திங்கள், 10 செப்டம்பர், 2018

புல்லட் நாகராஜன் கைது!

புல்லட் நாகராஜன் கைது!மின்னம்பலம் : தேனியில் காவல் துறை உயரதிகாரிகளுக்குத் தொலைபேசியில் மிரட்டல் விடுத்த புல்லட் நாகராஜனை, பெரியகுளத்தில் இன்று (செப்டம்பர் 10) காலை கைது செய்துள்ளனர்.
பிரபல ரவுடி புல்லட் நாகராஜனின் சகோதரர் ரமேஷ், கொலை வழக்கொன்றில் தண்டனை பெற்று மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்கு வந்த பெண் மருத்துவர் ஒருவரிடம், தனக்கு அதிகளவில் தூக்க மாத்திரைகள் தரும்படி வற்புறுத்தியதாகவும், அதற்கு அந்த மருத்துவர் மறுத்துவிட்டதாகவும், இதன் காரணமாக அந்த மருத்துவரைத் தாக்க அவர் முற்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இது குறித்து மருத்துவர் அளித்த புகாரின் பேரில், மதுரை மத்தியச் சிறையில் கமாண்டோக்களால் அவர் தாக்கப்பட்டார். சிறைத் தண்டனை முடிந்து வெளியே வந்ததும், புல்லட் நாகராஜைச் சந்தித்து நடந்ததைத் தெரிவித்தார் அவரது சகோதரர். இதனால் ஆத்திரமடைந்த புல்லட் நாகராஜன், மதுரை மத்திய சிறை எஸ்பி ஊர்மிளா மற்றும் அந்த மருத்துவருக்கு வாட்ஸ்அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில், ஜெயமங்கலத்தில் தென்கரை காவல் ஆய்வாளர் மதனகலா சில கைதிகளை அடித்ததாகக் கூறி, செல்போனில் அவருக்கு மிரட்டல் விடுத்தார் புல்லட் நாகராஜன்.
இதுதொடர்பாக மதுரை மத்தியச் சிறை அலுவலர் ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில், புல்லட் நாகராஜன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மதுரை மாநகரக் காவல் ஆணையர் தேவாசீர்வாதம் உத்தரவிட்டிருந்தார். இதனால், அவரைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர். இரு காவல்துறை அதிகாரிகளையும் மிரட்டிய புல்லட் நாகராஜனை பிடிக்க 7 தனிப்படை காவல் துறையினர்தேனி விரைந்தனர். கொலை மிரட்டல், பொது இடத்தில் அருவருப்பான வார்த்தைகளால் பேசி மிரட்டுவது, அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் அச்சுறுத்துவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல்து றையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இன்று, ஜெயமங்கலம் பகுதியில் தனது வீட்டின் அருகே புல்லட் நாகராஜன் பதுங்கி இருந்ததாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற தென்கரை காவல் ஆய்வாளர் மதனகலா தலைமையிலான காவல் துறையினர், அவரைக் கைது செய்தனர். அவர், தென்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பிரபல ரவுடியான புல்லட் நாகராஜன் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன. இவர் மீது 1996ஆம் ஆண்டு முதல் 71 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக