வெள்ளி, 28 செப்டம்பர், 2018

ரஃபேல் ஊழலின் அதிர்ச்சியூட்டும் கதை – 1 அம்பானிகளின் சொத்து ஒவ்வொரு நொடிக்கும் 34,666 உயர்வு ...

சவுக்கு :பிரதமர் என்ற முறையில் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு 2015 ஏப்ரலில்
முதல்முறையாகப் பயணம் மேற்கொண்டபோது, அந்நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத் தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்காக முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பல ஆண்டுகளாக நடந்துவந்த பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டியிருந்தது. இந்திய விமானப் படைக்கு 126 ஜெட் விமானங்களை மிகக் குறைந்த விலையில் வழங்குவதற்கு முன்வந்திருப்பது டஸ்ஸால்ட் நிறுவனம்தான் என 2012இல் மன்மோகன் சிங் அரசு அறிவித்தது. கிட்டத்தட்டப் பத்தாண்டுக் காலம் கவனமாகத் திட்டமிட்டு, களச் சோதனைகள் நடத்தி, கடுமையான மதிப்பீடுகளுக்கு உட்படுத்தி ஏழு தொகுப்புகளாக அந்த விமானங்களை இறுதியாகக் கொள்முதல் செய்துவிடலாம் என்ற கட்டத்திற்கு இந்தியா வந்திருந்தது. 2014இல் மோடி அரசு ஆட்சிக்கு வந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் தனது முத்திரையைப் பதிக்கும் வாய்ப்பு மோடிக்கு கிடைத்தது.

மோடியின் பிரான்ஸ் பயணத்தில் முதல் நாள் தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரலில் முக்கியமாக இடம் பெற்றவை அந்நாட்டு ராணுவத் தளவாட நிறுவனங்களின் தலைவர்களுடன் ஒரு வட்ட மேசை மாநாடும், அதிபருடனான பேச்சுவார்த்தையும். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மோடி, கூடிய விரைவில் 36 ரஃபேல் ஜெட் விமானங்களை, பறப்பதற்குத் தயாராக உள்ள நிலையில் வாங்கிடும் வகையில், வெளிநாட்டு ராணுவத் தளவாடக் கொள்முதல் தொடர்பாக ஏற்கெனவே இருந்துவரும் உலக அளவில் ஒப்பந்தப் புள்ளி கோருகிற நடைமுறைக்கு மாறாக, இரண்டு நாடுகளின் அரசுகள் நேருக்கு நேராகப்  பேசி முடிவு செய்வது என்ற அடிப்படையில் பிரான்ஸ் அதிபருடன் விவாதித்ததாகக் கூறினார்.
மீறப்பட்ட நடைமுறைகள்
வெளிநாடுகளிலிருந்து ராணுவத் தளவாடங்களை வாங்குவதில் அதுவரை இருந்துவந்த நடைமுறைகள் அனைத்தும் இதில் முற்றிலுமாக மீறப்பட்டன. இந்தியாவுக்குத் தனது தயாரிப்புகளை விற்பனை செய்கிற எந்தவொரு வெளிநாட்டு நிறுவனமும் இதுபோன்ற பெரும் முதலீடு சார்ந்த ஒப்பந்தங்களில், விலையாகக் கிடைக்கும் மொத்தத் தொகையில் ஒரு பகுதியை இந்தியாவிலேயே ஏதாவது ஒரு வடிவில் மறுமுதலீடு செய்ய வேண்டும். உள்நாட்டுத் தயாரிப்பு, நிதி முதலீடு, தொழில்நுட்பப் பகிர்வு என அந்த மறுமுதலீட்டு ஏற்பாடு அமையலாம். டசால்ட் நிறுவனமும் இந்த நிபந்தனைக்கு உட்பட்டதே. ஒப்பந்தப்புள்ளிப் போட்டியில் வெற்றி பெறுகிற எந்த நிறுவனமானாலும், இந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில் இந்திய அரசுக்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் (எச்ஏஎல்)  நிறுவனத்தை முக்கியக் கூட்டாளியாகச் சேர்த்துக்கொண்டு செயல்பட வேண்டும். மோடியின் புதிய ஒப்பந்தத்திலோ எச்ஏஎல் நிறுவனத்திற்கு இந்த ஆட்டத்தில் இடமே இல்லை.
ஆட்ட விதிகள் மாற்றப்பட்டது மோடி அரசின் உயரதிகாரிகளுக்கே தெரியாது. பிரதமர் பிரான்சுக்குப் புறப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக வெளியுறவுச் செயலர் எஸ். ஜெய்சங்கர் தில்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பாக டசால்ட், எச்ஏஎல் நிர்வாகங்களும், பாதுகாப்புத் துறை அமைச்சகமும் பேச்சு நடத்திக்கொண்டிருப்பதாகக் கூறினார். அதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாக டசால்ட் தலைமை நிர்வாகி, “பொறுப்பேற்பு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று எச்ஏஎல்  தலைவர் தெரிவித்திருப்பது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது,” என்று கூறினார். “ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவதும், கையெழுத்திடுவதும் விரைவில் நடக்கும்,” என்ற வலுவான நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
புதிய ஒப்பந்தம் வர இருப்பது தொடர்பாக மோடி பிரான்ஸ் தலைநகரில் மேற்கண்டவாறு அறிவித்ததைத் தொடர்ந்து, அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேச்சுவார்த்தை விவரங்கள் தனக்கு இன்னும் தெரியவரவில்லை என்றார். மற்றொரு பேட்டியில், “இந்த முடிவு அநேகமாகப் பிரதமருக்கும் பிரான்ஸ் அதிபருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாகவே எடுக்கப்பட்டிருக்கும்,” என்று கூறினார்.
இப்படிக் கூறிய ஒரு சில சில மாதங்களில் அவர் நாடாளுமன்றத்தின் முன் தெரிவித்த தகவலில், 126 விமானங்களை வாங்குவதற்கான மூல நடைமுறை அதிகாரபூர்வமாக இப்போதும் செல்லுபடியாகிறது என்று கூறினார். 2016 செப்டம்பரில் அவரும் பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சரும் 36 ரஃபேல் விமானங்களை டசால்ட் நிறுவனத்திடமிருந்து வாங்கிக் கொள்வதற்கான இரு நாட்டு அரசுகளுக்குமிடையேயான உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். அந்த 36 விமானங்களும் 2019 தொடங்கி 2022க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஒப்பந்த மதிப்பு சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய். இதில் பாதித் தொகையை டசால்ட் நிறுவனம் இங்கே மறுமுதலீடு செய்ய வேண்டும்.
அம்பானியின் புது நிறுவனம்
மோடி அறிவிப்புக்கு 13 நாட்கள் முன்பாகத்தான்  அனில் அம்பானி  தலைமையிலான ரிலையன்ஸ் குரூப் தனது புதிய கிளை நிறுவனமாக ‘ரிலையன்ஸ் டிஃபன்ஸ் லிமிட்டெட்’ என்ற குழுமத்தைப் பதிவு செய்கிறது. மோடியின் பிரான்ஸ் பயணத்தின்போது அனில் அம்பானி பாரிஸ் நகரில்தான் இருந்தார். ரிலையன்ஸைப் பொறுத்தவரையில் ராணுவத் தளவாட வணிகம் அதற்கு முற்றிலும் புதிய துறையாகும். பாதுகாப்புத் துறை இறக்குமதிகளைக் கையாளுகிற கப்பல் தள ஒப்பந்தம் ஒன்று அண்மையில்தான் ரிலையன்ஸ் குழுமத்துக்குக் கிடைத்திருக்கிறது. அதற்கு முன் ராணுவப் பொருட்கள் சார்ந்த எந்த ஒரு வணிக அனுபவமும்  ரிலையன்ஸ்சுக்குக் கிடையாது. ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தான பத்து நாட்களில் ரிலையன்ஸ் குரூப், டசால்ட் இரு நிர்வாகங்களும், ‘டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிட்டெட்’ என்ற புதிய கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டிருப்பதாக அறிவித்தன. வான்வெளி தொடர்பான வணிகம் எதிலும் முன்னனுபவமற்ற அம்பானி நிறுவனத்திற்குத் திடீரென்று பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வான்வெளி சார்ந்த ஒரு வணிகம் உத்தரவாதமாகிறது!
அரசியல் சொற்போர்
இந்தப் போர் விமான ஒப்பந்தத்தால் ஒரு சொற்போர் மூண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராவதற்குச் சில நாட்கள் முன்பாக 2017 ஏப்ரலில் ராகுல் காந்தி, “ஒரு வர்த்தகரின் ஆதாயத்திற்காக மொத்த ஒப்பந்தத்தையும்” மோடி மாற்றிவிட்டார் என்று குற்றம் சாட்டினார். 2018 ஜூலையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மோடி எதிர்கொள்வதற்கு முன்பாக,  விமானங்களுக்கு மிக அதிக விலை தர ஒப்புக்கொண்டதன் ரகசியம் என்னவென்று அரசு விளக்க வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தினார். மன்மோகன் சிங் அரசு 126 விமானங்களை 10.2 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கப் பேசி முடித்திருந்த நிலையில், மோடி அரசு வெறும் 36 விமானங்களுக்கு 8.7 பில்லியன் டாலர் விலை தர ஒப்புக்கொண்டது எப்படி என்று காங்கிரஸ் கேட்டது. ஒவ்வொரு விமானத்துக்கும் தற்போதைய அரசு 1,670 கோடி ரூபாய் விலை தருகிறது, இது முதலில் ஒப்புக்கொள்ளப்பட்டதை விட மூன்று மடங்கு விலை என்று காங்கிரஸ் கூறியது.
மோடியின் பாரிஸ் அறிவிப்பைத் தொடர்ந்து இருநாட்டு அரசுகளும் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன. அதில், விமானங்களும் அவற்றுடன் இணைந்த செயல்பாட்டு அமைப்புகளும் ஆயுதங்களும் இந்திய விமானப் படையால் பரிசோதனை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அதே கட்டமைப்புகளின் கீழ், அதாவது ஏற்கெனவே நடந்துள்ள விமானத் தேர்வு நடைமுறைகளில் ஏற்கப்பட்ட  வரையறைகளின்படி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போதைய ஒப்பந்தம் கேள்விக்கு உள்ளான நிலையில், முந்தைய பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிகளுக்கும் தற்போதைய ஒப்பந்தத்தில் உள்ள விதிகளுக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் இருக்கின்றன என்று மோடி அரசு கூறுகிறது. தற்போதைய ஒப்பந்தத்தில் விமானங்களில் இணைப்பதற்கான கூடுதல் செயலமைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன, இந்தியத் தேவைகளுக்கு ஏற்ற மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன என்று அரசு கூறுகிறது. ஆனால், அவற்றின் விலை மதிப்பை நேரடியாக ஒப்பிட முடியாது என்கிறது. புதிய ஒப்பந்தத்தில் அப்படியென்ன கூடுதல் ஏற்பாடுகள் இருக்கின்றன என்ற விவரங்கள் எதையும் அரசு வெளியிடவில்லை. இது ஒப்பந்தத்தில் ஏதோ கசமுசா நடந்திருக்கிறது என்ற சந்தேகத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
ஒப்பந்த மர்மம் குறித்துக் கடந்த ஆண்டு நவம்பரில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சராக அண்மையில் நியமிக்கப்பட்ட நிர்மலா சீதாராமன், ரஃபேல் விமானங்களுக்கான விலை விவரங்களை ஊடகங்களுக்கு வெளியிடப் போவதாக அறிவித்தார். “திட்டவட்டமான புள்ளிவிவரங்களைத் தருவதிலிருந்து நான் நழுவப்போவதில்லை” என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், அவருடைய அமைச்சகம் அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியது. இது தொடர்பாக இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே ஒரு ரகசிய உடன்பாடு இருக்கிறது என்று அமைச்சகம் காரணம் கூறியது.
கடந்த ஜூலையில் நாடாளுமன்றத்தில், அரசின் மௌனத்தை நியாயப்படுத்திய நிர்மலா சீதாராமன் இதே காரணத்தைத்தான் கூறினார். ஆனால் இவ்வாண்டு மார்ச் மாதம், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே, ஒவ்வொரு ரஃபேல் விமானத்துக்கும் தரப்படும் விலை ரூ.670 கோடி மட்டுமே என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். விமானத்துடன் இணைந்து வருபவை என்று கூறப்படும் கூடுதல் செயலமைப்புகள், ஆயுதங்கள் ஆகியவற்றுக்கான விலை பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.
ஒப்பந்தப் புதிர் மேலும் சிக்கலானதேயன்றித் தெளிவாகவில்லை. இவ்வாண்டு ஜூலையில் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த ஒப்பந்தம் 2008ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட ஒரு பாதுகாப்பு உடன்படிக்கைக்கு உட்பட்டது என்றும், அதன்படி, ஒப்பந்தக் கூட்டாளி தருகிற முக்கியத் தகவல்களைப் பாதுகாக்க இரு நாட்டு அரசுகளும் சட்டபூர்வமாகக் கடமைப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கை கூறியது. பாதுகாப்புத் துறை ஒப்பந்த  வல்லுநரான டி.ரகுநாதன் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ரகசியக் காப்பு உடன்படிக்கை எதுவும் இல்லையென ராகுல் காந்தி சொன்னது தவறு, ஆகவேதான் அதை அரசாங்கத்தால் மறுக்க முடிந்திருக்கிறது என்றார்.
எது ரகசியம்?
இதில் புரிந்துகொள்ள முடியாதது என்னவென்றால், ஒரு நாட்டின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய தகவல்களையும், விமானத்தின் குறிப்பான செயலமைப்பு நுட்பங்கள் பற்றிய தகவல்களையும் வெளியே சொல்லக் கூடாது என்பதுதான் உடன்படிக்கை; விலை விவரங்கள் அந்த ரகசியத்துக்குள் வருமா என்பதுதான் கேள்வி.
(ஊழல் பயணத்தின் அடுத்த அத்தியாயம் நாளை)
நன்றி: கேரவான்
http://www.caravanmagazine.in/business/india-gambles-defence-interests-reliance-group
தமிழில்: அ. குமரேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக