திங்கள், 24 செப்டம்பர், 2018

BBC : சிந்துச் சமவெளி காட்டிய இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே!

ஹரப்பா, மொஹஞ்சதரோ இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு, அந்த
ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு (செப்டம்பர் 20, 1924) 94 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், சிந்துச் சமவெளிப் பகுதியிலும் தமிழக பகுதிகளிலும் கிடைத்த பானை ஓடுகளில் உள்ள ஒற்றுமைகளை வைத்து சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே என்பதை நிறுவ முடியும் என்கிறார் ஒடிஷா மாநில கூடுதல் தலைமைச் செயலரும் ஆய்வாளருமான ஆர். பாலகிருஷ்ணன்.
சென்னையில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் The Pot Route: from Indus to Vaigai என்ற தலைப்பில் வியாழக்கிழமையன்று இது தொடர்பாக உரை நிகழ்த்திய ஆர்.பாலகிருஷ்ணன், தன் உரைக்குப் பிறகு பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார். அதிலிருந்து.
கே. சிந்துச் சமவெளி ஆய்வு முடிவுகள் வெளியாகி 94 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. அந்த ஆய்வு முடிவென்பது தமிழ் வரலாற்று ஆய்வில் எவ்வளவு முக்கியமானது?
ப. 1924 செப்டம்பர் 20 என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இந்த நாகரிகம் குறித்த செய்திகள் வரும் முன்பாக நம்முடைய புரிதல் வேறு மாதிரி இருந்தது. இப்படி ஒரு நாகரிகம் இருந்ததே தெரியாது. அது தெரிந்த பிறகுதான் இந்திய வரலாற்றை வேறு மாதிரி பார்க்கும் பழக்கமே ஏற்பட்டது.
ஆய்வு முடிவு வெளிவந்தபோதே இது திராவிட நாகரிகமாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறதென அப்போதே சொல்லப்பட்டது. அதற்குப் பிறகும் பலரும் இது குறித்துப் பேசியிருக்கிறார்கள். சாட்டர்ஜி, கிராஸ் பாதிரியார், அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற பல ஆய்வாளர்கள் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். இப்போது பல்துறைகளைச் சேர்ந்த ஆய்வுகள், அதில் கிடைத்த தரவுகள் மூலமாக இது ஒரு திராவிட நாகரிகமாக இருக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறு உண்டு என்று சொல்வதையெல்லாம் தாண்டி, இது ஒரு திராவிட நாகரிகமே என்று சொல்லக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கே. இந்த ஆய்வு முடிவு வெளியாகும் முன்பாக இந்திய வரலாற்றைப் பார்ப்பது எப்படி இருந்தது, இந்த நாகரிகம் குறித்த முடிவுகள் வெளியான பிறகு எப்படி மாறியது?
ப. தரைக்குள் இப்படி ஒன்று இருந்தது தெரியாத காலகட்டதில் நம்
நாகரிகத்தைப் பற்றிச் சொல்ல இலக்கியங்கள் மட்டுமே இருந்தன. அப்போது வெளிநாட்டு ஆய்வாளர்களால் படிக்கக்கூடிய வகையில் இருந்தது வடமொழி இலக்கியங்கள்தான். அதனால், இந்தியப் பண்பாட்டின் துவக்கத்தை வேதத்திலிருந்து துவங்கும் பழக்கம் இருந்தது. வேதகால நாகரிகத்திற்கு முன்பாக வசித்தவர்கள் பண்பாடற்றறவர்கள் போலவும் அதற்குப் பிறகுதான் பண்பாடு வந்ததுபோலவுமே வரலாறு அணுகப்பட்டது. ஆனால், 4,500 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மிகப் பெரிய நகரம் இருந்தது, அது தரையில் புதைந்து கிடந்தது என்பது தெரிந்த பிறகு எல்லாமே மாறிவிட்டது. கே. பானை ஓடுகளை வைத்து சிந்துவெளி நாகரிகம் குறித்து சில முடிவுகளுக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். என்ன முடிவு அது?

ப. யானை சென்ற பாதையைவைத்து யானைத் தடத்தைக் கண்டுபிடிப்பதுபோல, இது பானைத் தடம். Silk route, Spice route என்றெல்லாம் இருப்பதைப் போல இது Pot Route என்பதை நாங்கள் முன்வைக்கிறோம். ஹரப்பாவில் கிடைத்த பானை வகைகளில் பெரும்பாலானவை கறுப்பு - சிவப்பு வண்ணம் கொண்டவை. ஆனால், கங்கைச் சமவெளிப் பகுதிகளில் கிடைத்தவை வண்ணம் தீட்டப்பட்ட பழுப்பு நிற மண் பாண்டங்கள். ஆனால், ஹரப்பாவுக்கு தென்பகுதியில் குஜராத், மகாராஷ்டிரா பகுதிகளில் கிடைப்பது எல்லாமே கறுப்பு - சிவப்பு வண்ணம் கொண்டவைதான். ஆனால், வரலாற்றாளர்கள், இதனை முதுமக்கள் தாழியோடு தொடர்புபடுத்தி பெருங்கற்கால மட்பாண்டங்கள் என்று ஒதுக்கிவைத்துவிடுகிறார்கள். அதற்கு மேல் ஏதும் நடப்பதில்லை. இப்போது நாங்கள் முதல் முறையாக ஒரு மேப்பை தயார் செய்து, painted greyware என்ற பழுப்பு நிற பானை ஓடுகள் கிடைத்த கங்கைச் சமவெளியைச் சுற்றி, கறுப்பு - சிவப்பு வண்ண பானைகளைப் பயன்படுத்தும் கலாசாரம்தான் சூழ்ந்திருந்தது; ஆகவே இந்த கறுப்பு - சிவப்பு வண்ணப் பானைகளைப் பயன்படுத்தும் கலாசாரத்தின் தொடர்ச்சியை ஆராய வேண்டுமென்ற கருத்தை முன்வைத்த்திருக்கிறோம்.
கே. பானை ஓடுகளை வைத்து சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என எப்படி நிறுவுவீர்கள்?
ப. முன்பு சொன்னதைப் போல இதுவும் ஒரு பல்துறை ஆய்வுதான். சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்ததைப் போன்ற பானை ஓடுகள் கீழடியிலும் கிடைத்திருக்கின்றன. பானைகள் புலம் பெயர்ந்து வந்திருக்க முடியுமா? ஒவ்வொரு பானைக்கு பின்னாலும் ஒரு பானை செய்பவர் இருக்கிறார். அவருடைய சமூகப் பின்புலத்தை ஆராய வேண்டும். சிந்துச் சமவெளி நாகரிகத்தில் பானை செய்பவர் என்னவாக அழைக்கப்பட்டிருப்பார் என்பது தெரியவில்லை. ஆனால், அவருடைய இடம் முக்கியமானதாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இம்மாதிரி ஒரு நகரத்தில் செங்கல் சூளை வைத்திருந்தவர்கள், பானை செய்பவர்கள் ஆகியோருக்குத்தான் முக்கியத்துவம் இருந்திருக்கும். அதுபோன்ற ஒரு முக்கியத்துவத்தை பானை செய்பவர்களுக்குக் கொடுத்த இலக்கியம் சங்க இலக்கியம்தான்.
சங்க இலக்கியத்தில் பானை செய்யும் குயவனை முதுவாய்க்குயவ என்று அழைக்கிறார்கள். அதாவது நீண்டகால அறிவைக் கொண்ட குயவர் என்று பொருள். இந்த நீண்டகால அறிவு என்பது எதைக் குறிக்கிறது? அதுதான் அந்த நாகரிகத்தின் ஆழம். அதேபோல முதுமக்கள் தாழி செய்யும் குயவரை கலம்செய் கோவே என்கிறார்கள். அதாவது பானை செய்பவரை தலைவன் என்று அழைக்கும் சமூகப் பண்பாடு அப்போது இருந்திருக்கிறது. இந்த சமூகப் பண்பை நாம் மறுக்க முடியாது. இந்த சமூகப் பண்பு வட மாநிலங்களில் உள்ள சமூகப் பண்புக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.
குயவர்களுக்கு இருக்கக்கூடிய குலப் பெயர்கள், வம்சாவழிப் பெயர்கள், குடிப் பெயர்கள், சாமி பெயர்கள், கோவில் பெயர்கள் எல்லாமே அந்தப் பாதை நெடுக இருக்கிறது. பானை என்பது அந்தப் பானை மட்டுமல்ல. அந்த பானை, அதைச் செய்பவர் சார்ந்த சமூகம்.
கே. சிந்துச் சமவெளியில் கிடைத்த பானை ஓடுகளில் இருந்த எழுத்துகளுக்கும் தமிழ்நாட்டில் கிடைத்த பானை ஓடுகளில் இருந்த எழுத்துகளுக்கும் ஏதாவது ஒற்றுமை இருந்திருக்கிறதா?
ப. நிறைய இடங்களில் இருந்திருக்கிறது. ஆங்கிலத்தில் grafitti என்பார்கள். அதாவது பானைகளில் இருக்கக்கூடிய கீறல்கள். இந்தக் கீறல்கள் எழுத்துகளாக மாறியிருக்கின்றன. இந்த எழுத்துக் கீறல் உள்ள பானை என்று சொன்னால், இந்தியாவில் கிடைத்த பானைகளில் 80 சதவீதம் தமிழ்நாட்டில்தான் கிடைத்திருக்கிறது. எழுத்துகள் எழுதப்பட ஆரம்பித்ததே பானைகளிலாகத்தான் இருக்க முடியும். கஷ்டப்பட்டு கற்களில் எழுதியிருக்கலாம். ஆக, எழுத்து வரிவடிவம் ஆகியவை ஆரம்பித்ததே பானைகளில்தான். இம்மாதிரி எழுதுவது சிந்துச் சமவெளியிலும் தமிழகத்திலும் அதிகமாக இருக்கிறது. சங்க இலக்கியத்தில் இது குறிப்பிடப்படுகிறது. பீடும் பெயரும் எழுதி என்று குறிப்பிடுகிறார்கள். இப்படியாக பானைகளில் எழுதியது நமக்கு அதிகமாகக் கிடைக்கிறது. அதற்குப் பிறகு தமிழ் பிராமி எழுத்துகளில் எழுதியது கிடைக்கிறது. இது ஒரு தொடர்ச்சியாக நடந்திருக்கிறது. இதைத்தான் நான் சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே என்று சொல்கிறேன். சிந்துவெளி எப்போது இல்லாமல் போகிறதோ அப்போது சங்க இலக்கியம் பேச ஆரம்பிக்கிறது. சங்க இலக்கியம் பேசும் நிகழ்வுகள் எல்லாம் அப்போதைய நிகழ்கால நிகழ்ச்சிகள் அல்ல. அவர்கள் கேள்விப்பட்ட நிகழ்ச்சிகளை, ஆயிரம் ஆண்டுகளாக தம் சமூகத்திற்குள் கேட்டுவந்த கதைகளைத்தான் அவர்கள் கவிதையாக மாற்றுகிறார்கள். அதில் பேசப்படும் விஷயம் எல்லாம் பழைய விஷயம். அது பழைய நகரங்களோடு தொடர்புடையதாக இருக்கு. ஹரப்பாவுக்கென ஒரு இலக்கியம் இருந்தால் அது இப்படித்தான் இருக்கும்.
கே. ஹரப்பா, மொஹஞ்ச - தாரோ பகுதிகள் இந்தியாவின் வட மேற்கில் இருக்கின்றன. சங்க இலக்கியம் தென்னிந்தியாவில் தோன்றியது. இடைப்பட்ட நிலப்பரப்பில் என்ன நடந்தது?
ப. கலாசாரம் நிலங்களைக் கடந்து பயணிக்கும். ஆஃப்கானிஸ்தானில் சார்த்துகை என்று ஒரு இடம் இருக்கிறது. அந்த இடம் மொஹஞ்ச-தரோவிலிருந்து வட மேற்கில் 1900 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. செல்வதற்கான பாதையே மிகக் கடினமான பாதை. அந்த சார்த்துகையில் லாபஸ் லாஜுலி என்ற விலை உயர்ந்த கற்கள் கிடைக்கும். அவற்றை வைத்து அணிகலன்களைச் செய்வதற்காக சிலர் அங்கே குடியேறினார்கள். அங்கேயும் இதேபோல பானைகளைச் செய்தார்கள். அதை இப்போது ஹரப்பிய நாகரிகம் என ஒப்புக்கொள்கிறோம். மொஹஞ்ச-தரோவுக்கும் கீழடிக்கும் இடையில் கிட்டத்தட்ட அவ்வளவு தூரம்தான் இருக்கும். இந்த இரு நிலப்பரப்பிற்கும் இடையில் தொடர்ச்சி இருக்கிறது.
மகாராஷ்டிரா, குஜராத் குயவர்களுடைய வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் தென்னிந்திய குயவர்களோடு தொடர்புடையதாக இருக்கிறது. ஆக பழக்க-வழக்க தொடர்பு இருக்கிறது, இலக்கியத் தொடர்பு இருக்கிறது. இவற்றைத் தனித்தனியாகப் பார்க்கக்கூடாது.
கே. சிந்துவெளி நாகரிகத்தில் பானை செய்பவர்கள் உயர்ந்த இடத்தில் இருந்ததாகச் சொன்னீர்கள். அவர்கள் சமூகத்தில் அடைந்த வீழ்ச்சியும் வேதகால நாகரிகத்தின் எழுச்சியும் சந்திக்கும் புள்ளி ஒன்றாக இருந்ததா?
ப. அப்படித்தான் தெரிகிறது. கன்வர்ஸ் என்ற ஆய்வறிஞர் இந்த கறுப்பு - சிவப்பு பானை செய்பவர்களும் பழுப்பு நிற பானை செய்பவர்களும் கங்கைச் சமவெளியில் சில நூறு கி.மீ. தூரத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு வாழ்ந்திருந்தாலும் அவர்களுக்கு இடையில் எந்தப் பரிமாற்றமும் இருக்கவில்லை. ஐநூறு, அறநூறு ஆண்டுகளுக்குப் பிறகே இரு பண்பாடுகளும் சந்தித்துக்கொண்டன. ஒரு பக்கம் ஹரப்பா நாகரிகத்தில் பானை, செங்கல் செய்பவர்கள் உயர்ந்த இடத்தில் இருந்திருப்பார்கள் என்று யூகிப்பதற்கு அங்கு கிடைத்த தொல்பொருள் தடயங்கள் ஆதாரமாக இருக்கின்றன. அவர்கள் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்பட்டார்கள். அவர்களே விழாக்களை அறிவித்தார்கள். அவர்களே பூசாரிகளாக இருந்தார்கள். அவர்களே தலைவன் என அறிவிக்கப்பட்டார்கள். இதற்கெல்லாம் சங்க இலக்கியத்திலும் நம்முடைய மட்பாண்டக் கீறல்களிலும் தடயங்கள் இருக்கின்றன. ஏதோ உயர்ந்த இடத்திலிருந்து கீழே வந்துவிட்டோம் என்ற உணர்வு இந்தியாவில் உள்ள எல்லாக் குயவர்கள் மத்தியிலும் இருக்கிறது. அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றம், எழுச்சி, சரிவு, வீழ்ச்சி ஆகியவையும் பானை செய்வோரின் தோற்றம், எழுச்சி, சரிவு, வீழ்ச்சி ஆகியவையும் இணையாக நடந்திருக்கின்றன. எப்போதுமே ஒரு வருத்தம், இழந்தது குறித்த கோபம், மனத்தாங்களல் அவர்களுடைய வாய்மொழி மரபில் இருந்துகொண்டேயிருக்கிறது. இது ஒரு கூட்டு மனப்பான்மையாக இருக்கிறது. இதை அவர்கள் காலம்காலமாக கடத்திவந்திருக்கிறார்கள். இதை ஆராய வேண்டியிருக்கிறது. தொல்லியல் என்பது கிடைக்கும் பொருட்கள் சம்பந்தப்பட்டது. ஆனால் இம்மாதிரியான வரலாற்று ஆய்வு எல்லாத் துறைகளையும் சேர்ந்ததாக இருக்க வேண்டும்.
கே. சிந்துவெளிக்கு அருகில் இருப்பது கங்கைச் சமவெளி. நீங்கள் குறிப்பிடும் வைகைச் சமவெளி வெகுதூரத்தில் இருக்கிறது. சிந்துவெளி நாகரிகம் ஏன் கங்கைச் சமவெளிக்குப் பரவவில்லை?
ப. சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியைச் சந்திக்க ஆரம்பித்தபோது எல்லோருமே அங்கிருந்து தெற்கு நோக்கி வந்துவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் அங்கேயே தங்கிவிட்டார்கள். சிலர் கிழக்கு நோக்கி நகர்ந்து கங்கைச் சமவெளியை அடைந்தார்கள். அங்கிருந்த நாகரிகத்தின் மீது அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதேபோல கங்கைச் சமவெளி நாகரிகத்தின் தாக்கம் அவர்களிடமும் இருந்திருக்கும். புதிய மொழியையும் கலாசாரத்தையும் கற்றுக்கொண்டிருந்திருப்பார்கள். பண்பாட்டுத் தாக்கம் இருந்திருக்கும்.
ஆனால், தமிழ்நாடு மிகவும் வெளியில் இருப்பதால் அவர்கள் தங்கள் பண்பாட்டுக் கூறுகளைத் தக்கவைத்திருப்பார்கள். மற்ற இடங்களில் அது குறைவாக இருந்திருக்கும். அதனால் அடையாளம் காண்பது சிரமமாக இருக்கும். இந்தியாவில் யாரைச் சுரண்டிப் பார்த்தாலும் ஹரப்பாவின் கூறு ஏதாவது இருக்கும். யாரிடம் அதிகம் இருக்கும் என்பது விவாதத்திற்குரியது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாம் பெரிதாக அகழ்வாய்வுகளைச் செய்யவில்லை. திராவிடக் கருதுகோள்களின் அடிப்படையில் நாம் ஆய்வுகளைச் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அந்த ஆய்வை குஜராத், மகாராஷ்டிரா, சிந்து, கங்கைச் சமவெளி, வைகைச் சமவெளி என எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும்.
கே. வைகைக் கரையில் ஏற்கனவே கீழடியில் அகழ்வு செய்யப்பட்டிருக்கிறது. வேறு எங்கு செய்ய வேண்டும்?
ப. வைகைக் கரையை ஒட்டிய 200 இடங்கள் அகழ்வாய்வு தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை. நான் ஏற்கனவே கீழ் - மேல் என்பது குறித்து சொல்லியிருக்கிறேன் (அதாவது கீழ் என்பது எப்போதும் கிழக்குப் பகுதியிலும் மேல் என்பது மேற்குப் பகுதியிலும் இருப்பதோடு, உயர்வானதாகவும் கருதப்படும். சிந்துவெளியிலும் இப்படித்தான் இருந்தது என்பது பாலகிருஷ்ணனின் வாதம்). இந்த இடங்களில் கீழ்-மேல் விகுதிகளோடு உள்ள இடங்கள், வைகைக் கரையோரமாக இருக்கும் அகழாய்வு சாத்தியமுள்ள இடங்களை நிச்சயம் ஆய்வுசெய்ய வேண்டும்.
இதில் இடங்களின் பெயர்கள் மிக முக்கியமானவை. அவை சாகாவரம் பெற்றவை. அவை நாகரிகத்தின் துவக்கத்திற்கும் மலர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் சாட்சியமாக இருக்கின்றன. அவை சாவதில்லை.
கே. உங்களுடைய முந்தைய ஆய்வு சிந்துவெளியின் இடப்பெயர்கள் பற்றியது. அதில் நீங்கள் சொல்லியிருப்பது என்ன?
ப. மனிதன் தொடர்ந்து இடம் மாறிக்கொண்டேயிருப்பவன். இப்படி புலம்பெயர்வது என்பது மனிதனின் அடிப்படைகளில் ஒன்று. இப்படிப் புலம்பெயரும்போது அவன் எதை எடுத்துச்செல்ல முடியும்? அவன் தன் பூமியைத் தோண்டி எடுத்துச்செல்ல முடியாது. நினைவுகளைத்தான் எடுத்துச்செல்ல முடியும். தான் செல்லும் புதிய இடத்தில் அவன் தன் பழைய இடத்தை மீள் உருவாக்கம் செய்வான். அப்படிச் செய்யும்போது தன் பழைய ஊர்ப் பெயரை எடுத்துச் செல்வான். கடவுள் நம்பிக்கையை எடுத்துச்செல்வான். இப்படிப் புலம் பெயர்பவர்களோடு, இடப்பெயர்களும் புலம்பெயரும். அப்படி தமிழகத்திலும் சிந்துச்சமவெளியிலும் இருந்த இடப் பெயர்களை நான் என் ஆய்வில் ஒப்பிட்டிருக்கிறேன்.
கே. தற்போது வெளியாகியிருக்கும் ராகிகடி மரபணு ஆய்வு முடிவுகள், சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று சுட்டிக்காட்டுவதைப்போல இருப்பதாகச் சொல்கிறது...
ப. ராகிகடி ஆய்வு முடிவுகள் இப்போதுதான் வெளியாகத் துவங்கியிருக்கின்றன. முறைப்படி இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. ஆனால், இந்த முடிவு தனிப்பட்ட முறையில் எனக்கு வியப்பு எதையும் தரவில்லை. கிட்டத்தட்ட எதிர்பார்த்த விஷயம்தான். முழுமையான முடிவை நானும் அவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக