புதன், 26 செப்டம்பர், 2018

சாலை விபத்தில் இளம்பெண் பலி: மகளைக் கொன்றதாக மாமனார், மைத்துனர் மீது எஸ்.ஐ.புகார்

tamil.thehindu.com :யானைக்கவுனியில் சாலை விபத்தில் உயிரிழந்த மகளை தனது மாமனாரும், மைத்துனரும் திட்டமிட்டு விபத்து ஏற்படுத்திக் கொலை செய்ததாக காவல்துறை உதவி ஆய்வாளரான தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை வடக்குக் கடற்கரை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் துளசிங்கம் (54). இவரது மாமனார் ரத்தினத்துக்கு (65) சொந்தமான வீடு திருப்பள்ளித்தெரு யானைக்கவுனியில் உள்ளது. இந்த வீடு சம்பந்தமாக சொத்துப் பிரச்சினை இருந்துள்ளது.
துளசிங்கத்தின் மகள் ரம்யாவுக்கு (28) இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் திருப்பள்ளித்தெருவில் உள்ள தனது தாத்தா வீட்டில் வசித்து வந்துள்ளார். நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல பியூட்டி பார்லர் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
சொத்துப் பிரச்சினையில் மாமனார் ரத்தினம், அவரது மகன் எத்திராஜ் மற்றும் மருமகன் துளசிங்கத்துக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ரத்தினத்தின் மனைவி சந்திரா கடந்த ஒராண்டுக்கு முன் மரணமடைந்துள்ளார்.

இதன் பின்னர் பேத்தி ரம்யாவை தாத்தா ரத்தினம் வீட்டைவிட்டு வெளியே செல்லும்படி கேட்டுக்கொண்டும் அவர் மறுத்து அங்கேயே தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி இரவு 10 மணி அளவில் பணி முடிந்து ரம்யா வீடு திரும்பியுள்ளார். அவரது ஆக்டிவா வாகனம் வால்டாக்ஸ் சாலையிலிருந்து  சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் வரும் போது பின்னால் வந்த டாட்டா 407 மினிவேன் மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட ரம்யாவுக்கு தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அக்கம்ப்பக்கத்திலிருந்தவர்கள் ரம்யாவை மீட்டு  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அன்றிரவு ரம்யா உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
விபத்துக்குக் காரணமான 407 வேனை ஓட்டிவந்த ஓட்டுநர், பட்டாபிராம் கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பழனி (49) என்பவரைக் கைது செய்தனர்.
ரம்யா விபத்தில் உயிரிழந்தது குறித்து தகவலறிந்து வந்த அவரது தந்தை துளசிங்கம் போக்குவரத்து புலனாய்வு போலீஸாரிடம் ரம்யாவின் மரணம் விபத்தல்ல அது தனது மாமனார் மற்றும் மைத்துனரால் திட்டமிட்டு செட்டப் செய்யப்பட்ட விபத்து என்று புகார் கூறினார்.
போக்குவரத்து புலனாய்வு போலீஸார் சந்தேகம் எதுவும் இருந்தால் சட்டம் ஒழுங்கு போலீஸில் புகார் அளிக்கும்படி துளசிங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் 407 மினிவேன் ஓட்டுநர் பழனியைக் கைது செய்து ஐபிசி 279 (தாறுமாறாக வாகனத்தை ஓட்டுதல்), 338 (விபத்தின் மூலம் ஒருவர் உயிருக்கும், உடலுக்கும் சேதத்தை விளைவித்தல்) மற்றும் மோட்டார் வாகனச் சட்டம் 184, 304(A) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மகள் உயிரிழந்த சோகத்தில் துளசிங்கம் மாமனார், மைத்துனர் மீது அபாண்டமாக குற்றச்சாட்டு வைத்துள்ளாரா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். ஆனாலும் இது விபத்து வழக்காகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக