செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

காவேரியில் உச்சகட்ட பரபரப்பு!

காவேரியில் உச்சகட்ட பரபரப்பு!    மின்னம்பலம்: திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து, நேற்று மதியம் முதலே அவர் சிகிச்சை பெற்று வரும் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர்.
மாலை 6.30 மணியளவில் அறிக்கை வெளியிட்ட காவேரி மருத்துவமனையும், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை உறுதிப்படுத்தியது. மருத்துவ சிகிச்சைகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு கருணாநிதியின் உடல்நிலை வழங்கும் ஒத்துழைப்பைப் பொறுத்தே கணிக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
அறிக்கை வெளியிட்ட சற்று நேரத்திலேயே திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சுப.வீரபாண்டியன் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் எனப் பலரும் மருத்துவமனைக்கு வந்தனர்.

ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், “கலைஞரின் உடல்நிலை குறித்து தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், மருத்துவமனையில் நேரில் நலம் விசாரித்து வர சொன்னார். அதன்படி ஸ்டாலினிடம் கலைஞரின் உடல்நிலை குறித்து விசாரித்தேன். மருத்துவ அறிக்கையின்படி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். கலைஞர் அவர்கள் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும்” என்று கூறினார்.

தொண்டர்கள் அதிகளவில் குவிந்ததால் மருத்துவமனையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆழ்வார்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. காவல் துறையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ‘எழுந்து வா தலைவரே’ என்று தொண்டர்கள் உணர்ச்சிப் பிழம்பாக இடைவிடாமல் முழக்கமிட்டபடியே இருந்தனர்.

இரவு 8.40 மணியளவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் பாஜக தமிழக தலைவர் தமிழிசையும் இருந்தார். ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நிதின் கட்கரி கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்காமலேயே திரும்பிச் சென்றார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மூத்த அரசியல் தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தேன். அவர் விரைவில் நலம்பெற வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சற்று நேரத்தில் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் கனிமொழி, பொன்முடி ஆகியோர் மீண்டும் மருத்துவமனைக்கு வந்தனர்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்றிருந்த திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் நேற்றிரவே விமானம் மூலம் சென்னை வந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக