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக