வியாழன், 20 செப்டம்பர், 2018

ஒரு கோடி ரூபாய் கூலி… 4 அட்டெம்ப்ட்..சிக்கிய 7 பேர்! – பிரனய் கொலை வழக்கின் பின்னணி

ஆணவக்கொலை
அம்ருதாவின் தந்தைvikatan.com -அஷ்வினி சிவலிங்கம் : தெலங்கானாவில் பட்டப்பகலில் மருத்துவமனை வளாகத்தில் காதல் மனைவி முன்பு கணவன் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணும் காதலித்துள்ளனர். அம்ருதாவின் தந்தை மாருதிராவ், ஒரு தொழிலதிபர். பிரனய் -அம்ருதா காதல் விவகாரம் இருவர் வீட்டிலும் தெரிய வர, பிரச்னை வெடித்தது. பிரனய், பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அம்ருதாவிடம் பிரனய் உடனான காதலை முறித்துக்கொள்ளும்படி மிரட்டினார்.
அம்ருதாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுசெய்தார். இதையடுத்து பிரனய் – அம்ருதா, கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் உள்ள ஆரிய சமாஜில் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில், 5 மாதம் கர்ப்பமாக இருந்த அம்ருதாவும் பிரனய்யும் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது, மர்ம நபர் ஒருவர், பிரனய்யை வெட்டிக் கொலைசெய்தார். சிசிடிவி-யில் பதிவான இந்தக் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில் இந்த ஆணவக் கொலையில் தொடர்புடைய 7 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களின் விவரம் பின்வருமாறு.. அம்ருதாவின் தந்தை மாருதிராவ், பீகார் கூலிப்படையை சேர்ந்த சுபாஷ் குமார், அஸ்தர் அலி, அப்துல் பரி (நல்கொண்டா பகுதியை சேர்ந்தவர்கள்), மிர்யால்குடா டவுனின் காங்கிரஸ் தலைவர் அப்துல் கரீம், மாருதிராவின் சகோதரர்கள் இருவர் மற்றும் மாருதி ராவின் கார் ஓட்டுநர்.
ஆணவக்கொலை
ஆக, அம்ருதா வீட்டின் கார் ஓட்டுநர் உட்பட இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளனர். போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல்கள் மேலும் அதிர்ச்சியைக் கொடுப்பதாக இருக்கிறது. நல்கொண்டா எஸ்.ஐ ஏ.வி.ரங்கநாத், கைது செய்யப்பட்ட 7 பேர்களுடன் ஊடகங்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது,
`தொழிலதிபரான மாருதிராவ் தன் மகள் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டதை விரும்பவில்லை. இதனால் தன் சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அம்ருதாவின் கணவர் பிரனய்யை கொலை செய்ய திட்டம் போட்டார். வேறுமாநிலத்திலிருந்து கூலிப்படையை வைத்து கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காக நல்கொண்டா பகுதியில் வசித்துவரும், அஸ்தர் அலி, அப்துல் பரி என்பவர்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். இந்த வேலையைக் கட்சிதமாக முடிக்க ரூ.1 கோடியை அவர்களுக்கு கொடுத்தார். அஸ்தர் மற்றும் அப்துல், கடந்த 2003-ம் ஆண்டு நடந்த குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்றவர்கள். அவர்கள் இருவரும் பீகாரை சேர்ந்த சுபாஷ் என்பவரிடம் கொலை செய்யும் பொறுப்பை ஒப்படைத்தனர். பிரனய்யை பின் தொடர்ந்து சென்ற சுபாஷின் கொலை முயற்சி நான்கு முறை தோல்வியைத் தழுவியது. ஐந்தாவது முயற்சியில்தான் பிரனய் கொடூரமாகக் கொல்லப்பட்டார். 5 மாத கர்ப்பிணியான அம்ருதா கணவனை இழந்து நிர்கதியாக நின்றார்.
துரிதமாகச் செயல்பட்டு ஆணவக் கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்த காவல்துறைக்கு தெலங்கானாவில் பாராட்டுகள் குவிகின்றன.
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக