வியாழன், 20 செப்டம்பர், 2018

ஹெச்.ராஜாவை கைது செய்ய அறநிலைய துறையினர் ஆர்ப்பாட்டம் . செப்.27-ல் உண்ணாவிரத போராட்டம்

tamil.thehindu.com/ திருச்சி . இந்து அறநிலைய துறை பணியாளர்கள் நேற்று கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையினரையும், அவர்களது குடும்பத்தினரையும் ஹெச்.ராஜா அவதூறாகவும், இழிவாகவும் பேசியதாகக் கூறி அவரைக் கண்டித்தும், அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கக் கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் முன்பு நேற்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் கல்யாணி தலைமை வகித்தார்.

கோயில் இணை ஆணையர் பொ.ஜெயராமன், சமயபுரம் கோயில் இணை ஆணையர் குமரதுரை, திருவானைக்காவல் கோயில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா, மலைக் கோட்டை கோயில் உதவி ஆணையர் விஜயராணி, சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் நிர்வாக அலுவலர் பாரதராஜா மற்றும் அறநிலையத் துறை அனைத்து கோயில் பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதுதொடர்பாக தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர் சங்க இணைப் பொதுச் செயலாளர் சுதர்சன் கூறியது:
“ஹெச்.ராஜா மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளோம். பின்னர், வரும் 27-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநில அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். ஹெச்.ராஜாவைக் கைது செய்யும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக