திங்கள், 24 செப்டம்பர், 2018

ரஃபேல் ஊழல் : மோடி கும்பலை மாட்டிவிட்ட ஹாலண்ட் .. தேள் கொட்டிய நிலையில் சங்கிகள் !

சங்கிகளை மாட்டிவிட்ட பிரெஞ்சு அதிபர் ஹாலண்ட்
modi-ambani-rafale-jet-scamவினவு :பொய் சொல்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன – முதலில், சொன்ன பொய்யை மறக்காமல் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாகச் ஒரே வரிசையில் சொல்ல வேண்டும்; அடுத்து, அந்தப் பொய்யில் வரும் கதாபாத்திரங்கள் அத்தனை பேரும் ஒரே கதையை தேதி-இடம்-வரிசை மாறாமல் சொல்ல வேண்டும்; அடுத்து, நம்மையும் மீறி உண்மை வெளியாகி விட்டால் அதைப் பொய்யாக காட்டும் ’திறமை’ வேண்டும்.
இல்லையென்றால் குட்டு வெளிப்பட்டு விடும் – இப்போது ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் நடந்து கொண்டிருப்பது அது தான்.
விமான தயாரிப்பில் எந்த அனுபவமும் இல்லாத அனில் அம்பானியின் ரிலையன்சுக்கு தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் கூட்டுப் பங்கு கம்பெனி துவங்கவும், விமான உதிரிபாகங்கள் தயாரிக்கவும் ஏன் வாய்ப்பு வழங்கப்பட்டது? ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கும் அனில் அம்பானியை கடனில் இருந்து காப்பாற்றுப் பொருட்டே விமானத் தயாரிப்பில் நல்ல அனுபவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதா?
மன்மோகன் சிங் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஒரு  விமானத்தின் விலை தோராயமாக சுமார் 600 கோடி – இதே புதிய ஒப்பந்தத்தின் கீழ் ஒரு விமானத்தின் விலை தோராயமாக சுமார் 1,400 கோடி. 126 விமானங்கள் வாங்குவதற்காக போடப்பட்ட பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு 36 விமானங்கள் மட்டுமே வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மோடி இறுதி செய்த போது அவரோடு அனில் அம்பானி இருக்கிறார் – அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரோ மீன் கடை ஒன்றைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

இவை சில அடிப்படையான கேள்விகள் மட்டும் தான்; இதே போல் எண்ணற்ற கேள்விகளை ரபேல் விமான ஒப்பந்தம் எழுப்புகின்றது. இந்தக் கேள்விகளுக்கு பல்வேறு சந்தர்பங்களில் பல்வேறு விளக்கங்களை பாரதிய ஜனதா முன்வைத்துள்ளது.
முதலில் இந்திய பொதுத்துறை நிறுவனத்திடம் ரஃபேல் விமானங்களை தயாரிக்க போதுமான தகுதி இல்லை என்றனர் – ஆனால், புதிய ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சுமார் பத்தே பத்து நாட்கள் முன் (மார்ச் 28ல்) வெறும் ஐந்து லட்ச ரூபாய் ஆரம்ப முதலீடாகப் போட்டு துவங்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் தகுதியை எவ்வாறு அளவிட்டனர் என்கிற கேள்விக்கு விடை இல்லை.
இத்தனைக்கும் ஹெச்.ஏ.எல் நிறுவனம் இந்திய அரசின் நவரத்தினா தகுதி பெற்ற நிறுவனங்களில் ஒன்று – நவரத்தினா நிறுவனத்தாலேயே முடியாதது அம்பானியால் எப்படி முடியும்?
அடுத்து, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விமான ஒப்பந்தத்தை இறுதி செய்யாமல் காலதாமதம் செய்து வந்தது என்றும், விமானப்படை போர் விமானங்கள் இன்றி ஆபத்தான நிலையில் இருந்ததால் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தாங்கள் 36 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ததாகவும் சொன்னார்கள்.
ஆனால், 2015 ஏப்ரல் முதல் வாரத்தில் புதிய ஒப்பந்தத்தை மோடி அரசு இறுதி செய்ததற்கு சரியாக இரண்டு வாரங்களுக்கு முன் தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் எரிக் ட்ரேப்பியெர் 126 விமானங்களுக்கான ஒப்பந்தம் 95 சதவீதம் முடிவடைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் கூட்டுப்பங்கு கம்பெனி துவங்கியதிலும் ஏராளமான முரண்பட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டே இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், 36 விமானங்களைக் கொள்முதல் செய்ய தாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் அரசாங்களுக்கு இடையிலானது என்றும், தஸ்ஸால்ட்டுடன் ரிலையன்ஸ் கூட்டுப்பங்கு நிறுவனம் துவங்கியதில் இந்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முன்னாள் பிரான்சு அதிபதி பிரான்கோயிஸ் ஹாலந்தே இணையப்பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதற்கு நேர் முரணான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், விமான ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன் ஹொலாந்தேவின் மனைவி நடித்த ப்ரென்ச்சு திரைப்படம் ஒன்றுக்கு நிதி உதவி அளித்திருந்தது. இதற்கு கைமாறாகவே (conflict of interest) ரிலையன்சு நிறுவனத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதாக ப்ரென்ச்சு ஊடகங்களில் அவ்வப்போது அடிப்பட்டு வந்ததையே நிருபர் ஹொலாந்தேவிடம் கேட்கிறார்.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் – டஸ்ஸால்ட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் தொடக்க விழா
கேள்விக்கு பதிலளித்த ஹொலாந்தே, இந்த விவகாரத்தில் (ரிலையன்ஸ் உள்ளே நுழைக்கப்பட்டதில்) தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார். மேலும், இந்தியத் தரப்பில் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்த போது (அதாவது 126 விமானங்களுக்கு பதில் 36 விமானங்கள் கொள்முதல் செய்வத்து என ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட்ட போது) அவர்கள் தான் ரிலையன்ஸ் நிறுவனத்தை உள்ளே கொண்டு வந்தார்கள் என்றும், மற்றபடி தஸ்ஸால்ட் நிறுவனம் யாரைத் தெரிவு செய்வது எனத் தீர்மானிப்பதில் தன்னுடைய தலையீடு ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஹொலாந்தேவின் பேட்டி இந்தியாவில் பெரும் சூறாவளியைக் கிளப்பி விட்டது. இது தெள்ளத் தெளிவான ஊழல் என்பதற்கு கிடைத்த ஆதாரம் என காங்கிரசு தரப்பில் செய்தியாளர் சந்திப்புகள் நடத்தப்பட்டன. பதிலடியாக இந்திய பாதுகாப்புத் துறை சார்பிலும், பிரான்சு அரசின் சார்பிலும், தஸ்ஸால்ட் நிறுவனத்தின் சார்பிலும் ”விளக்கங்கள்” அளிக்கப்பட்டன.
இந்திய தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்களில் ரிலையன்சை கூட்டுப் பங்கு நிறுவனமாக தெரிவு செய்தது தஸ்ஸால்ட்டின் முடிவு எனவும் இதில் இந்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் சொல்லப்பட்டத்து.
ஏறத்தாழ பிரான்சு அரசு மற்றும் தஸ்ஸால்ட் நிறுவனங்களின் விளக்கமும் இதே ரீதியில் தான் இருந்தன – எனினும், ஹொலாந்தேவின் கருத்து தவறானது என அவர்கள் மறுக்கவில்லை. அதாவது, ரிலையன்சை தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு பா.ஜ.க அரசு தான் ’அறிமுகம்’ செய்து வைத்துள்ளது.


ஏற்கனவே ரஃபேல் விமானங்கள் எதிர்பார்த்தபடி போனியாகாமல் இருக்கும் நிலையில் இந்திய அரசின் ஒப்பந்தம் என்பது தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பு. அதைத் தவற விடக்கூடாது என்பதற்காகவே இந்திய அரசின் சார்பில் (அதிகாரப்பூர்வமான முறையிலோ, அதிகாரப்பூர்வமற்ற முறையிலோ) பரிந்துறை செய்யப்பட்ட ரிலையன்சை தஸ்ஸால்ட் கூட்டுப்பங்கு கம்பெனியாக சேர்த்துக் கொண்டுள்ளது.
ஏப்ரல் 2015, ஒப்பந்தத்தை இறுதி செய்ய பிரான்சு சென்ற மோடியுடன் சென்ற அனில் அம்பானி, தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைவர் எரிக் ட்ரேப்பியெருடன் நீண்ட விவாதங்கள் நடத்தினார் என பாதுகாப்பு துறைசார்ந்த பத்திரிகையாளர் அஜய் சுக்லா அப்போதே எழுதியுள்ளார். தெள்ளத் தெளிவாக இந்திய அரசின் சார்பில் (மோடி அரசு) தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதன் பேரிலேயே அனில் அம்பானியை அவர்கள் சேர்த்துக் கொண்டுள்ளனர் என்பது தெரிகிறது. இதற்கிடையே தன்னுடைய பேட்டிக்குப் பிறகு வெளியான விளக்கங்களுக்கு பதிலளித்துள்ள ஹொலாந்தே, தான் முன்பு குறிப்பிட்ட கருத்தில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் விமானத்தின் விலை தாறுமாறாக எகிறியிருப்பதற்கும் உரிய விளக்கங்கள் ஏதுமில்லை. துவக்கத்தில் இது அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தம் என்பதால் விலை விவரங்களைக் குறித்து வெளிப்படையாக அறிவிக்க முடியாது என்றது பா.ஜ.க அரசு. பின்னர் அவ்வாறு அறிவிப்பது தேசத்தின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்து விடும் என்றார்கள் – இவர்கள் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விமானத்தின் விலையை வெளியிட்டது தஸ்ஸால்ட் நிறுவனம்.
அதிகரித்த விலைக்கான காரணம் என்ன என்பதற்கும் ஏற்றுக் கொள்ளும்படியான எந்த விளக்கமும் அரசின் தரப்பில் இருந்து வரவில்லை. இது அனில் அம்பானிக்கு போடப்பட்ட கறிவிருந்து என்பதே ஒரே தர்க்கப்பூர்வமான விளக்கமாக இருக்கிறது.
விவகாரம் ஊடகங்களில் வெடித்த பின் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தைக் கொண்டு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது பா.ஜ.க. அப்போது, ரிலையன்ஸ் நிறுவனம் தஸ்ஸால்ட்டுடன் கொண்டுள்ள உறவானது 2012ம் ஆண்டில் இருந்தே நீடிக்கிறது என்றும் அப்போது பதவியில் இருந்தது காங்கிரசு தான் என்றும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார்.
இது ஒரு பச்சைப் பொய். அதாவது, 2012ம் ஆண்டு தஸ்ஸால்ட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் – 36 விமானங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தான பின் அந்த நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது அனில் அம்பானியின் ரிலையன்ஸ்.
இவற்றில் முந்தையது புரிந்துணர்வு ஒப்பந்தம் எனும் நிலையிலேயே நீடித்து 2014ம் ஆண்டு காலாவதியாகியும் விட்டது; அதைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறை உற்பத்தியில் இருந்து முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் விலகிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக