திங்கள், 27 ஆகஸ்ட், 2018

ஸ்டாலின் to கனிமொழி : யார் என்ன சொன்னாலும் உன்னுடைய அரசியல் திறமை எனக்குத் தெரியும்

மு.க.அழகிரி`அப்பாவுக்கு நான்; எனக்கு நீ!' - கனிமொழிக்கு ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிஆ.விஜயானந்த் :விகடன்:
தி.மு.கவின் புதிய தலைவராக நாளை பொறுப்பேற்க இருக்கிறார் மு.க.ஸ்டாலின். `கனிமொழிக்கு இன்னும் ஒரு மாதத்தில் முக்கியப் பதவி வழங்குவதாக உறுதியளித்திருக்கிறார் ஸ்டாலின். அதேநேரம், அமைதிப் பேரணியில் பங்கேற்பதற்கு முன்னர் ராஜாத்தி அம்மாளிடமும் ஆசீர்வாதம் பெறுவதற்கு நேரம் கேட்டிருக்கிறார் அழகிரி' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.கவின் பொதுக்குழுக் கூட்டம் நாளை நடைபெறவிருக்கிறது. இதில், தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்காக நேற்று மனுத்தாக்கல் செய்தார் மு.க.ஸ்டாலின். இந்த நிகழ்வுக்குப் பிறகு ஸ்டாலினுக்கு உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தார் கனிமொழி. இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகி ஒருவர், ``பொதுக்குழுவில் கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பேசி வந்தனர். `தற்போது மகளிர் அணி மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அவருக்கு, துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும்' எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், பொதுக்குழுவில் துரைமுருகன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட இருக்கிறார். `சீனியர்களுக்குப் பதவி வழங்குவது தவறில்லை. அதேநேரம், கனிமொழிக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்' எனக் குடும்ப உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தினர். இதற்கு அப்போது ஸ்டாலின் எந்தப் பதிலையும் சொல்லவில்லை.

இந்நிலையில், நேற்று இதற்குப் பதில் அளித்தார் ஸ்டாலின். கனிமொழியிடம் பேசிய அவர், `அப்பாவுக்கு நான் இருந்ததுபோல, எனக்கு நீ இருக்கிறாய். என்னை முதல்வராக்க வேண்டிய பொறுப்பில் இருக்கக் கூடிய சகோதரியாகத்தான் உன்னைப் பார்க்கிறேன். உன்னுடைய அரசியல் அறிவையும் செல்வாக்கையும் நான் மதிக்கிறேன். யார் என்ன சொன்னாலும் உன்னுடைய அரசியல் திறமை எனக்குத் தெரியும். ஒரு மாதத்தில் நல்ல பதவியைத் தருகிறேன். உறுதியாக என்னை நம்பு' எனக் கூறியிருக்கிறார். இதைக் கனிமொழியும் ஏற்றுக் கொண்டார்" என விவரித்தவர், 
``கருணாநிதி சமாதியில் அழகிரி நடத்தப்போகும் பேரணி குறித்த தகவல்களையும் கட்சி நிர்வாகிகள் விசாரித்த வண்ணம் இருக்கின்றனர். தென்மாவட்டம் மட்டுமல்லாமல், வடக்கு, மேற்கு ஆகிய மாவட்டங்களிலும் ஆள்களைத் திரட்டி வருகிறார் அழகிரி. இதற்கான பணியில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஸ்டாலினால் பாதிக்கப்பட்டவர்களை ஒன்று திரட்டும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. உதாரணமாக, தஞ்சையில் தொண்டர் செல்வாக்குள்ள நபராக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் இருந்தார். அவருக்குப் பதிலாக துரை.சந்திரசேகர் கொண்டு வரப்பட்டார். இதனால் கட்சி வளர்ச்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பழனி மாணிக்கத்துக்கு எதிராக டி.ஆர்.பாலு முன்னிறுத்தப்படுகிறார். பாலுவுக்குத் தொண்டர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இல்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி வேணு, ஆவடி நாசர், சுதர்சனம் ஆகியோர் பொறுப்பாளர்களாக இருந்தாலும், இவர்களில் சிலரால் உண்மையான கட்சி நிர்வாகிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூரிலும் இதேநிலைதான். வீரபாண்டி ஆறுமுகம் தரப்பினர், என்.கே.கே.பி ராஜா ஆதரவாளர்கள் என அறிவாலயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளவர்கள் ஏராளம். இவர்களில் யார் உண்மையான கட்சித் தொண்டர்கள் எனக் கண்டறிந்து, அவர்களை அரவணைக்கும் பணியில் தலைமை ஆர்வம் காட்ட வேண்டும். அப்படிப்பட்ட எந்த முயற்சியும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.
`அதிருப்தியாளர்கள் அணி திரண்டுவிடக் கூடாது' என்ற அச்சம்தான் சீனியர்கள் மத்தியில் உள்ளது. அடுத்ததாக, தலைவராகப் பொறுப்பேற்க இருக்கும் ஸ்டாலின் முன்னால் பெரும் சவாலாக இருக்கப் போவது திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள்தாம். இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். திருவாரூரில் வெற்றி பெற்றால், `கருணாநிதி தொகுதி என்பதால் வெற்றி எளிதாகிவிட்டது' என்பார்கள். திருப்பரங்குன்றத்தில் தோற்றுவிட்டால், கட்சியின் நிலைமை இன்னும் சிக்கலாகிவிடும். `ஆர்.கே.நகர் போல அமைதியாக இருந்துவிடக் கூடாது' எனவும் கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர்” என்றவர் இறுதியாக,
``கருணாநிதி சமாதியில் அமைதிப் பேரணி நடத்தப் போவதற்கு முன்பாக, கோபாலபுரத்தில் தயாளு அம்மாவைச் சந்தித்து ஆசி வாங்க இருக்கிறார் அழகிரி. இதன்பிறகு, ராஜாத்தி அம்மாளிடமும் ஆசீர்வாதம் வாங்க இருக்கிறார். இதன் அரசியல் வியூகங்களை உணர்ந்துதான், கனிமொழிக்கு இன்னும் ஒரு மாதத்தில் பதவி தருவதாக உறுதியளித்தார் ஸ்டாலின்" என்றார் நிதானமாக.
அமைதிப் பேரணி என்ற பெயரில் அறிவாலயத்தை ஆட்டுவிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அழகிரி. அவரது ஒரேநோக்கம், `கட்சிக்குள் உறுப்பினராகவாவது தன்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்' என்பதுதான். இன்று மதுரையில் அவர் பேசும்போதும், `கட்சியில் நான் இணைய வேண்டும் அல்லது இணைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' எனப் பேசினார். `அவரது பேச்சுக்களை செயல் தலைவர் ஸ்டாலின் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக