புதன், 5 செப்டம்பர், 2018

மத்திய அரசு : தலித் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாமாம் ,..

 ‘தலித்’ என்ற வார்த்தை வேண்டாம்!மின்னம்பலம்: பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களைக்  குறிப்பிட ‘தலித்’ என்ற
வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் ஊடகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் தனியார் தொலைக்காட்சிகளுக்கு கடிதமொன்றை அனுப்பியது. “தலித் என்ற
வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என கடந்த ஜூன் 6ஆம் தேதி பம்பாய் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் ஆறு வாரத்துக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தது. அதனால், நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி தலித் என்ற பெயரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசாங்க உத்தரவுகள் நீதிமன்றத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தாலும், இந்த வார்த்தை மீதான தடை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தலித் என்ற வார்த்தையைத் தடை செய்வதால் சமூகத்தின் நிலைமை மேம்பாடு அடையப் போவதில்லை என அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர். தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒடுக்கப்படுவதை, நசுக்கப்படுவதை பதிவு செய்வதற்கான தடையாக மத்திய அமைச்சகத்தின் நடவடிக்கை இருக்குமோ என்று அச்சமூகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

“தலித்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் இருப்பதால், அச்சமூகம் ஒடுக்கப்படவில்லை, நசுக்கப்படவில்லை என்று அர்த்தம் இல்லை. ஊடகங்கள் நிச்சயமாக அந்த வார்த்தையைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்” என சட்ட வல்லுநர் உதித் ராஜ் தெரிவித்துள்ளார்.
தலித் மற்றும் சிறுபான்மை ஆய்வு மையத்தைச் சேர்ந்த அரவிந்த் குமார் கூறுகையில், தலித் என்பது ஒரு வார்த்தை மட்டுமல்ல என்று தெரிவித்துள்ளார். “அது ஒரு முழு சொற்பொருள் ஆய்வியல் (semantics). தலித், கருப்பு, ஒபிசி, சூத்ரா இவை அனைத்தும் வெவ்வேறு பொருள் கொண்டது. அது மட்டுமல்லாமல், இது சில அடையாளங்களைக் குறிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் சில தெளிவற்ற தன்மை உள்ளதாகக் கூறி வருகின்றனர் சில விமர்சகர்கள். மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கடிதத்துக்கும், பல வடிவில் எதிர்ப்பும் சர்ச்சையும் கிளம்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக