திங்கள், 24 செப்டம்பர், 2018

மாலத்தீவு அதிபர் தேர்தல்: எதிர்க்கட்சி தலைவர் இப்ராகீம் முகம்மது வெற்றி

மாலத்தீவு அதிபர் தேர்தல்: எதிர்க்கட்சி தலைவர் இப்ராகீம் முகம்மது  வெற்றிdailythanthi.com :கொழும்பு, 1192 குட்டித்தீவுகளை கொண்ட மாலத்தீவில் சமீப காலமாக அரசியல் ஸ்திரமற்ற சூழல் உள்ளது. அங்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ள முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட 9 அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இந்த தீர்ப்பை அதிபர் அப்துல்லா யாமீன் ஏற்கவில்லை. இது அங்கு அரசியல் குழப்பங்களுக்கு காரணமாக அமைந்தது. அதிபர் நிலைப்பாட்டுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் எஞ்சிய நீதிபதிகள் முந்தைய தீர்ப்பை திரும்பப்பெற்றனர்.
இந்த நிலையில் அங்கு செப்டம்பர் 23–ந் தேதி (நேற்று) அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன், மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இலங்கையில் வசித்து வருகிற முன்னாள் அதிபர் முகமது நஷீத், மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால் பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து அவரது கட்சி சார்பில் இப்ராகிம் முகமது வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.


அரசியல் ரீதியில் சர்ச்சைக்கிடமான நிலையில் நேற்று அங்கு ஓட்டுப்பதிவு நடந்தது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இந்த வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன. இந்திய பெருங்கடலில் உள்ள மாலத்தீவில் சமீப காலமாக சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள சூழலில், இந்தியாவும் இந்த தேர்தல் முடிவுகளை உன்னிப்பாக உற்று நோக்கியது. 

அப்துல்லா யாமீன் தோல்வி

ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும், தேர்தல் முறையாக நடத்தப்படாவிட்டால், பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்து இருந்தன. இதனால், உலக நாடுகளின்  நெருக்கடிக்கு மத்தியில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், துவக்கத்தில் இருந்தே அதிபர் அப்துல்லா யாமீன் பின்னடைவை சந்தித்தார். எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டு இருந்த இப்ராகீம் முகம்மது பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். மொத்த வாக்காளர்களில் 58.3 சதவீத வாக்குகள் பெற்று இப்ராகீம் முகம்மது வெற்றி பெற்றதாக மாலத்தீவு தேர்தல் ஆணையம் தெரிவித்தது. . இப்ராகிம் முகமது 1,33,808 ஓட்டுகளும், யாமீன் 95,526 ஓட்டுகளும் பெற்றுள்ளனர். 

வெற்றி அறிவிப்புக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த இப்ராகிம் முகமது வெற்றி குறித்து தெரிவிக்கையில், மக்களின் விருப்பத்தை மதித்து, மென்மையாகவும், சமாதானமாகவும் அதிகாரத்தை மாற்ற யாமீனை சந்தித்து பேசினேன்” என்றார். இப்ராகீம் முகம்மது வெற்றியை அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக