திங்கள், 17 செப்டம்பர், 2018

தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா: சர்வே முடிவுகள்!... ஜெகன் மோகன் ரெட்டி முன்னணியில் ? சந்திரபாபு நாயுடு பின்னடைவு ..?

ஜெகன்மோகன் ரெட்டி . நடிகை ரோஜா எம் எல் ஏ
தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா: சர்வே முடிவுகள்!minnambalam :இந்தியா டுடே இதழும் - ஆக்ஸிஸ்-மை- இந்தியா அமைப்பும் இணைந்து தெலங்கானா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் தென்னிந்திய அரசியல் வட்டாரத்தில் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ளும் தெலங்கானா, ஆந்திரா மாநிலங்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் மாநில அளவிலும், மத்திய அளவிலும் யாருக்கு செல்வாக்கு என்பதை இந்த சர்வே எடுத்துக் காட்டுகிறது.
ஒவ்வொரு மாநிலமாக இதோ சர்வே முடிவு விவரங்கள்...

தெலங்கானா: முந்தும் கே.சி.ஆர், மோடி
பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே முதல்வர் சந்திர சேகர ராவின் முடிவுக்கு இணங்க சட்டமன்றம் கலைக்கப்பட்டதால் முன்கூட்டியே தேர்தலை சந்திக்கவுள்ளது தெலங்கானா மாநிலம்.
காபந்து முதல்வராக சந்திரசேகர ராவ் தொடரும் நிலையில், அவர் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமீதி, தேர்தலில் தனித்துப் போட்டிடுகிறது. அக்கட்சியின் சார்பில் 105 தொகுதிகளுக்கு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா ராஷ்டிரிய சமீதிக்கு எதிராக தெலுங்கு தேசம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஒன்றிணைந்து வலுவான புதிய கூட்டணியையும் அமைத்துள்ளன.
இன்னும் சில வாரங்களில் தெலங்கானாவில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கவுள்ள நிலையில், சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தனது போட்டிக் கட்சிகளை விட மிகவும் முன்னணியில் உள்ளதாக கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
இதன் முடிவுகளின் படி கருத்துக்கணிப்பில் பங்கெடுத்தவர்களில் 43 சதவிகிதத்தினர் சந்திர சேகர் ராவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறியுள்ளது. 18 சதவிகிதம் பேர் தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் உத்தம் குமார் ரெட்டிக்கு ஆதரவளிக்கும் நிலையில் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். 15 சதவிகித ஆதரவுடன் பிஜேபியின் கிஷன் ரெட்டி மூன்றாவது இடத்தில் இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளது.
48% பேர் சந்திரசேகர ராவ் அரசாங்கம் திருப்தியளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். 26% பேர் இந்த அரசு மோசமான அரசாங்கம் எனவும், 16% பேர் சுமார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இம்மாநிலத்தின் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகள் அடிப்படையில் எடுக்கப்பட்டது. 7110 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, துப்புரவு பிரச்சினையே (sanitation) முக்கிய பிரச்சினையாக உள்ளது என்று வாக்காளர்கள் தெரிவித்தனர். வேலையின்மையும் விவசாயம் சார்ந்த பிரச்சினைகளும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது.
பிரதமராக யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேள்விக்கு, 44 சதவிகிதம் பேர் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ராகுல் காந்தி 39 சதவிகிதத்தினரின் ஆதரவு உள்ளது.
ஆந்திரா: பாபுவை முந்தும் ஜெகன்!
இதேபோல ஆந்திர மாநிலத்துக்கு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், “ஆந்திர பிரதேசத்தில் நிலைமை சந்திரபாபு நாயுடுவுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இல்லை. 43 சதவிகிதத்தினர் அடுத்த முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி வர வேண்டும் என்று ஆதரித்துள்ளனர். 38% வாக்குகளுடன் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு இரண்டாவது இடம் பெற்றுள்ளார். 36 சதவிகிதம் பேர் தெலுங்கு தேசம் அரசாங்கம் மோசம் எனவும், 33சதவிகிதம் பேர் அது நல்ல அரசாங்கம் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில் ராகுல் காற்று
ஆனால், ஆந்திர பிரதேசத்தில் அடுத்த பிரதமர் இடத்துக்கு மோடியைவிட ராகுல் காந்திக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. 44% பேர் ராகுல் காந்திக்கு ஆதரவாக வாக்களித்தனர். 38% பேர் மோடிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
கருத்து தெரிவித்த மாதிரிகளின் எண்ணிக்கை 10,650 ஆக இருந்த இந்த ஆய்வில், ஆந்திர வாசிகளுக்கு துப்புரவு பிரச்சினை தலையாய பிரச்சினையாகவும், அதையடுத்து விவசாய பிரச்சினைகளும் வேலையின்மையும் விலைவாசி உயர்வும் முக்கியபிரச்சினைகளாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
கர்நாடகம்: மோடி முன்னிலை
கர்நாடகத்தில் கருத்து கணிப்பில் பதில் தெரிவித்தவர்களிடமிருந்து மோடிக்கு 55 சதவிகிதம் ஆதரவும் ராகுல் காந்திக்கு 42 சதவிகித ஆதரவும் கிடைத்துள்ளது.அதிகாரத்திலுள்ள காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள ஆட்சியைப் பொறுத்தவரை 35 சதவிகிதம் பேர் திருப்தியாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். 28% ஆட்சியை சுமார் என்றும், 23% பேரே இது நல்ல ஆட்சி என்று தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் குடிநீர் பிரச்சினையே முக்கிய பிரச்சினை. அதையடுத்து துப்புரவு பிரச்சினையும் விவசாயப் பிரச்சினைகளும் விலைவாசி உயர்வும் முக்கிய பிரச்சனைகளாக உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது
சட்டமன்றத் தேர்தல்களில் தெலங்கானாவில் கே.சி.ஆரும், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டியும் முன்னிலையில் இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் ஆந்திராவில் மட்டும் ராகுல் முன்னிலையில் இருக்க, மற்ற இரு மாநிலங்களிலும் மோடிக்கே சாதக சூழல் நிலவுவதாக தெரிகிறது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக