செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

கேரள வெள்ளம்: 'தீவிர பேரிடர்' - மத்திய அரசு அறிவிப்பு

BBC : கேரளாவில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளத்தை 'தீவிர பேரிடர்' என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கேரளாவில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளம்/ நிலச்சரிவின் தீவிரம் மற்றும் பாதிப்பின் அளவை கருத்திற்கொண்டு, அதை 'தீவிர இயற்கை பேரிடர்' என்று அறிவிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கொச்சி விமான நிலையத்தில் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால், கொச்சிக்கு வரும் உள்நாட்டு விமானங்கள் கொச்சியிலுள்ள ஐஎன்எஸ் கருடா கப்பற்படை விமான தளத்தில் வந்திறங்க ஆரம்பித்துள்ளதாக இந்திய கப்பற்படையின் செய்தித்தொடர்பாளரின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.கேரளாவில் கடந்த பத்து நாட்களாக பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த வெள்ளத்தில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அதன் சுற்றுசுவர்கள் உடைந்து தண்ணீர் வெளியேறும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்டு 22ஆம் தேதி வரை கொச்சி சர்வதேச விமான நிலையம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொச்சி விமான நிலையத்தில் வெள்ள நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், விமான நிலையத்தின் ஓடுபாதை, வாகனங்கள் செல்லும் பாதை போன்ற பகுதிகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், கொச்சி விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவை வரும் 26ஆம் தேதி மதியம் இரண்டு மணிவரை செயல்படாது என்று அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 தற்போதைய நிலவரம் என்ன?
பருவமழை பெய்வது குறைந்துள்ளதால், வெள்ளப்பெருக்கால் பெரும் பாதிப்புக்குள்ளான கேரளாவில் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இன்னும் சில பகுதிகளில் வெள்ளம் காணப்பட்டாலும், இந்திய வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கையை விலக்கியுள்ளது,
வீடுகளின் கூரைகளில் தங்கியிருக்கும் மக்களை இந்திய விமானப்படை ஹெலிகாப்படர் மூலம் தூக்கி மீட்டு வருகின்றன. சென்றடைய முடியாத இடங்களில் உணவுப் பொருட்களை வானில் இருந்து போட்டு வருகின்றனர்.
350க்கு மேலானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோரை இன்னும் சென்றடைய முடியாத நிலை காணப்படுகிறது.
 


செங்கனூரில் 5 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதால் அதிக மீட்புப் ணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்குள்ள நிலைமையை தொலைக்காட்சியில் விவரித்த உள்ளூர் எம்.எல்.ஏ. சாஜி செரியன் மனம் உடைந்து அழுதார். இந்த மீட்பு பணிகளுக்கு தங்களின் படகுகளை மீனவர்கள் தந்து உதவி வருவதாக தற்போது கேரளாவிலுள்ள பிபிசியின் யோகிதா லிமாயே தெரிவித்திருக்கிறார்.
கடந்த 10 நாட்களுக்கும் மேல் கொச்சியில் மிகக்கடுமையாக இருந்த மழைப்பொழிவு குறைந்துள்ளது.
இடுக்கி, திருச்சூர், கண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக