திங்கள், 24 செப்டம்பர், 2018

தமிழக எல்லையில் அடுத்த தாக்குதல் .. நக்சல் இயக்கம் அறிவிப்பு


tamil.oneindia.com - veerakumaran. ஆந்திராவையடுத்து தமிழக எல்லையில் ஆயுத போராட்டம் மாவோயிஸ்ட் திட்டம்-
 ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று, ஆந்திராவை சேர்ந்த எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவசேரி சோமா ஆகியோர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தை தீக்கிரையாக்கியுள்ளனர்.
இதன் எதிரொலியாக தமிழக எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஊடகங்களுக்கு ஐந்து பக்கங்கள் கொண்ட அறிக்கையை மாவோயிஸ்டுகள் அனுப்பியுள்ளனர்.
அதில், மத்திய அரசின் பாசிசப் போக்கை கண்டிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு, கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது 13 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டது,
சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராடுபவர்கள் ஒடுக்கப்படுவது ஆகியவற்றை எல்லாம் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
எனவே தமிழகம், கர்நாடகம், கேரள மாநில எல்லைப் பகுதியில் மக்களை அணிதிரட்டி கொரில்லா படை மண்டலமாக அதை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு எதிரான இந்த ஆயுத போராட்டம், ஐக்கிய முன்னணி என்று அழைக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் வெளியான நிலையில் எல்லைப் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாக தமிழக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக