சனி, 29 செப்டம்பர், 2018

மோடி- பாசிசத்தின் பிம்பம்.

சவுக்கு : அரசியல் விஞ்ஞானியான டாக்டர் லாரன்ஸ் பிரிட், பாசிசம் தொடர்பாக ஒரு கட்டுரையை (பாசிசம் எனிஒன்? பிரி என்குவய்ரி, ஸ்பிரிங் 2003, ப 20) எழுதினார். ஹிட்லர் (ஜெர்மனி), முசோலினி (இத்தாலி), பினான்கோ (ஸ்பெயின்), சுகர்த்தோ (இந்தோனேசியா), பினோசெட் (சிலி), ஆகிய பாசிச ஆட்சியாளர்களை ஆய்வு செய்த பிரிட், அவர்களிடையே 14 அம்சங்கள் பொதுவாக இருப்பதைக் கண்டறிந்தார். இவற்றை பாசிசத்தின் அடையாளக் கூறுகள் என
குறிப்பிடுகிறார். அதன்படி, பாசிசத்தின் 14 முக்கிய அம்சங்கள் வருமாறு:
சக்தி வாய்ந்த, தொடரும் தேசியவாதம்
பாசிச ஆட்சியாளர்கள், தேசப்பற்று சார்ந்த இலட்சியங்கள், கோஷங்கள், அடையாளங்கள், பாடல்கள் மற்றும் பிற உபகரணங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள். கொடிகள் எல்லா இடங்களிலும் இருக்கும். ஆடைகள் மற்றும் பொது இடங்களிலும் கொடிகளைப் பார்க்கலாம்..
மனித உரிமைகளை அங்கீகரிக்க மறுப்பு
 எதிரி மீதான அச்சம், பாதுகாப்பு தொடர்பான தேவை காரணமாக, பாசிச அரசின் கீழ் உள்ள மக்கள், சில நேரங்களில் தேவை காரணமாக மனித உரிமைகளை அலட்சியம் செய்யலாம் என நம்ப வைக்கப்படுகின்றனர். சித்திரவதை, விசாரணை இல்லாத தூக்கு தண்டனை, படுகொலைகள், கைதிகளின் நீண்ட சிறைவாசம் ஆகியவற்றை மக்கள் கண்டும் காணாமல் இருக்கின்றனர் அல்லது ஆங்கீகரிக்கவும் செய்கின்றனர்.

எதிரிகள் அல்லது பலிகடாக்களை அடையாளம் காண்பதன் மூலம் ஒற்றுமையை ஏற்படுத்துவது
இனம், மரபு அல்லது மதம் சார்ந்த சிறுபான்மையினர், தாராளவாதிகள், கம்யூனிஸ்ட்கள், சோஷலிசவாதிகள், தீவிரவாதிகள் போன்ற பொதுவான எதிரி அல்லது அச்சுறுத்தல் எனக் கருதப்படும் பிரிவினரை அழிப்பதற்காக தேசப்பற்றின் கீழ் மக்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றனர்.
இராணுவ ஆதிக்கம் 
உள்ளூரில் பரவலான பிரச்சினைகள் இருந்தாலும், உள்ளூர் பிரச்சினைகள் அலட்சியம் செய்யப்பட்டு, இராணுவத்திற்கு அளவுக்கு அதிகமான அரசி நிதி வழங்கப்படுவது. ராணுவ வீரர்களும் ராணுவப் பணியும் கொண்டாடப்படுவது.
ஆணாதிக்கம் 
பாசிச தேசங்களின் அரசுகள் பெரும்பாலும் ஆண் மையப் போக்கு கொண்டவை. பாசிச அரசுகளில், மரபார்ந்த பாலினப் பாத்திரங்கள் மிகவும் தீவிரமாகின்றன. கருச்சிதைவுக்கான எதிர்ப்பு அதிகமாகிறது. ஓரினச் சேர்க்கை எதிர்ப்பு, தேசிய கொள்கை ஆகியவை தீவிரமாகின்றன.
ஊடகக் கட்டுப்பாடு
சில நேரங்களில் ஊடகங்கள் நேரடியாக அரசால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மற்ற நேரங்களில், அரசுக் கட்டுப்பாட்டு அல்லது அரசு சார்பு கொண்ட ஊடகச் செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் மறைமுகமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. தணிக்கை, குறிப்பாக போரின்போது சகஜமாக இருக்கிறது.
தேசியப் பாதுகாப்பு மீது அதீதப் பற்று
மக்கள் உணர்வுகளை ஒருங்கிணைக்க அரசு பாதுகாப்பு அச்சத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது.
அரசுடன் இணையும் மதம் 
பாசிச தேசங்களின் அரசுகள், மக்கள் கருத்தை வடிவமைக்க தேசத்தின் பொதுவான மதத்தைப் பயன்படுத்துகின்றன. மதத்தின் முக்கியக் கோட்பாடுகள் அரசின் செயல்கள் அல்லது கொள்கைகளுக்கு நேர் எதிராக இருந்தால்கூட, அரசின் தலைவர்கள் மதம் சார்ந்த முழக்கங்கள் மற்றும் சொல்லாடல்களை அதிகக் பயன்படுத்துகின்றனர்.
பெருநிறுவனங்களுக்குப் பாதுகாப்பு 
பாசிச தேசங்களில் பெரும்பாலும், தொழில் மற்றும் வர்த்தகப் பெரும்புள்ளிகள்தான் அரசுத் தலைவர்களைப் பதவியில் அமர்த்துகிறார்கள். எனவே, வர்த்தகம் மற்றும் அரசு அதிகாரம் இடையே பரஸ்பரம் நலன் பயக்கும் உறவு உண்டாகிறது.
தொழிலாளர் ஆற்றல் ஒடுக்கப்படுதல்
பாசிச அதிகாரத்துக்கு எதிராகத் திரளும் ஆற்றல் தொழிலாளர்களிடம் இருப்பதால், தொழிற்சங்கங்கள் முற்றிலும் அகற்றப்படுகின்றன அல்லது ஒடுக்கப்படுகின்றன.
அறிவுஜீவிகள், கலைகளுக்கு வாய்ப்பூட்டு
பாசிச தேசங்களில், உயர் கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு எதிரான வெளிப்படையான எதிர்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது. பேராசிரியர்களும் கல்வியாளர்களும் கைது செய்யப்படுவது அல்லது கண்காணிக்கப்படுவது வழக்கமாகிறது. கலையில் சுதந்திர வெளிப்பாடு கண்டிக்கப்படுகிறது. அரசு கலைகளுக்கு நிதி அளிக்க மறுக்கிறது.
குற்றம், தண்டனை ஆகியவற்றின் மீதான மோகம் 
பாசிச அரசாங்கங்களின் கீழ், காவல் துறைக்கு சட்டத்தை அமல் செய்ய எல்லையில்லா அதிகாரம் அளிக்கப்படுகிறது. தேசப்பற்றின் பெயரில் மக்கள் காவல் துறை அத்துமீறலைக் கண்டும் காணாமல் இருக்கவும் சிவில் உரிமைகளை விட்டு கொடுக்கவும் தயாராக உள்ளனர். பாசிச தேசங்களில், பொதுவாக தேசியக் காவல் படை எல்லையில்லா அதிகாரங்களுடன் இருக்கும்.
குடும்ப ஆட்சி மற்றும் ஊழல் 
பாசிச அரசுகள் பெரும்பாலும், நண்பர்கள் மற்றும் சகாக்கள் குழுவால் நடத்தப்படுகின்றன. இவர்கள் தங்களைப் பரஸ்பரம் அரசு பதவிகளில் நியமித்துக்கொண்டு, அரசு அதிகாரம் மற்றும் பதவிகளைக் கொண்டு, நண்பர்களையும் வேண்டியவர்களையும் பதில் சொல்லும் பொறுபிலிருந்து காக்கவும் பயன்படுத்துவார்கள். பாசிச ஆட்சியில், தேசிய வளங்கள் மற்றும் பொக்கிஷங்கள் அரசு தலைவர்களால் சுரண்டப்படுவது அல்லது கொள்ளையடிக்கப்படுவது சகஜம்.
தேர்தல் மோசடிகள்
பாசிச தேசங்களில் சில நேரங்களில் தேர்தல் என்பது கேலிக்கூத்தாக அமைகின்றன. மற்ற நேரங்களில், எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரம் அல்லது அவர்களைப் படுகொலை செய்தல் ஆகியவற்றின் மூலம் தேர்தல் தகிடுதத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. வாக்குப் பதிவு எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல், அரசியல் சார்ந்த மாவட்ட எல்லைகளை மாற்றுதல், ஊடகத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்குச் சட்டத்தைப் பயன்படுத்தபடுகின்றன. பாசிச தேசங்கள் தேர்தலைக் கட்டுப்படுத்த அல்லது தீர்மானிக்கப் பெரும்பாலும் நீதித்துறையைப் பயன்படுத்துகின்றன.
லாரன்ஸ் பிரிட்
நன்றி: Free Inquiry magazine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக