சனி, 15 செப்டம்பர், 2018

7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை - ஆளுநர் மாளிகை மறுப்பு

7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை - கவர்னர் மாளிகை மறுப்புமாலைமலர் :பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக உள்துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக வெளியான தகவலை கவர்னர் மாளிகை மறுத்துள்ளது.
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிக்குமார் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதற்கிடையே தண்டனை பெற்ற 7 பேரும் கடந்த 27 ஆண்டுகளாக ஜெயிலில் இருப்பதை சுட்டிக்காட்டி தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
ஜனாதிபதி தங்களது கருணை மனுவை தாமதமாக பரிசீலனை செய்ததை காரணம் காண்பித்து அவர்கள் விடுதலை கோரி இருந்தனர்.


வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு 7 பேர் விடுதலையில் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கலாம் என்று கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. உடனே அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, “ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை” செய்யப்போவதாக அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றி அவர் அனுப்பி இருந்தார். ஆனால் மத்திய அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. நடத்தியதால் கைதிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.



என்றாலும் தமிழக அரசு தனது நிலையில் இருந்து இறங்கவில்லை. 7 பேரையும் விடுதலை செய்ய அதிகாரம் இருப்பதாக தெரிவித்தது. இந்த வழக்கில் கடந்த 6-ந்தேதி தீர்ப்பு அளித்த சுப்ரீம்கோர்ட்டு, “7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம்” என்று அறிவித்தது.

இதையடுத்து தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

பின்னர் அந்த பரிந்துரை கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இதற்கிடையே நேற்று இந்த விவகாரத்தில் பரபரப்பான புதிய தகவல் ஒன்று வெளியானது. 7 பேரை விடுதலை செய்ய கோரும் அமைச்சரவை பரிந்துரையை மத்திய உள்துறைக்கு கவர்னர் அனுப்பி வைத்திருப்பதாக தகவல் வெளியானது.

மத்திய உள்துறை அதுபற்றி ஆலோசித்து வருவதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டு இருந்தது. எனவே 7 பேர் விடுதலையில் புதிய சிக்கல்கள் எழுந்திருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த பரபரப்பு தகவலை இன்று (சனிக்கிழமை) கவர்னர் மாளிகை மறுத்தது. இது தொடர்பாக கவர்னர் மாளிகை இணை இயக்குனர் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்த கைதிகளை விடுதலை செய்யக்கோரும் தமிழக அரசின் பரிந்துரையை கவர்னர் மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்திருப்பதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. இதை அடிப்படையாக கொண்டு சில தொலைக்காட்சிகளில் விவாதங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் மத்திய உள்துறைக்கு கவர்னர் மாளிகை சார்பில் எந்த ஒரு குறிப்பும் அனுப்பவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வழக்கு மிகவும் முரண்பாடான ஒன்று. இதில் சட்ட ஆய்வு, நிர்வாக ஆய்வு, அரசியல் சாசன ஆய்வு ஆகியவை அடங்கியுள்ளன.

இது தொடர்பான ஆவணங்கள், அது தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் அரசின் பரிந்துரை அனைத்தும் நேற்றுதான் (14.9.2018) கவர்னர் மாளிகைக்கு வந்துள்ளன. இந்த பரிந்துரை மீதான ஆய்வை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும்.

இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனைகள் உள்பட அனைத்து ஆலோசனைகளும் தேவைக்கேற்ப பெறப்படும். அதன் அடிப்படையில் சட்டப்படி பாரபட்சமின்றி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழக அரசின் பரிந்துரை தற்போது கவர்னர் பன்வாரிலாலின் ஆலோசனையில் இருப்பது உறுதியாகி உள்ளது. அவர் மத்திய உள்துறைக்கு அதை அனுப்புவாரா? அல்லது சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி தாமாகவே முடிவை அறிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக