வெள்ளி, 21 செப்டம்பர், 2018

கோகுல்ராஜ் ஆணவக்கொலை .. சுவாதியின் நண்பர் கார்த்திக்ராஜா பரபரப்பு சாட்சியம்!

கொல்லப்பட்ட கோகுல்ராஜ் ...  கொலை செய்த யுவராஜ்
nakkheeran.in - elayaraja": கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் முக்கிய
சாட்சியான சுவாதியின் நண்பர் கார்த்திக்ராஜா, சிசிடிவி கேமரா வீடியோ காட்சிகளைப் பார்த்து சுவாதி மற்றும் கோகுல்ராஜ் ஆகியோரை அடையாளம் காட்டி பரபரப்பு சாட்சியம் அளித்தார். சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் (23) கடந்த 23.6.2015ம் தேதி வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. மறுநாள் 24.6.2015ம் தேதியன்று மாலை, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்தார். தலை வேறு உடல் வேறாக துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கிடந்தது. கோகுல்ராஜ், திருச்செங்கோட்டில் உள்ள கேஎஸ்ஆர் இன்ஜினியரிங் கல்லூரியில் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பி.இ., படிப்பை முடித்து இருந்தார். அப்போது தன்னுடன் படித்து வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நடந்தை கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகள் சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்தார்.
 கல்லூரி படிப்பை முடித்த பிறகும் அவர்களுடைய நட்பு தொடர்ந்தது. 23.6.2015ம் தேதியன்று கோகுல்ராஜும், சுவாதியும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேர், அவர்கள் இருவரையும் மிரட்டியுள்ளனர்.
இந்தக் காட்சிகள் அனைத்தும் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. 

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம், கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியும் காதலிப்பதாக கருதிய யுவராஜ் தரப்பு, கோகுல்ராஜை கடத்திச்சென்று கொலை செய்து, சடலத்தை தண்டவாளத்தில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இந்த வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் ஜாமினில் சென்றபோது தலைமறைவாகிவிட்டார்.


இந்நிலையில் கடந்த 30.8.2018ம் தேதி முதல், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. வழக்கில் நான்காவது சாட்சியான சுவாதி, அரசுத்தரப்பின் முக்கிய சாட்சியாக கருதப்பட்டார். கடந்த 10ம் தேதி சாட்சியம் அளித்த சுவாதியிடம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் சம்பவத்தன்று பதிவாகி இருந்த காட்சிகள் திரையிட்டுக் காட்டப்பட்டது. அந்த வீடியோவில் பதிவாகி இருக்கும் உருவங்கள் யாரென்று தெரியாது என்று சாட்சியம் அளித்தார். 

மேலும், கோகுல்ராஜ் தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர் என்பதைத் தவிர அவர் யாரென்றே தெரியாது என்றும் அந்தர் பல்டி அடித்தார். சம்பவத்தன்று தான் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் செல்லவில்லை என்றும் பிரழ் சாட்சியம் அளித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 18, 2018) சுவாதியின் தாயார் செல்வி சாட்சியம் அளித்தார். அவருக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. 


வீடியோவில் இருப்பவர்கள் யாரென்று தெரியாது என பல்டி செல்வியும் பிறழ் சாட்சியம் அளித்தார். ஏற்கனவே நாமக்கல் மாவட்ட ஜேஎம்-2 நீதிமன்றத்தில் சிஆர்பிசி 164ன் கீழ் சுவாதியும், அவருடைய தாயார் செல்வியும் அளித்திருந்த வாக்குமூலத்திற்கு முரணாக பிறழ் சாட்சியம் அளித்ததால், அரசுத்தரப்பு வழக்கறிஞரும், சிபிசிஐடி போலீசாரும் கடும் அதிருப்தி அடைந்தனர். செல்வி சாட்சியம் அளித்ததைத் தொடர்ந்து, சுவாதி மற்றும் கோகுல்ராஜ் ஆகியோரின் நண்பரும், கல்லூரியில் ஒன்றாக படித்து வந்தவருமான நாமக்கல் மாவட்டம் கலியனூரை சேர்ந்த கார்த்திக்ராஜா, சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டார்.


மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நீதிமன்றம் மாலை 3.15 மணிக்கு கூடியது. அப்போது ஆஜரான கார்த்திக்ராஜா நீதிமன்றத்தில் கூறியது:
நான் கேஎஸ்ஆர் கல்லூரியில் 2011 முதல் 2015ம் ஆண்டு வரை பி.இ., படித்தேன். இறந்துபோன கோகுல்ராஜை எனக்குத் தெரியும். அவரும் நானும் மேற்சொன்ன கல்லூரியில் ஒன்றாக படித்தோம். எங்களுடன் படித்த எல்லோருமே கோகுல்ராஜூக்கும் நண்பர்கள்தான்.

கடந்த 24.6.2015ம் தேதியன்று காலை 7.30 மணியளவில் கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன் எனக்கு போன் செய்தார். கோகுல்ராஜ் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றார். அவன் கல்லூரிக்கு வந்தானா அல்லது நண்பர்களை பார்க்க வந்தானா என்று கேட்டார்.

அதுபற்றி எனக்குத் தெரியாது என்று கூறிவிட்டேன். அதன்பிறகு சுவாதிக்கு போன் செய்தபோது அவருடைய போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.

சுவாதியின் செல்போன் நம்பர் இப்போது எனக்கு ஞாபகம் இல்லை. நான் நண்பர்களிடம் கோகுல்ராஜ் பற்றி விசாரித்துக் கொண்டிருந்ததை அறிந்த சுவாதி, அவருடைய தாயார் செல்போனில் நம்பரில் இருந்து எனக்கு போன் செய்தார். 

அப்போது அவர், 23.6.2015ம் தேதியன்று கோகுல்ராஜ் சுவாதியிடம் செல்போன் வாங்குவதற்காக ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டதாகவும், பணத்தை திருச்செங்கோட்டில் வந்து பெற்றுக்கொள்வதாகவும் கோகுல்ராஜ் சுவாதியிடம் கூறியதாகவும் சொன்னார். 

¢அதன்படி சுவாதி, திருச்செங்கோடுக்கு சென்று கோகுல்ராஜீக்கு பணத்தைக் கொடுத்தார். அதன்பிறகு அவர்கள் இருவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர். இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் உள்ள திண்ணையில் உட்கார்ந்து இருந்தனர். 

அங்கு வந்த ஒருவர், யுவராஜ் கூப்பிடுவதாகச் சொல்லி அழைத்ததன்பேரில் கோகுல்ராஜ் அங்கு சென்று பேசியதாகவும், பின்னர் சுவாதியும் அவர்களிடம் பேசியதாகவும் சொன்னார்.அதன்பிறகு சுவாதியை நான்கு பேர் கோயிலுக்குக் கீழே அனுப்பி, அவரை பேருந்தில் இருவர் அழைத்துச் சென்றதாகவும் கூறினார்.


அப்போது காரில் ஒருவர் வந்தார். அவரிடம் கோகுல்ராஜ் எங்கே என்று கேட்டதற்கு, அவரை மலையிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டோம் என்று சுவாதியிடம் கூறியதாக சுவாதி என்னிடம் கூறினார். இப்படி சுவாதி என்னிடம் சொன்ன எல்லா விவரங்களையும் கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வனிடம் கூறினேன்.

அதற்கு கலைச்செல்வன், சுவாதியின் செல்போன் நம்பரை கேட்டார். நான் அவருக்கு எஸ்எம்எஸ் மூலம் நம்பரை அனுப்பி வைத்தேன். பிறகு அவர், என்னையும் சுவாதியையும் ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வருமாறு அழைத்தார். பின்னர், வேண்டாம் திருச்செங்கோடு பேருந்து நிலையத்திற்கு வருமாறு போனில் என்னிடம் கூறினார். 24.6.2015ம் தேதியன்று காலை 9.30 மணியளவில் சுவாதியுடன் கலைச்செல்வன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கலைச்செல்வனின் உறவினர்களும் இருந்தனர். அதன்பிறகு நாங்கள் மினி பேருந்தில் திருச்செங்கோடு போலீஸ் நிலையத்திற்கு சென்றோம். 

அங்கே மதியம் 1.30 மணியளவில் கோகுல்ராஜின் தாயார் புகார் எழுதி கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரித்தார். மாலை 4.30 மணியளவில் ரயில் தண்டவாளத்தில் ஒரு சடலம் கிடப்பதாக கோகுல்ராஜின் தாயாருக்கு ஒரு தகவல் வந்தது. அன்று இரவு நேரத்தில் திருச்செங்கோடு டிஎஸ்பி என்னிடம் விசாரித்தார். சுவாதி என்னிடம் கூறிய தகவலை செப். 2ம் தேதியன்று நாமக்கல் ஜேஎம்&2 நீதிமன்றத்தில் சாட்சியாக அளித்தேன். அதன் பிறகு செப். 25ம் தேதி, சிபிசிஐடி போலீஸ் ஏடிஎஸ்பி என்னிடம் விசாரித்தார். நான் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தில் நான்தான் கையெழுத்து போட்டேன். 


திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் சுவாதியும் கோகுல்ராஜூம் பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்து அவர்களிடம் விசாரித்த ஒருவர், சுவாதியின் செல்போனை பெற்றுக்கொண்டார். மறுநாள் செல்போனை தருவதாக கூறியதாக சுவாதி என்னிடம் சொன்னார். சுவாதி, கோகுல்ராஜ் ஆகியோரை எனக்கு நாலைந்து ஆண்டுகளாக தெரியும். சிசிடிவி ஃபுட்டேஜை பார்த்தால் என்னால் அடையாளம் காட்ட இயலும். 

இதையடுத்து சாட்சி கூண்டுக்கு பின்பக்க சுவரில் சம்பவத்தன்று அர்த்தநாரீஸ்வரர் கோயில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. கேமரா&1ல், 10.52 நிமிடம் மற்றும் 53, 54, 55, 56வது நொடிகளில் கோயிலின் நுழைவு வாயிலின் இடதுபுறமாக கடை பக்கமாக திரும்பி சென்ற நபர்களில் முதலில் இருந்த ஆண் நபர் கோகுல்ராஜ் என்றும், அவருடன் வந்த பெண் நபர் சுவாதி என்றும் கார்த்திக்ராஜா அடையாளம் காட்டினார். 


கேமரா&1ல் 11.58வது நிமிடத்தில் 1 மற்றும் 49வது நொடிகளில் முதலில் கோயிலின் நுழைவு வாயிலின் வழியாக வெளியில் செல்லம் பெண் சுவாதி போல் தெரிகிறது. அதற்குப் பின்னால் கோகுல்ராஜ் சில நபர்களுடன் வெளியே சென்றுவிட்டு மீண்டும் கோயிலுக்கு உள்ளே வருகிறார். அவர்களுடன் உள்ள நபர்கள் யாரென்று எனக்குத் தெரியாது.

கேமரா&5ல், 10.55வது நிமிடத்தில் 32வது நொடி, 10.58வது நிமிடத்தில் 58வது நொடி ஆகிய நேரங்களில் வருபவர்கள் சுவாதி மற்றும் கோகுல்ராஜ் போல தெரிகிறது. சிசிடிவி ஃபுட்டேஜில் நான் காண்பித்த நபர்கள் ஒரே ஆடையைத்தான் அணிந்துள்ளார்கள்.

இவ்வாறு கார்த்திக்ராஜா சாட்சியம் அளித்தார்.

இதையடுத்து அவரிடம் எதிரிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கு விசாரணை நடத்தினார்.

கார்த்திக்ராஜாவிடம் குறுக்கு விசாரணை முடிந்ததை அடுத்து, சம்பவத்தின்போது ஈரோடு ரயில் நிலைய அலுவலராக இருந்த கதிரேசன், லோகோ பைலட் வடிவேல், உதவி பைலட் முனுசாமி, கோகுல்ராஜ் படித்த கல்லூரி முதல்வர் தியாகராஜன் ஆகிய சாட்சிகளிடமும் விசாரணை, குறுக்கு விசாரணை நடந்தது. 

இதையடுத்து சாட்சிகள் விசாரணை வரும் அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கே.ஹெச்.இளவழகன் உத்தரவிட்டார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத்தரப்பில் முக்கிய சாட்சியாக நம்பிக்கொண்டிருந்த சுவாதி ஜேஎம்-2 நீதிமன்றத்தில் முன்பு அளித்திருந்த வாக்குமூலத்திற்கு முரணாக நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியம் அளித்தார். இதை பெரும் பின்னடைவாக கருதியது அரசுத்தரப்பு. நேற்று முன்தினம் ஆஜராகிய கார்த்திக்ராஜா, சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்த்து சுவாதி, கோகுல்ராஜ் ஆகியோரை அடையாளம் காட்டியதால் அரசுத்தரப்பு வழக்கறிஞர் மற்றும் சிபிசிஐடி போலீசாருக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக