வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

மல்லையாவுக்கு எதிரான லண்டன் வழக்கை பலவீனமாக்குகிறதா சிபிஐ...

Savukku : தலைமறைவான கோடீஸ்வரரான விஜய் மல்லையா, நாட்டை விட்டு வெளியேற அரசு நடவடிக்கை எடுப்பதற்கு முன், 2016 மார்ச்  2 ம் தேதி 36 சூட்கேஸ்களுடன் இந்தியாவை விட்டு பறந்த போது, கண்ணுக்குத்தெரியாத கை அவருக்கு உதவியதா?
சிபிஐ அவரை இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவந்து இங்குள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், இந்தப் புலனாய்வு அமைப்பு தனது வழக்கைத் தானே பலவீனப்படுத்தியிருக்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது.
மல்லையாவை ஒப்படைக்கவைப்பதற்கான வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த, மல்லையாவுக்கு எதிரான ஏழு முக்கிய சாட்சியங்களின் வாக்குமூலம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 161ஆவது பிரிவின் கீழ், காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர, 164ஆவது பிரிவின் கீழ் அல்ல. இந்தப் பிரிவின் கீழ், மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இது வேண்டுமென்றே செய்யப்பட்ட விடுபடல் என்று சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர். மல்லையா வழக்கறிஞர் இதைக் ‘கப்’பென்று பிடித்துக்கொண்டிருக்கிறார்.

161 பிரிவின் கீழான அறிக்கைகள், விசாரணையின்போது சாட்சியங்களிடம் இருந்து எதிர்பார்க்கக்கூடிய அறிக்கைகள் இவை எனத் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கை கவனத்தில் கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது. சுருக்கமாகச் சொல்வதானால், முதல் கட்ட விசாரணையில் இவை ஆதாரமாகக் கொள்ளப்படும். ஆனால், அரசு தரப்பு வாதத்தை நிரூபிக்க ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சியமாகக் கருதப்படாது. இந்திய நீதிமன்றங்கள், குற்றச்சாட்டு பதிவு செய்யலாமா எனத் தீர்மானிக்க அல்லது ஜாமீன் வழங்கலமா எனத் தீர்மானிக்க இந்த அறிக்கைகளைப் பயன்படுத்துகின்றனர். குற்ற வழக்கு விசாரணைகளில் இவை சாட்சியமாக கருதப்படுவதில்லை. அதாவது சாட்சிக் கூண்டில் பதிவு செய்யப்படும் வாக்குமூலத்திற்கு நிகராகக் கருதப்படுவதில்லை. 164 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட அறிக்கை, வாக்குமூலமாக அமைந்தாலும், சாட்சியமாகக் கருத வாய்ப்புள்ள நிலையிலேயே அமைகிறது. விசாரணையின்போது சாட்சிக் கூண்டில் இவை மீண்டும் சொல்லப்படும்போதே இவை சாட்சியமாகக் கருதப்பட முடியாது.
இருப்பினும், மாஜிஸ்திரேட் முன்னிலையில் வழங்கப்பட்ட வாக்குமூலத்திற்குக் கூடுதல் மதிப்பு இருப்பதாகக் குற்றவியல் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏனெனில் விசாரணையின்போது இவற்றுக்கு ஆதாரம் இல்லை எனில் அல்லது மாறாகச் சொல்லப்பட்டால் அது பொய் வாக்குமூலமாக அளித்தற்கான நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. முக்கியமான வழக்குகளில், முக்கிய சாட்சியங்களின் வாக்குமூலம் இந்தப் பிரிவில் பதிவு செய்யப்படுவதாகவும், இவை வெளிநாட்டு நீதிமன்றங்களிலும் கூடுதல் கனம் கொண்டவையாக அமையும் எனவும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
164ஆவது பிரிவின் கீழ் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய சிபிஐ தவறியதை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த பூஷன் கடுமையாகச் சாடுகிறார். தி வயர் இதழிடம் பேசியவர், மல்லையாவுக்கு உதவுவதற்காகவே சிபிஐ வேண்டுமென்றே இழைத்துள்ள தவறு இது என்கிறார். “மல்லையாவுக்கு உதவியாக இருந்துகொண்டே, அவரைப் பிடிக்க முயற்சிப்பது போல சிபிஐ பாவனை செய்கிறது. அவருக்குத் தகவல் அளிக்கப்பட்டு, இந்தியாவிலிருந்து வெளியேற உதவி செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் 36 சூட்கேசுடன் பறந்து செல்ல முடியுமா என்று சொல்லுங்கள். சிபிஐ அதிகாரிகள் மற்றும் அவர்கள் அதிக கட்டணத்திற்கு அமர்த்தியுள்ள வழக்கறிஞர்களுக்கு, காவல் துறை அதிகாரிகள் முன் பதிவு செய்யப்பட்ட கையெழுத்திடாத வாக்குமூலத்திற்கும், மாஜிஸ்திரேட் முன் மேற்கொள்ளப்பட்ட வாக்குமூலத்திற்குமான சட்டபூர்வ கனம் என்னவென்று தெரியாது என்பதை நம்ப முடியாது”.
இந்த தவறு குறித்து பிரசாந்த் பூஷனின் கருத்துக்களை குறிப்பிட்டு சிபிஐக்கு தி வயர் சார்பில் கேள்விகள் அனுப்பி வைக்கப்பட்டது. திரு மல்லையாவை ஒப்படைக்க வைக்கும் வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் வேறு எந்தத் தகவலும் அளிக்க முடியாது என்று மட்டும் சிபிஐ தெரிவித்துள்ளது.
பூஷன் இதை முழு அபத்தம் என்கிறார். “இது எப்படி நீதிமன்ற அவமதிப்பாகும்? நீங்கள் கேட்ட தகவல் வாக்குமூலம் பதிவான பிரிவுகள் தொடர்பானது. நீரவ் மோடியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டபோது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காமல் அவரது பிரைவசியை மோடி அரசு பாதுகாத்து, ரெட் கார்னர் அறிவிப்பு வெளியாகாமல் அவர் பயணம் செய்ய வழி செய்தது. மல்லையா, நீரவ் மோடியும் மெகுல் சோக்ஸியும் பயனடைவதற்காக நிறைய ஓட்டைகளை அடைக்காமல் விட்டிருக்கின்றனர்” என்கிறார் பூஷன்.
மல்லையா வழக்கின் ஒவ்வொரு விசாரணைக்கும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா தலைமையிலான சிபிஐ குழு இங்கிலாந்து செல்கிறது. லண்டன் நீதிமன்றத்தில் நான்கு தினங்களுக்கு முன் நடைபெற்ற விசாரணையில், அஸ்தனா, ரூ.9,000 கோடி மோசடிக்காக இந்தியாவில் விசாரணையை எதிர்நோக்கியுள்ள, தலைமறைவாக இருக்கும் 62 வயதான மல்லையாவுடன் கைகுலுக்குவதைப் பார்க்க முடிந்தது.
கடந்த ஜனவரியில் இதே நீதிமனறத்தில் விசாரணை நடைபெற்றபோது, மல்லையா வழக்கறிஞர் கிலாரி மாண்டகோமரி, சாட்சியம் அல்லது ஆவணங்களை ஏற்க ஆட்சேபம் தெரிவித்ததோடு, 161 பிரிவின் கீழ் பதிவான வாக்குமூலம் பற்றியும் கேள்வி எழுப்பினார். 2017 டிசம்பரிலும், இதே விஷயம் மாண்டகோமரி மற்றும் மல்லையாவின் மற்றொரு சட்ட வல்லுனரால் எழுப்பப்பட்டது.
இந்த பிரச்சினை அதன் போக்கில் செல்ல சிபிஐ அனுமதிக்கிறதா அல்லது மல்லையாவை ஒப்படைக்க வைக்க 161 பிரிவு அறிக்கை போதும் என நினைக்கிறதா என்பது ஆய்வுக்குரியது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அவரை ஒப்படைக்கலாமா, வேண்டாமா எனும் கேள்வியைத்தான் பரிசீலிக்கிறதே தவிர, அவரது குற்றத்தின் தன்மையை அல்ல. இருந்தாலும், முக்கிய சாட்சியங்களின் வாக்குமூலம் 164 பிரிவின் கீழ் பதிவானதை உறுதி செய்து மல்லையா வழக்கறிஞரின் கேள்வியை சிபிஐ தவிர்த்திருக்கலாம் என்பதை மறுக்க முடியாது. இந்த தவறு தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கப்பட்டது திகைக்க வைக்கிறது என்கின்றனர் வழக்கறிஞர்கள்.
குற்றவியல் வழக்கு நடைமுறையில் பொதுவாக 161 பிரிவில்தான் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவது வழக்கம். 164 பிரிவு தேவை என்றால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது (பாலியல் தாக்குதல் வழக்கில் மட்டும் இவை கட்டாயம்) என்றாலும், மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவான எந்த ஒரு வாக்குமூலமும் இல்லாதது மல்லையா வழக்கில் ஒரு பலவீனமாக அமைகிறது. இந்த கட்டத்தில் கூட இதை சரி செய்ய சிபிஐ முயற்சி செய்யாதது திட்டமிட்டு செய்யப்பட்டதாக கருத இடமளிக்கிறது.
“குற்றம்சாட்டப்பட்டவரை ஒப்படைக்கக் கோரும் வழக்கில், புலனாய்வு அமைப்பு சிறந்த சாட்சியங்களை, வெளிநாட்டு நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவற்றைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த நோக்கில் பார்த்தால் சிபிஐ இன்னமும் கவனமாக இருந்திருக்க வேண்டும். மல்லையா வழக்கறிஞர்கள் தெரிவிக்கக்கூடிய ஆட்சேபணையை உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும்” என்று தில்லி வழக்கறிஞர் சரீம் நவீத் கூறுகிறார்.
“இது மடத்தனம் என ஒப்புக்கொள்ள மாட்டேன். அரசியல் எஜமானர்கள் சொல்வதைச் செய்யும் கூண்டுக் கிளியின் செயல் இது. அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுனர்கள் குழு யூகே சொல்ல கோடிகளை செலவிட்டிருக்கிறோம். சாட்சியம் மற்றும் வாக்குமூலம் பதிவில் அடிப்படையான விஷயங்களைக்கூடச் செய்யாதபோது இது ஏன் என்று தெரியவில்லை” என்று சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
“இதில் எனக்கு எந்த வியப்பும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கும்போது இது எதிர்பார்க்கக் கூடியதுதான்” என்கிறார் பூஷன்.
ஸ்வாதி சதுர்வேதி
நன்றி; தி வயர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக