வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

அதிமுக நிர்வாகி மோகன் கலைஞர் இறுதி நிகழ்வு கூட்ட நெரிசல் உயிரழந்தார்!

உயிரிழந்த அதிமுக பிரமுகர் மோகன்
tamilthehindu :திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மரணமடைந்தார். மறுநாள் அதிகாலை அவரது உடல் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. காலையிலிருந்தே அவரது உடலைக்காண லட்சக்கணக்கான மக்கள் ராஜாஜி ஹாலில் குவிந்தனர்.
கலைஞரின் முகத்தை பார்த்துவிட வேண்டும் என்கிற வேட்கையில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். பிரதமர் வந்துச்சென்ற பின்னர் தடுப்புகளை தாண்டி முண்டியடித்துக்கொண்டு பொதுமக்கள் முன்னேறியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 4 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த 4 பேரில் 3 பேர் அடையாளம் தெரிந்தது. ஒருவர் அடையாளம் மட்டும் தெரியாமல் இருந்தது. அவரது புகைப்படத்தை போலீஸார் பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தனர்.
இதற்கிடையே வேலூர், கஸ்பா பகுதியை சேர்ந்த மோகன்(65) என்பவர் திரும்பி வரவில்லை. அவர் என்ன ஆனார் என்று உறவினர்கள் தேடி வந்த நிலையில் பத்திரிகைகளில் வந்த புகைப்படத்தை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். மோகனின் படம் தான் அது.

நான்காவதாக உயிரிழந்த நபர் தங்கள் உறவினர் மோகன் தான் என்று சென்னை வந்த உறவினர்கள் தெரிவித்தனர். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மோகன் அதிமுக நிர்வாகி ஆவார். வேலூர் கஸ்பா பகுதி அதிமுக பகுதி துணை செயலாளராக இருந்தார்.
அண்ணா காலத்திலிருந்து திமுகவிலிருந்த மோகன் எம்ஜிஆர் நீக்கப்பட்டு அதிமுகவை தொடங்கிய பின்னர் அதிமுக உறுப்பினர் ஆனார். தொடர்ந்து அதிமுகவில் இருந்த அவர் தீவிர திமுக எதிர்ப்பாளர்.
ஆனால் கலைஞர் மறைந்த அன்று துக்கத்திலிருந்த அவர் வீட்டில் உள்ளவர்கள் தடுத்தும் கேளாமல் திராவிட இயக்கத்தின் கடைசி மூத்த தலைவர் மறைந்துள்ளார், ஒரு காலத்தில் எனக்கும் அவர் தலைவர்தான் அவர் முகத்தை கடைசி தடவையாக பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று ரெயில் ஏறி சென்னை வந்துள்ளார்.
கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அவரும் அதில் சிக்கி பலியானார். உயிரிழந்த மோகன் தீவிர திமுக எதிர்ப்பாளர், அதிமுகவில் நிர்வாகியாக இருந்தாலும் கலைஞர்  மீது கொண்ட பற்றின் காரணமாக அஞ்சலி செலுத்த வந்தபோது இறந்துள்ளது அப்பகுதி கட்சியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மோகனுக்கு பார்வதி என்ற மனைவியும், பாலாஜி, இந்துமதி என்ற மகனும் மகளும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக