திங்கள், 13 ஆகஸ்ட், 2018

அழகிரிக்கு திமுகவில் மீண்டும் பதவி இல்லை,...

மாலைமலர் : எந்த நெருக்கடி, யாரிடம் இருந்து வந்தாலும் சரி... எக்காரணம் கொண்டும் அழகிரியை தி.மு.க.வில் மீண்டும் சேர்க்க வேண்டாம் என்று அன்பழகன் திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) தி.மு.க. செயற்குழு கூட்டம் முதன் முறையாக சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. அதோடு தி.மு.க. மூத்த தலைவர்களுடன் நிர்வாக அமைப்பில் மாற்றம் செய்யப்படுவது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலினை தேர்வு செய்யும் பொதுக்குழு கூட்டத்தை அடுத்த மாதம் நடத்துவது பற்றி இறுதி முடிவுகள் நாளை எடுக்கப்பட கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தி.மு.க.வில் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்ட மு.க.அழகிரியை மீண் டும் கட்சியில் சேர்க்க கோரிக்கைகள் எழுந்துள்ளது பற்றியும் பேசப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. அவர் தென்மண்டல பொறுப்பாளர் பதவியை விரும்பவில்லை என்றும் மாநில அளவில் முக்கிய பொறுப்பை எதிர்பார்ப்பதாகவும் உறுதி செய்யப்படாத ஒரு தகவல் பரவியது.


மேலும் மு.க.அழகிரி மகனுக்கு முரசொலி அறக்கட்டளையில் இடம் அளிப்பது பற்றி ஆலோசனை நடந்து வருவதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி இருந்தது.

மு.க.அழகிரி தரப்பிலும் மு.க.ஸ்டாலின் தரப்பிலும் சிலர் சந்தித்து இது தொடர்பாக பேச்சு நடத்தி வருவதாக கூறப்பட்டது. ஆனால் யூகத்தின் அடிப்படையில் வெளியான இந்த தகவல்கள் எதிலும் அடிப்படை உண்மை இல்லை என்று தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். மு.க.அழகிரிக்கு தி.மு.க.வில் மீண்டும் பதவி கொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அந்த தி.மு.க. நிர்வாகிகள் உறுதிபட தெரிவித்தனர்.

இதுபற்றி தி.மு.க. வட்டாரங்களில் விசாரித்த போது, “தற்போது மு.க.ஸ்டாலினின் கவனம் எல்லாம் தி.மு.க. முன் உள்ள சவால்களை எதிர்கொள்வதை பற்றியதாகத்தான் உள்ளது. குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சி மீது தமிழக மக்களிடம் எழுந்துள்ள அதிருப்தியை ஒருமுகப்படுத்தி செயல்பட அவர் ஆலோசித்து வருகிறார். வேறு எந்த வி‌ஷயங்களுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை” என்றனர்.

இந்த நிலையில் மு.க. அழகிரியை மீண்டும் தி.மு.க.வில் சேர்க்க ஆலோசனை நடப்பதாக வந்த தகவலை கண்டு தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. அது மட்டுமின்றி அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என அவர் அறிவுரை வழங்கி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் அன்பழகனை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் அன்பழகன், “எந்த நெருக்கடி, யாரிடம் இருந்து வந்தாலும் சரி... குடும்பத்துக்குள் இருந்து நெருக்கடி வந்தாலும் சரி, எக்காரணம் கொண்டும் அழகிரியை தி.மு.க.வில் மீண்டும் சேர்க்க வேண்டாம்” என்று வலியுறுத்தி கூறினாராம்.

அன்பழகனின் அறிவுரை காரணமாக இப்போதைக்கு அழகிரி தி.மு.க.வில் சேர்க்கப்பட மாட்டார் என்று தி.மு.க. மூத்த தலைவர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது. இது தொடர்பாக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “இப்போது அழகிரியை கட்சியில் சேர்த்தால் குழப்பம் வந்து விடும். அமைதியாக போய் கொண்டிருக்கும் நிர்வாகம் சீர்கெட்டு விடும். அது பாராளுமன்ற தேர்தலுக்கு தி.மு.க. தயாராவதில் இடையூறை ஏற்படுத்தி விடக் கூடும். எனவே அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகே மீண்டும் தி.மு.க.வில் அழகிரியை சேர்ப்பது பற்றி ஆலோசிக்கப்படும்” என்றார்.

இந்த நிலையில் மு.க.அழகிரியும் பதவிக்காக தம்பியிடம் சண்டை போட வேண்டாம் என்ற மனநிலையில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள். தனது முக்கிய ஆதரவாளர்களில் சிலருக்கு மட்டும் பதவி பெற்றுக் கொடுக்க அவர் விரும்புவதாக சொல்கிறார்கள். எனவே அவரால் தி.மு.க.வில் எந்தவித சலசலப்பும் சர்ச்சையும் உருவாகாது என்று சொல்கிறார்கள்.

தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தனது பதவியை விட்டு கொடுக்கப் போவதாக முன்பு தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் பொதுச்செயலாளர் பதவியில் நீடிப்பார் என்று தெரிய வந்துள்ளது. எனவே நிர்வாக அமைப்பில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது.

இதை உணர்ந்தே அழகிரியும் பிரச்சனை உருவாக்காமல் அமைதியாக இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது ஆதரவாளர்களில் கே.பி. ராமலிங்கம், இசக்கிமுத்து போன்றவர்கள்தான் தொடர்ந்து அவர் பக்கம் உள்ளனர். மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மன்னன் உள்பட பலர் அழகிரி ஆதரவு நிலையில் இருந்து மாறி விட்டனர்.

தற்போது அழகிரிக்கு ஆதரவாக விரல் விட்டு எண்ணும் வகையில்தான் தீவிர ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்கள்தான் அழகிரிக்கு எப்படியாவது தி.மு.க.வில் மீண்டும் ஒரு முக்கிய பதவியை பெற்று விட வேண்டும் என்பதில் அவசரம் காட்டி வருகிறார்கள். இதற்காக அவர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.


அழகிரி ஆதரவாளர்களின் இந்த நடவடிக்கையை மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் மு.க.ஸ்டாலின் கையாண்டு வருகிறார். அழகிரி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் பரபரப்பு தகவல்களுக்கு தி.மு.க.வினர் யாரும் பதில் போடக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சி விவாதங்களிலும் தி.மு.க.வினர் பங்கேற்று எந்த கருத்தையும் சொல்லக் கூடாது என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட இன்னும் 80 நாட்கள் அவகாசம் உள்ளது. எனவே பதவிகள் குறித்து பேச அவகாசம் உள்ளது. ஆகையால் அழகிரிக்கு பதவி கொடுப்பது பற்றி இப்போதே பேச வேண்டியதில்லை” என்றார்.

பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவுரையைத் தொடர்ந்து தி.மு.க. மூத்த தலைவர்களும் அதே மனநிலைக்கு வந்துள்ளனர். இது அழகிரியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான இசக்கிமுத்துவுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. எனவே அவர் நேற்று மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை வந்துள்ளார்.

பொதுச்செயலாளர் அன்பழகனை சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளார். அவர் இதுபற்றி கூறுகையில், “அழகிரியை நான் மகான் என்று சொல்லவில்லை. அவரும் சில தவறுகள் செய்திருக்கலாம். ஆனால் மதுரை மண்டலத்தில் தி.மு.க. வெற்றி பெற அவர் ஆதரவு நிச்சயமாக அவசியமாகும். எனவே அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க வலியுறுத்துவேன்” என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக