வியாழன், 13 செப்டம்பர், 2018

விநாயகர் சதுர்த்தி .... பகுத்தறிவு திமுகவினர் தடுமாறுவதும், தடம் மாறுவதும்

Palanivel Manickam : கனேஷ் பூஜா = கணபதி பூஜை = விநாயகர் சதுர்த்தி =
பிள்ளையார் சதுர்த்தி அதனை ஒட்டிய ஊர்வலம் என்பது ஒரு அரசியல் நிகழ்ச்சி.
இந்த அரசியல் நிகழ்ச்சியை தொடங்கியவர் திலகர் என்ற மராட்டிய பார்ப்பனர். கணபதி ஊர்வலத்தின் தாக்கம் அது தந்த வெற்றியை அனுபவித்த வட நாட்டு இந்துத்துவ செயல்பாட்டாளர்கள் அதனை மகாராஷ்டிராவில் தொடர்ந்து நடத்த தொடங்கினர். அங்கிருந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கு மெல்ல கொண்டு செல்ல தொடங்கினர்.
தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு என்பது தொன்மையானதொன்று அல்ல. அதுவே பிற்காலத்தில் தொடங்கியது. சமீபத்தில் இருபது ஆண்டுகளுக்கு உள்ளாக சாய்பாபா வழிபாடு வளர்ந்தது போல. இது குறித்து பேச நிறைய இருந்தாலும், குறிப்பாக பிள்ளையார் ஊர்வலத்திற்கும் இந்த பிள்ளையார் வழிபாட்டிற்கும் தொடர்பில்லை என்பதை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும்.
சரி இந்த அரசியல் யாருடைய அரசியல்? யாருக்கு லாபம் தரும் அரசியல் ஊர்வலம்? என்று பார்த்தால், இது இந்துத்துவவாதிகளின் அரசியல், இந்துத்துவ கட்சியான பிஜேபிக்கு லாபம் தரும் அரசியல் ஊர்வலம்.
இந்த ஊர்வலம் முதலில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நடத்தப்பட்டு கலவரங்கள் நடந்து விளம்பரமானது. பின்னர் மெல்ல சென்னையின் பிற பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்டது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த ஊர்வலத்தை திட்டமிட்டு சென்னையில் வெற்றிகரமாக வளர்த்தது யார்? என்பதுதான்.
திராவிட இயக்க வரலாறில், தந்தை பெரியாரின் வரலாறில், தமிழர்களின் சுயமரியாதை வரலாறில் முக்கியமான ஒன்று "பிராமனாள் கபே" "பிராமனாள் ஓட்டல்" எதிர்ப்பு போராட்டம் என்பது. அந்த போராட்டத்தின் வெற்றி என்பது தமிழர்களின் தன்மானத்தை மீட்டதில் பெரும் பங்கு வகித்தது. அந்த போராட்டத்தின் போது கடுமையாக எதிர்த்தவர் திருவல்லிக்கேணி முரளி கபே ஓனர். அந்த போராட்டத்தில் பெரியார் வெற்றி பெற்ற பிறகு அதே முரளி கபே ஓனர் பெரியார் திடலுக்கு வந்து பெரியாரை சந்தித்தார் என்பதும் வரலாறு.

ஏன் இடையே இந்த வரலாறை சொல்ல வேண்டியிருந்தது என்றால், அந்த முரளி கபே ஓனரின் மகனிடம்தான் சென்னையில் பிள்ளையார் ஊர்வலம் அசைன்மெண்டை ஒப்படைத்தது வடநாட்டு காவித்தலைமை. அந்த அசைன்மெண்டை வெற்றிகரமாக நடத்திக்காட்டியதால், பிள்ளையார் ஊர்வலத்தை தமிழ்நாடு முழுவதும் பரப்பும் முக்கிய வேலையையும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் தமிழ்நாடு முழுவதும் சமீபகாலமாக நாம் பார்க்கும் பூதாகரமான கணபதி சிலைகளும் ஊர்வலங்களும்.
காவி நிறம், காவி கொடி, இந்துத்துவ சிந்தனை இதற்கான விளம்பரமே இந்த பிள்ளையார் ஊர்வலம்.
அரசியல் லாப நோக்கோடு, கலவரத்தின் மூலமாக மக்களை பிரிக்கும் நோக்கோடு, திட்டமிட்டு நடத்தப்படும் இந்த ஊர்வலம் குறித்து எந்த புரிதலும் இல்லாமல் தமிழக மக்கள் ஏமாறுகிறார்கள்.
சாமானிய மக்கள் ஏமாறுவதில் தவறில்லை. அரசியல் அறிந்தவர்கள் ஏமாறலாமா?
ஜெயலலிதாவோடு நெருக்கமாக இருந்தனர் வடநாட்டு காவி தலைவர்கள். அந்த பழக்கத்தை பயன்படுத்தி தமிழகமெங்கும் இருக்கும் அதிமுக பொறுப்பாளர்களிடம் லோக்கல் காவிகள் நிதி வசூல் செய்தனர். அதிமுகவினர் பணம் தருவதால் போட்டி அரசியல் செய்யும் திமுகவினர் சிலரும் ஆங்காங்கு நிதி அளித்து வந்தனர். யாரோ அரசியலில் வளர இந்த அரசியல்வாதிகள் உதவி செய்துவந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவின் மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் வெளிப்படையாக இந்த பூஜைகளில் கலந்துகொண்டது சர்ச்சையானது. இப்படி கலந்துகொண்டால் தன் கட்சி அரசியலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது மாறாக சாதகமாகவே இருக்கும் என்ன தெளிவான புரிதலோடுதான் அவர் அந்த பூஜைகளில் கலந்துகொண்டார். அதே காலகட்டத்தில், தளபதி மு.க.ஸ்டாலின் பிள்ளையார் சதுர்த்திக்கு வாழ்த்தும் தெரிவித்தார். இந்த இரண்டும் தந்த சமிங்கையை அடுத்து இந்து முண்ணனியினர் உள்ளிட்ட இந்து வெறிபிடித்த பல அமைப்பினர் நடத்தும் விநாயகர் ஊர்வல நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் நிதி உதவி வழங்குவதும் அதில் கலந்துகொள்தும் அதிகரிக்க ஆரம்பித்தது.
தற்போது திமுகவின் தலைவராக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் பிள்ளையார் சதுர்த்தி விநாயகர் ஊர்வலத்திற்கு திருச்சியை சேர்ந்த இளைஞர் அணியினர் திமுகவின் கழக வண்ணத்தில் நிகழ்ச்சி நிரல் அச்சடித்து அதில் திருச்சி மாவட்ட செயலாளர் கலந்துகொள்வார் என குறிப்பிட்டு பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.
ஆரியத்தை பொருத்தவரை இது பரிணாம வளர்ச்சி. திராவிடத்தை பொருத்தவரை இது பரிணாம தேய்வு!
இந்த பரிணாம அழிவை தடுக்கும் பெரும் கடமை திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கிறது. அவர் அந்த கடமையை செய்வார் என திராவிட இயக்க உணர்வார்கள் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.
குறிப்பு : இது ஒரு பிஜேபியின் அரசியல் நிகழ்ச்சி என்பதை உணர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கவனமாக தவிர்ப்பது பாராட்டுக்குரியது. ஆன்மீக, மூட நம்பிக்கைகளில் அதிக நாட்டமுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே அரசியல் புரிதலோடு இருக்கும்போது, பகுத்தறிவு இயக்கமாம் திமுகவினர் தடுமாறுவதும், தடம் மாறுவதும் வியப்பாக இருக்கிறது.
- திராவிடப் புரட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக