சனி, 22 செப்டம்பர், 2018

மோடியை ‘திருடன்’ என்று விமர்சித்த முன்னாள் பிரான்ஸ் அதிபர், பிரதமர் பதில் என்ன?": ராகுல் காந்தி கேள்வி

Tamilthehindu :டெல்லியில் இன்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி   -  படம்: ஏஎன்ஐ ஐ.ஏ.என்.எஸ் புதுடெல்லி,
ரபேல் போர்விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று முன்னாள் பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலன்டே விமர்சித்துள்ளார். இதற்குப் பிரதமர் மோடி என்ன பதில் சொல்லப்போகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு மத்திய அரசு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
மத்திய அரசின் எச்ஏஎல் நிறுவனத்துடன் இணைந்து டசலாட் நிறுவனம் ரபேல் இணைந்து தயாரிப்பதற்கு ஒப்பந்தம் தருவதற்கு பதிலாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியது.
இந்நிலையில், முன்னாள் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹாலண்டே பிரான்ஸ் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், டசால்ட் நிறுவனம் எந்த இந்திய நிறுவனத்துடன் இணைந்து ரபேல் விமானத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற வாய்ப்பை மத்திய அரசு தரவில்லை. இந்திய அரசுதான் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துடன் மட்டுமே இணைந்து பணியாற்ற கூறியது என்று தெரிவித்தார்.
இதனால், ரபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அந்த கட்சியினர் பேசத் தொடங்கினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சராமாரியாக மத்திய அரசை விமர்சித்து கருத்துக்களை கூறிவந்தார்.
இந்நிலையில்,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதல்முறையாக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சுவா  ஹாலண்டே ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியைத் திருடன் என்று விமர்சித்துள்ளார். இந்த வார்த்தை பிரதமரின், பிரதமர் அலுவலகத்தின், மாண்பையும், மரியாதையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. நமது வீரர்களின், விமானப்படையின் எதிர்காலத்தையும் கேள்விக்குக்குறியாக்கியுள்ளது.
இது மிகவும் முக்கியமான விஷயம். பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேயின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கிறாராஅல்லது ஹாலண்டே பொய்கூறுகிறார் என மறுக்கிறாரா. உண்மை என்ன என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
 இத்தனை பெரிய குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளபோதிலும்கூட பிரதமர் மோடி வார்த்தைகூட பேசாமல் மவுனமாக இருப்பது வியப்பை அளிக்கிறது. மோடியின் வாயில் இருந்து ஒருவார்த்தை கூட வரவில்லை. பிரதமர் மோடியுடன் கைகலுக்கி, ரபேல் போர்விமான ஒப்பந்தத்தைச் செய்த முன்னாள் அதிபர் கூறும் குற்றச்சாட்டு.
அனில் அம்பானி ரூ.45 ஆயிரம் கோடி கடனில்சிக்கித் தவிக்கிறார். அவரைக் காப்பாற்றுவதற்காக ரூ.30 ஆயிரம் கோடி ஒப்பந்தத்தைப் பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.
ரபேல் போர்விமானக் கொள்முதல் மிகப்பெரிய ஊழல். இந்த அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் பிரதமர் மோடியைப் பாதுகாக்கின்றனர். ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும். பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேவையும் அழைத்து கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக