செவ்வாய், 11 செப்டம்பர், 2018

திமுகவின் மாலை நேரப் பள்ளிக்கூடங்களுக்கு புத்துயிர் வழங்கப்படுமா?

nakkheeran.in - athanurchozhan" கொள்கை சார்ந்த இயக்கமான திமுக, தனது
கொள்கைளை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க மிகப்பெரிய பேச்சாளர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தது. திமுகவின் பேச்சாளர்கள் என்றால் அவர்களுக்கு தனி மரியாதை இருந்தது. தமிழகம், இந்தியா, உலகம் என்று
அவர்கள் புள்ளிவிவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள். திராவிடர் கழகத்தில் பெரியாரின் சீடர்களாய் கொள்கைகளை மேடைகளில் முழங்கிய அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தில் உலக அரசியலை தமிழர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள். திமுக பொதுக்கூட்டங்களை மாலை நேரத்து பள்ளிக்கூடங்கள் என்று அண்ணாவும் கலைஞரும் கூறியிருக்கிறார்கள்.< தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வதைக் காட்டிலும் தங்களை பேச்சாளர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவதாக அண்ணா உள்ளிட்ட திமுகவின் முன்னணி தலைவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். திமுகவின் முன்னணி பேச்சாளர்கள் தங்களுடன் இளம் பேச்சாளர்களையும் வளர்த்து விட்டார்கள். திமுகவில் இலக்கிய அணி சார்பில் பேச்சாளர்களை கண்டுபிடித்து ஊக்குவித்தார்கள். தலைமைக்கழகம் சார்பில் பேச்சாளர் பயிற்சி பட்டறைகள் அடிக்கடி நடத்தப்படும்.
திமுகவின் உடன்பிறப்புகளுக்காக மட்டுமின்றி, கழகத்தின் பேச்சாளர்களுக்காகவும்தான் கலைஞர் முரசொலியில் கடிதங்களை எழுதினார். அவருடைய கடிதங்கள் எதைக் கோடுகாட்டுகிறதோ அதைக் குறித்தே பேச்சாளர்கள் தமிழகம் முழுவதம் பேசுவார்கள். தொலைக்காட்சி மீடியாவும், மொபைல் போன்களில் அன்றாட செய்திகளும் விமர்சனங்களும் வந்தபிறகு கூட்டம் கேட்கும் ஆர்வம் குறைந்துவிட்டதாக ஒரு தவறான பார்வை உருவாக்கப்படுகிறது.

இதையே காரணம்காட்டி திமுக சார்பில் அரசியல் பொதுக்கூட்டங்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்டங்களை மட்டுமே நம்பியிருக்கும் பேச்சாளர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தருவது தலைமையின் கடமை. மீட்டிங் இருந்தால்தான் ஈட்டிங் என்று முன்னணி பேச்சாளர்கள் கூறுவது உண்டு.

பொதுக்கூட்டத்துக்கு அதிக செலவாகிறது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. அந்த அளவுக்கு கொண்டு சென்றது யார்? மாவட்டச் செயலாளர்கள்தான். எளிமையான மேடைகள் திமுகவின் அடையாளமாக இருந்தது. ஆனால், மாவட்டச் செயலாளர்கள் ஒன்றியச் செயலாளர்களுக்கு ஆடம்பரச் செலவுகளை அதிகமாக வைக்கிறார்கள். வளைவுகள், பேனர்கள், மாலை மரியாதைகள் என்று செலவு அதிகமாவதால்தான் கூட்டங்களை அடிக்கடி நடத்த முடிவதில்லை என்கிறார்கள்.

 மாவட்டங்களின் பல பகுதிகளிலும் அடிக்கடி கட்சிக் கூட்டங்களை நடத்துவதுதான் கட்சியின் இருப்பைத் தக்கவைக்கவும், கட்சிக்காரர்கள் அடிக்கடி சந்தித்து நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவும். திமுகவின் வேறு எந்தத் தலைவர்களைக் காட்டிலும் அண்ணாவுக்கும், கலைஞருக்கும்தான் தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளுடனும், தொண்டர்களுடனும் நெருக்கம் அதிகமாக இருந்தது. அதிலும் கலைஞர் மிக நெருக்கமாக இருந்திருக்கிறார். அதற்கு அவரே காரணமும் சொல்லியிருக்கிறார்.

ஒரு கூட்டத்திற்கு போகும்போது கூட்டம் தொடங்குவதற்கு முன்னும், கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதும் அந்த பகுதியின் நிர்வாகிகளுடன் கலந்து பேசுவாராம் கலைஞர். மேடைக்கு பின்னேயும், மேடையிலும் அவர்களுடன் கலைஞர் பகுதிப் பிரச்சனையை கேட்டுத் தெரிந்துகொண்டு தனது பேச்சில் அந்தப் பிரச்சனையை இணைப்பாராம். அதன்மூலம் அந்தப் பகுதி கட்சிக்காரர்களின் மனதுக்கு நெருக்கமாவார். இதுதான், அண்ணா மறைவுக்குப் பிறகு கட்சியினரின் ஆதரவை அவருக்கு பெற்றுத்தந்தது எனக் கூறப்படுவதுண்டு.

கலைஞரின் இந்தச் செல்வாக்கைக் கூட ஏற்க மறுத்து, ஏதோ எம்ஜியார் ஆதரவால்தான் கலைஞருக்கு கட்சியினரின் ஆதரவு கிடைத்ததாக திசைதிருப்பும் பேர்வழிகள் அப்போதும் இப்போதும் இருக்கவே செய்கிறார்கள். எம்ஜியாருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் எந்தக் காலத்திலும் நேரடித் தொடர்பு இருந்ததில்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க முடியாது.
சரி அதுபோகட்டும், இந்தக் கட்டுரையின் நோக்கம் இதுதான். திமுக தனது மாலை நேரத்து பள்ளிகளை புனரமைத்து, தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு வழி செய்ய வேண்டும் என்ற திமுக பேச்சாளர்களின் குமுறலை பதிவு செய்யத்தான். திமுக தலைவர் ஸ்டாலின் தனது சீர்திருத்த நடவடிக்கைகளில் இதையும் இணைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக