புதன், 19 செப்டம்பர், 2018

தேயிலை தொழிலாளர்கள் அடிமைகளாகவே கம்பனிகளால் ...யாரும் பேச மறுப்பது ஏன்?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?மின்னம்பலம்: கவனிக்கப்பட வேண்டிய உரிமைக் குரல்..! உலகம் முழுவதும் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சமீபத்திய கேரள வெள்ளத்தின்போது, பட்டினியால் வாடிய ஒரே சமூகத்தினர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்தான். வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, ஆலப்புழாவிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. தங்களைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக அறிமுகப்படுத்திக்கொண்டவர்கள், தங்களுக்கு உணவு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் வழக்கமான இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன:
1) வெள்ளத்தினால் உங்கள் வீடுகள் பாதிப்புக்குள்ளாயிற்றா?
2) உங்கள் பகுதியில் வெள்ளச் சேதம் அதிகமா?
இரண்டு கேள்விகளுக்கும் அவர்களின் பதில் இல்லை என்பதே. ஆனால், அவர்கள் முன்வைத்த காரணம் திடுக்கிட வைத்தது.

“நாங்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். 60 குடும்பங்கள் இணைந்த ஒரு குழுவாக இருக்கிறோம். எங்கள் இல்லங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. நாங்கள் மலைப் பகுதியில் இருக்கிறோம் என்பதால் எங்களுக்கு வெள்ள பாதிப்பும் ஏதும் இல்லை. பக்கத்தில் இருக்கும் கடைகள், வீடுகள் எதற்கும் எந்த பாதிப்பும் இல்லை” என்றார் ஆலப்புழாக்காரர்.
பிறகு ஏன் நாங்கள் உதவ வேண்டும் என்ற கேள்வியை நான் கேட்கும் முன்னரே அவர் தொடர்ந்தார்.
“மழை, வெள்ளத்தால் எங்கள் தேயிலைத் தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஒரு வாரமாக எங்களுக்கு வேலை ஏதும் இல்லை. இந்தப் பகுதியில் வேறு எந்த வேலையும் இல்லை. இருந்த பணத்தை வைத்துக் கடந்த ஐந்து நாட்கள் சமாளித்துவிட்டோம். நேற்று எங்களில் பெரும்பாலானோருக்கு உணவில்லை. திரும்ப நாங்கள் பணிக்குச் செல்லும்வரை உணவுக்கான எந்த வழியும் எங்களுக்கு இல்லை. எங்களுக்கு உதவுங்கள்” என்றார்.
அவர் நினைத்திருந்தால் வெள்ளப் பாதிப்பை காரணம் காட்டி உதவி கேட்டிருக்கலாம். ஆனால் அவர், ‘பணி இல்லை, வேறு வழியில்லை. உதவுங்கள்’ என்று நிலைமையை நேர்மையாக உணர்த்தினார். அப்போதுதான் அவர்கள் எவ்வளவு மோசமாக வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவல நிலை
தேயிலைத் தோட்ட முதலாளிகள் அவர்களைக் கிட்டத்தட்ட அடிமைகளாகவே வைத்திருக்கின்றனர். தேயிலைத் தொழிலைத் தவிர வேறு எதுவும் தெரியாமல், அவர்களைச் சுயமாக இயங்கவிடாமல் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். அவர்களுக்கென்று தனி நிலமில்லை. அடையாளம் இல்லை. எதுவும் இல்லை. இதுதான் இன்றும் பல்வேறு தோட்டத் தொழிலாளர்களின் நிலை. ஈழத் தமிழர்கள் முதலில் வஞ்சிக்கப்பட்ட இடமே தேயிலைத் தோட்டத் தொழிற்சாலைகள்தான்.
தமிழகத்தில் இவர்களுக்கான உரிமைக் கோரிக்கை தேனியில் எழுப்பப்பட்டிருக்கிறது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலையில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தினக்கூலிகளாக வேலை செய்து வருகிறார்கள். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்த அவர்கள், குடியிருக்க இடம் வேண்டும் என்று தங்கள் நிலத்திற்கான முதல் உரிமைக் குரலை கோரிக்கையாக கலெக்டரிடம் கொடுத்தனர். அவர்கள் கடந்த நான்கு தலைமுறையாக மேகமலையில் இருக்கும் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்துவருகிறார்கள்.
தேயிலைத் தொழிலாளர்களுக்காகக் கொடுக்கப்பட்டுள்ள வீட்டில் தற்போது குடியிருந்து வருபவர்கள், தங்கள் எதிர்காலத் தலைமுறைகளுக்காக நிலம் வேண்டி முதல் குரல் எழுப்பியுள்ளனர். மேகமலையில் மட்டுமல்ல ஹைவேவிஸ், அப்பர் மணலாறு, மணலாறு, இரவங்கலாறு, வெண்ணியாறு, மகாராஜமெட்டு ஆகிய பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் தினக்கூலிகளாக வேலை செய்துவருகிறார்கள்.
அனைவருக்குமான முதல் குரல் இது. இது நிச்சயம் கவனிக்கப்படவேண்டிய குரல்.
- நரேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக