ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

புதிய டிவி சேனல் - பன்னீருக்கு செக் வைத்த எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை:  டிவி சேனல் - பன்னீருக்கு செக் வைத்த எடப்பாடிமின்னம்பலம் : ’அதிமுகவின் சேனலாக இருந்த ஜெயா டிவி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன் சேனலாக மாறிப்போனது. அதே போல அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு நமது எம்.ஜி.ஆரும், தினகரன் ஆதரவு பத்திரிகையானது. எடப்பாடியும் பன்னீரும் கை கோர்த்த பிறகு நமது அம்மா என்ற பெயரில் பத்திரிகை தொடங்கிவிட்டார்கள். அடுத்து சேனல் ஆரம்பிக்கலாம் என்ற பேச்சு வந்தபோது பல ஐடியாக்கள் சொல்லப்பட்டது. இருக்கும் சேனலில் ஒன்றை வாங்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சிலரோ, புதிதாக நமக்கான அடையாளத்துடன் தொடங்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள்.
கட்சியின் சொத்தாக டிவி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. ஜெயா டிவி, கலைஞர் டிவி, மெகா டிவி, மக்கள் டிவி, வெளிச்சம் டிவி எல்லாமே கட்சி சார்ந்து இருந்தாலும் கட்சியின் சொத்தாக இல்லை. வேறு ஒருவர் உரிமையாளராக இருப்பார். ஆனால், அது கட்சியின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சேனலாக இருக்கும்.

இனி, தொடங்கப் போகும் சேனலும் அப்படித்தான் இருக்க வேண்டும். அதை யார் தொடங்கப் போகிறார்கள் என கேட்க வேண்டும் என்றும் சிலர் ஐடியா கொடுத்திருக்கிறார்கள். அப்படி, கேட்கப்பட்ட போது, அமைச்சர்கள் தங்கமணியும், சி.வி.சண்முகமும் நாங்களே சேனலை தொடங்குகிறோம் என முன் வந்திருக்கிறார்கள். அதிமுக தலைமையும் அதற்கு அனுமதி கொடுக்க, கிடு கிடுவென வேலைகளை தொடங்கியிருக்கிறார்கள். சி.வி.சண்முகத்தின் தம்பி ராதாகிருஷ்ணன் தான் சேனல் உரிமையாளர். அமைச்சர் தங்கமணியின் மருமகன் தான் தலைமை அதிகாரி. சேனலுக்கு நியூஸ் ஜெ என பெயர் சூட்டி ஆள் எடுக்கும் படலம் தொடங்கியது. ஒருகாலத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இருந்த சக்சேனா தான் இந்த டிவிக்கு தலைமை அட்வைஸர்.

அடையாறு மலர் ஹாஸ்பிட்டலுக்கு அருகேதான் சேனலுக்காக ஒரு இடம் வாடகைக்கு எடுக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜையும் போடப்பட்டது. பூஜைக்கு முதல்வரையும், துணை முதல்வரையும் அழைத்திருக்கிறார்கள். ‘பூஜைக்கே நாங்க வந்தால் நல்லா இருக்காது. ஒரு சேனலை எப்படி ஆரம்பிக்கணுமோ அப்படி ஆரம்பிங்க. அதுவரைக்கும் அரசியல் சாயம் பூச வேண்டாம். நாங்க யாரும் அந்தப் பக்கம் வரவே மாட்டோம். சேனல் தொடங்கிய பிறகு என்ன செய்யலாம்னு திட்டமிட்டுக்கலாம். மத்தபடி என்ன உதவிகள் வேணுமோ கேளுங்க.. அதை செஞ்சு கொடுக்கிறோம்..’ என்று சொல்லிவிட்டாராம் எடப்பாடி. சேனல் துவக்கவிழாவில் முதல்வரும் துணை முதல்வரும் வந்து நிற்பார்கள். அதுவரை இருவரும் அமைதியாகவே இருப்பார்கள் என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ” என்பதுதான் அப்போது நான் சொன்ன தகவல்.
இதோ எடப்பாடியும் பன்னீரும் வந்துவிட்டார்கள். வரும் 12ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நியூஸ் ஜெ சேனலின் லோகோ, மொபைல் ஆப், இணையதளம் லாஞ்ச் செய்யும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடியும் பன்னீரும் சேர்ந்துதான் இதை தொடங்கி வைக்கிறார்கள். ‘நியூஸ் என்பது சிவப்பு நிறத்திலும் ஜெ என்பது பச்சை நிறத்திலும் வர வேண்டும் என்பது எடப்பாடி ஐடியாவாம்.
சேனலுக்கான வேலைகள் தொடங்கப்பட்ட போது அதில் எதுவும் தலையிடாமல் இருந்த எடப்பாடி, இப்போது சேனல் தொடர்பாக எல்லா அப்டேட்களையும் கேட்க ஆரம்பித்துவிட்டாராம்.
‘டிவி இருந்தாலும் செல்போனில்தான் இப்போ எல்லோரும் அதிகமாக பார்க்கிறாங்க. அதனால் முதலில் மொபைலில் பார்க்கும் வசதியை கொண்டு வருவோம். டிவியில் என்னவெல்லாம் கொடுக்க நினைக்கிறோமோ அதை செல்போனில் கொடுங்க. டிவிக்கான செட் அப் ரெடியாக இருக்கட்டும். முதல்ல எல்லோருடைய கைக்கும் சேனலை கொண்டு போக செல்போன் தான் சரியான வழியாக இருக்கும்.
செய்திகள், பேட்டிகள், விவாத நிகழ்ச்சிகள் என எல்லாமே செல்போனில் பார்க்கிற மாதிரி கொடுங்க. சேனல்ல கட்சிக்காரங்க யாரும் தலையிட மாட்டாங்க. அப்படி எதுவும் யாரும் குறுக்கிட்டால் உடனடியாக என்னோட கவனத்துக்கு கொண்டு வாங்க’ என்று சொல்லியிருக்கிறாராம் எடப்பாடி. இதன் பொருள் பன்னீர் என்ன சொன்னாலும் என்னைக் கேட்டே முடிவெடுங்கள் என்பதுதான். ஒருவேளை கட்சியில் நாளை மீண்டும் பிரச்னை ஏற்பட்டால் கூட சேனல் தன்னிடம் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார் எடப்பாடி. அதனால்தான் ஆரம்பத்தில் கண்டுகொள்ளமால் விட்ட சேனல் பணிகளை இப்போது மிகவும் இழுத்துப் போட்டுக்கொண்டு கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்.
’சேனலை பொறுத்தவரை முழு சுதந்திரத்தோடு செயல்படணும். நம்ம ஆட்சி இருக்கும் வரைதான் சேனல் இருக்கும் என்றெல்லாம் கூட வெளியில் பேசுறாங்களாம். அப்படி ஒரு நிலை வந்துடக்கூடாது. அதுக்கு நாம தரமான நிகழ்ச்சிகளை கொடுத்து பார்க்கிறவங்களை நம்ம பக்கம் இழுக்கணும். பணம்தான் எங்களால் செலவு செய்ய முடியும். நல்லதை கொடுக்க அந்த விஷயங்கள் தெரிஞ்ச ஆட்களால்தான் முடியும். அப்படிப்பட்டவங்களை எல்லாம் புடிச்சுப் போடுங்க. ’என்றும் அட்வைஸ் செய்திருக்கிறார் முதல்வர். 12 ஆம் தேதி சேனல் துவக்கவிழாவில் இன்னும் பல அதிரடிகள் இருக்கும் என்கிறார்கள்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக